வேட்டையன் – விமர்சனம்

நடிப்பு: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகிணி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், ரக்‌ஷன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: த.செ.ஞானவேல்

ஒளிப்பதிவு: எஸ்.ஆர்.கதிர்

படத்தொகுப்பு: ஃபிலோமின் ராஜ்

இசை: அனிருத் ரவிச்சந்தர்

தயாரிப்பு: ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ சுபாஸ்கரன்

வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், சதீஷ் (எய்ம்)

அசோக் செல்வன் நடித்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான போதிலும், சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையிலும், சினிமா பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும், தமிழக அரசிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிக உயர்ந்த அங்கீகாரம் பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேலும், தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத ரூ.700 கோடி வசூலை வாரிக் குவித்து மகத்தான சாதனை படைத்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மிரட்டிய ரஜினிகாந்தும் கைகோர்த்திருப்பதாலும், “மனசிலாயோ…” பாடலுக்கு பட்டிதொட்டி எங்கும் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் டீசர், டிரெய்லர் ஏற்படுத்தியுள்ள காரசார விவாதங்கள் ஆகியவை காரணமாகவும் உலக அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம், ரஜினி ரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் அதியன் (ரஜினிகாந்த்). போலீஸைத் தாக்க முயலும் ரவுடிகளை என்கவுண்ட்டர் செய்வதிலும், போலீஸைத் தாக்க முயலாவிட்டாலும் அவர்களுக்கு ’உடனடி தண்டனை’ வழங்க வேண்டும் என்பதற்காக ‘போலி என்கவுண்ட்டர்’ செய்வதிலும் ஸ்பெஷலிஸ்ட்டாகத் திகழ்கிறார் அதியன். இதனால் வெகுமக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கும் இவருக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட் வைத்திருக்கும் செல்லப் பெயர் ‘வேட்டையன்’.

அதியன் தன் மனைவி தாராவுடன் (மஞ்சு வாரியர்), “மனசிலாயோ…” என்று ஆனந்தமாக பாடி ஆடிக்கொண்டு, நாகர்கோயிலில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். குற்றவாளிகள் என்றாலும் அவர்களைக் கொல்வது பாவம் என்று கருதும் மனைவி தாரா, பெற்றோரின் பாவம் பிள்ளைகளைச் சேரும் என்று நம்புவதால், தனக்கு குழந்தையே வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.

இதே மாவட்டத்தில், சாரல்மேடு என்ற மலைகிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார் சரண்யா (துஷாரா விஜயன்). மாணவர்களிடமும், அவர்களது பெற்றோர்களிடமும் ‘நல்ல ஆசிரியை’ என்ற பெயர் பெற்றவர். இவரது பள்ளியில், கஞ்சா வியாபாரியான குமரேசன் என்ற தாதா, ஏராளமான கஞ்சா மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டுபிடித்து அதிர்ச்சி அடையும் சரண்யா, இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதியனுக்கு, துணிச்சலாக தன் பெயரிலேயே புகார் கடிதம் அனுப்புகிறார்.

இக்கடிதத்தைப் படிக்கும் அதியன், முன்னர் திருடனாக இருந்து பின்னர் தன்னால் திருத்தப்பட்டு தற்போது தன்னிடமே உதவியாளனாகப் பணிபுரியும் பேட்ரிக் என்ற பேட்டரியின் (ஃபகத் ஃபாசில்) நவீன தொழில்நுட்ப உதவியுடன் தாதா குமரேசன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவனையும், அவனது அடியாட்களையும் சுட்டுக் கொல்கிறார். அவனது கஞ்சா நெட்வொர்க்கையும் முற்றிலுமாக அழிக்கிறார். இதனால் அதியனையும், இதற்கு காரணமான ஆசிரியை சரண்யாவையும் குமரி மாவட்ட மக்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

இதன்பின் அதியனும், சரண்யாவும் ஒரு தந்தை – மகள் போல அன்னியோன்யமாக பழகி வருகிறார்கள். “உனக்கு என்ன வேணும்? கேள்” என்று அதியன் கேட்க, “எனக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படிக்கணும். அதற்கு சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வேணும்” என்று சரண்யா சொல்ல, அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிறார் அதியன்.

