“இது நானே எதிர்பார்க்காத ஒன்று!” – ‘வேட்டையன்’ வெற்றி விழாவில் இயக்குநர் த.செ.ஞானவேல்
”வேட்டையன்’ திரைப்படத்தின் வெற்றி, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்களைத் தாண்டி, குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்க்கிறார்கள். இது நானே எதிர்பார்க்காத ஒன்று” என்று இயக்குநர் த.செ.ஞானவேல் கூறியுள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த (அக்டோபர்) 10ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. அனிருத் இசையமைத்து உள்ளார்.
கதை, வசனம், நடிப்பு, பாடல்கள், மேக்கிங் என சகல அம்சங்களும் ஜனரஞ்சகமாய் அமைந்திருப்பதால் இப்படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, அனைத்து தரப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் பாக்ஸ் ஆபீசிலும் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதுவரை வசூலில் உலக அளவில் ரூ.239 கோடியையும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.99 கோடியையும் தாண்டியுள்ள இப்படம் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் விரைவில் சாதனை இலக்கைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘வேட்டையன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் படக்குழுவினருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சுவையான விருந்து வழங்கப்பட்டது. இயக்குநர் த.செ.ஞானவேல் மனநிறைவுடன் தானே உணவை பரிமாறினார்.
அதுபோல, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரித்திகா சிங்கும் மலர்ந்த முகத்துடன் உணவு பரிமாறினார்.
இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல், ”வேட்டையன்’ திரைப்படத்தின் வெற்றி, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்களைத் தாண்டி, குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து இந்த படத்தை பார்க்கிறார்கள். இது நானே எதிர்பார்க்காத ஒன்று” என்றார்.
‘வேட்டையன்’ இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்டதற்கு, “வேட்டையன் படத்தில் ரஜினி சாரின் கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கலாம் என ஐடியா உள்ளது. அதை ’வேட்டையன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கலாம் என நினைக்கின்றேன். ரஜினி சார் இதற்கு ஓகே சொன்னால் ’வேட்டையன்’ படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வெளியாகும்” என்றார் இயக்குநர் த.செ.ஞானவேல்.