சென்னை வரும் ஆசிரியை சரண்யா, இங்குள்ள ‘சிங்காரவேலர் அரசு மேல்நிலைப் பள்ளி’யில் பணியைத் தொடர்கிறார். மாலையில் எல்லோரும் போனபிறகு கடைசியாக பள்ளியைவிட்டுப் போகும் வழக்கம் உள்ள இவர், ஒருநாள் மாலை, பள்ளியில் தனியாக இருக்கும்போது ஒரு மர்ம நபரால் இரும்புத் தடி கொண்டு அடித்து வீழ்த்தப்படுகிறார். ரத்தம் வழிந்தோட உயிருக்குப் போராடும் நிலையிலும் அவனால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். அவரது அலங்கோலத்தை ஆபாச வீடியோவாகவும் தன் செல்போனில் பதிவு செய்துகொள்கிறான் அந்த மர்ம நபர்.

இக்கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்குகிறது. சரண்யாவின் கொலைக்கு நீதி வேண்டி ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் பள்ளிகளை இழுத்து மூடிவிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கிறது. “காமக் கொடூரனான அந்த கொலையாளியைக் கண்டுபிடித்து சுட்டுக் கொல்ல வேண்டும்” என்று பொதுமக்கள் ஆவேசமாக கொந்தளிக்கிறார்கள். இந்த விவகாரத்தை புலனாய்வு செய்யும் பொறுப்பை ஹரீஷ் (கிஷோர்) என்ற போலீஸ் அதிகாரியிடம் டி.ஜி.பி ஒப்படைக்கிறார்.

ஹரீஷ், ரூபா (ரித்திகா சிங்) என்ற பெண் போலீஸ் அதிகாரி உதவியுடன் துரிதகதியில் துப்புத் துலக்கி, ’குணா என்ற குப்பத்து இளைஞன் தான் குற்றவாளி’ என்று முடிவு செய்து, அவனை வீடு புகுந்து கைது செய்கிறார். ஆனால், கைதான குணா போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்று விடுகிறார்.

நாகர்கோயிலில் இருந்துகொண்டு இவற்றையெல்லாம் உன்னிப்பாக கவனித்துவரும் அதியன், ’குற்றவாளி குணாவை விடக்கூடாது’ என்ற முடிவுடன் டி.ஜி.பி.யை அணுக, குணாவை ஏழு நாட்களுக்குள் கண்டுபிடித்து என்கவுண்ட்டர் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிஜிபி சிறப்பு அனுமதி வழங்க, “ஏழு நாள் தேவையில்லை. மூணே நாளில் கதையை முடிப்பேன்” என்று துப்பாக்கியைக் கையில் எடுக்கிறார் அதியன்.

போலீஸின் என்கவுண்ட்டருக்கு பயந்து குணா நடுக்கடலில் ஒரு படகுக்குள் ஒளிந்திருப்பதை, தனது உதவியாளனான பேட்ரிக் என்ற பேட்டரியின் உதவியால் கண்டுபிடிக்கும் அதியன், மற்றொரு படகில் பயணித்து, குணாவை சுற்றி வளைத்து, அவர் சரணடைய முன்வந்தபோதிலும், அதை ஏற்க மறுத்து சுட்டுக் கொல்கிறார். இதன் மூலம் சரண்யாவின் கொலைக்கு நீதி வழங்கிவிட்டதாக நிம்மதி அடைகிறார். மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.

இதற்குப்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதியும், மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், என்கவுண்ட்டர் எதிர்ப்பாளருமான சத்யதேவ் (அமிதாப் பச்சன்) மூலம் ஓர் அதிர்ச்சியூட்டும் உண்மை அதியனுக்குத் தெரிய வருகிறது. புலனாய்வு அதிகாரி ஹரீஷினால் குற்றவாளி என சுட்டிக்காட்டப்பட்டு, தன்னால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் குணா உண்மையில் அப்பாவி; அவருக்கும் சரண்யா கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தான் அது. உடைந்துபோகிறார் அதியன். அநியாயமாக ஒரு நிரபராதியை என்கவுண்ட்டர் செய்துவிட்டோமே என்று குமுறுகிறார்.

உண்மையில் சரண்யாவை கொடூரமாகக் கொன்ற கொலையாளி யார்? யாருடைய உத்தரவின் பேரில், என்ன காரணத்துக்காக இக்கொலை செய்யப்பட்டது? இக்கொலைக்குப் பின்னணியில் இருக்கும் குற்றவாளியை அதியனால் நெருங்க முடிந்ததா? அக்குற்றவாளியை அதியன் என்கவுண்ட்டர் செய்தாரா? அல்லது கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் அட்டகாசமாக விடை அளிக்கிறது ‘வேட்டையன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

போலீஸ் சூப்பிரண்டு அதியன் என்ற வேட்டையனாக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கும் 58 வயது போலீஸ் சூப்பிரண்டாக வரும் ரஜினிக்கு காக்கி வேடம் அல்வா சாப்பிடுகிற மாதிரி. கடமை உணர்வும் சமூக அக்கறையும் கொண்ட கதாபாத்திரத்தில் கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் அசால்ட்டாக நடித்திருக்கிறார். கண்ணாடியைத் தூக்கிப் போட்டு, “குறி வச்சா இரை விழணும்” என்று பஞ்ச் பேசி மாஸ் காட்டி அவ்வப்போது அப்ளாஸை அள்ளியிருக்கிறார். ஒரு நிரபராதியை தவறாக சுட்டுக் கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வில் அவர் கலங்குவதும், என்கவுண்ட்டர் மோகத்திலிருந்து விலகுவதும் கிளாஸ்.

ஓய்வு பெற்ற நீதிபதியாக, மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக, போலீஸ் என்கவுண்ட்டருக்கு எதிரானவராக சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். ரஜினியின் என்கவுண்ட்டர் மயக்கத்தை விமர்சித்து, தெளிவை ஏற்படுத்தும் வல்லமை மிக்க இக்கதாபாத்திரத்தில் நடிக்க தான் மட்டுமே பொருத்தமானவர் என்பதை தனது நிதானமான, அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பால் நிரூபித்து ஸ்கோர் செய்திருக்கிறார் அமிதாப்.

முதலில் சைபர் கிரைம் திருடனாக இருந்து, பின் திருந்தி, ரஜினியின் உதவியாளனாக இருக்கும் பேட்ரிக் என்ற ‘பேட்டரி’ கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில், ’நடித்திருக்கிறார்’ என்று சொல்வதைவிட ‘பட்டையைக் கிளப்பியிருக்கிறார்’ என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். என்ன ஓர் அற்புதக் கலைஞன் அய்யா…! குறும்பாகவும், புத்திசாலித்தனமாகவும் அவர் அடிக்கும் கவுண்ட்டர்கள் திரையரங்கையே சிரிப்பால் அதிரச் செய்கின்றன. கடைசியாக ரஜினியிடம், “உங்களை ஒருமுறை கட்டிப் பிடிக்கலாமா?” என்று அவர் கேட்பதும், அதன்பின் நிகழும் நிகழ்வும் அவரது கதாபாத்திரத்துக்கு அழிவில்லா அமரத்துவத்தைக் கொடுத்துவிடுகிறது. பாராட்டுகள்.

ரஜினியின் மனைவியாக தாரா என்ற கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். “மனசிலாயோ” பாடலுக்கு ஆட்டம், தன்னை கடத்தவரும் ரவுடிகளுக்குப் பாடம் என நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சமூகப் பொறுப்புணர்வு உள்ள ஆசிரியை சரண்யாவாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். பெயர் சொல்லும் கதாபாத்திரம். வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.

பெண் போலீஸ் அதிகாரி ரூபாவாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார். சுற்றியிருக்கும் ரவுடிகளை அவர் ‘நாக் அவுட்’ செய்கிற காட்சியில், திரையரங்கில் விசில் பறக்கிறது.

‘கோச்சிங்’ என்ற பெயரில் ஏழை மாணவர்களிடம் கொள்ளை அடிக்கும் ’நுழைவுத்தேர்வு அகாடமி’யின் உரிமையாளராக நடராஜ் என்ற கதாபாத்திரத்தில் வரும் ராணா டகுபதி கார்ப்பரேட் வில்லனாக ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவர்கள் தவிர போலீஸ் அதிகாரி ஹரீஷாக வரும் கிஷோர், கார்ப்பரேட் அதிகாரி ஸ்வேதாவாக வரும் அபிராமி, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி நசீமாவாக வரும் ரோகிணி உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

’ஜெய்பீம்’ மூலம் போலீஸ் நிலைய லாக்கப் மரணம் பற்றிய உண்மைக் கதையைத் தழுவி அதை உணர்வுபூர்வமாகவும், ஜனரஞ்சமாகவும் சொல்லி வெற்றி பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல், இப்படத்தில் சர்ச்சைக்குரிய போலீஸ் ‘போலி என்கவுன்ட்டர்’ பிரச்னையையும், கொள்ளை லாபம் ஈட்டும் வியாபாரமாக மாறிப்போன ’கோச்சிங் கிளாஸ்’ விவகாரத்தையும் கையிலெடுத்துப் பேசியிருக்கிறார். ‘தாமதமாக வழங்கும் நீதி அநீதி’ என்பது போல, முறையாக விசாரிக்காமல் ’அதிவேகமாக வழங்கும் நீதியும் அநீதி தான்’ என்ற மனித உரிமைக் கருத்தை, சமூகத்தின் பொதுப்புத்தியில் அறைகிற மாதிரி உரக்கச் சொல்லியிருக்கிறார். அதேபோல் அனைவருக்கும் பொதுவான கல்வி, அனைவருக்கும் பொதுவான சட்டம், சமத்துவம், சமூகநீதி போன்ற உயர்ந்த லட்சியங்களையும் ஆணித்தரமாக எடுத்து வைத்திருக்கிறார். இவற்றையெல்லாம் ரஜினியின் சூப்பர் ஸ்டார்’ இமேஜை துளியளவும் சேதப்படுத்தாமல், அவரது ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் அளவுக்கு தீனி போடும் அம்சங்களுடன், கதையின் போக்கிலேயே சொல்லியிருப்பது சிறப்பு. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், கம்பி மேல் நடப்பது போல் மிகவும் எச்சரிக்கையாக திரைக்கதை அமைத்து, நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை திறம்பட வேலை வாங்கி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஞானவேல். இம்முயற்சியில் அவர் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறார். வாழ்த்துகள்.

அனிருத் இசையில் “மனசிலாயோ…” பாடல், படம் வெளியாவதற்கு முன்பே ஹிட்டடித்துவிட்டது. படத்திலும் அது பட்டையைக் கிளப்பியிருக்கிறது. பின்னணி இசையிலும் பின்னியெடுத்திருக்கிறார் அனிருத்.

 எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் படத்தொகுப்பு, சக்தி வெங்கட்ராஜின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இப்படத்தை நேர்த்தியாகவும் பிரமாண்டமாகவும் காட்டியிருப்பதோடு, இயக்குநரின் வெற்றிக்கு பக்கபலமாகவும் இருந்துள்ளன.

‘வேட்டையன்’ – அனைத்துத் தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு களிக்கத் தக்க திரைவிருந்து! உண்டு மகிழுங்கள்!