ஒரு கலவியல் தொழிலாளியின் சுயசரிதை ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’
ஆர்.புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.முத்துக்குமார் தயாரித்து, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள படம் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’. தற்போது திரைக்கு வந்துள்ள இந்த படத்தில் வெண்ணிலாவாக புதுமுகம் சமஸ்தி நடித்துள்ளார். நாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் மிதுனா வாலியா, ஆர்.எஸ்.சிவாஜி, ரவிசங்கர், சுரேஷ், அன்புமொழி, மேக்கப் கோதண்டபாணி, ஷகீலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டு, சிறுமிகளுக்கு ஹார்மோன் ஊசிகளைப் போட்டு, அவர்களை பெரிய பெண்களாக மாற்றி, கலவியல் தொழிலில் ஈடுபடுத்தும் அக்கிரமத்தை இப்படத்தின் கதையாக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குனர் ஆர்.முத்துக்குமார்..
இது பற்றி இயக்குனர் கூறுகையில், “ஒரு பெண் எந்த தொழிலையும் செய்யலாம். ஆனால் கலவியல் தொழில் செய்யக் கூடாது. மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் அந்தத் தொழிலை அங்கீகரித்தது தவறு. காலையில் இந்தத் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் மறுநாள் விடியும் வரைகூட இடைவெளி இல்லாமல் ஒரு மிஷின் போல பயன்படுத்தப்படுகிறாள். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தான் இந்த படத்தை எடுத்திருக்கிறேன்.
“நிர்பந்தத்தின் பேரில் விலை மாதுவாக மாற்றப்பட்ட ஒரு அபலைப் பெண் தன் சுயசரிதையை கூறும் விதமாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் இருக்கும் அந்த பெண், தனது மகள் தவறிக்கூட இந்தத் தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால், அதையும் மீறி அவரது மகள் வந்துவிட, போராட்டத்தை முன்னெடுக்கிறார். அந்த அபலைப் பெண்களை அத்தொழிலில் இருந்து மீட்டெடுத்து எப்படி புனர்வாழ்வு கொடுக்கிறார் என்பது கதை.
”கடவுள்களும், மதங்களும் அதிகமாக உள்ள இந்தியாவில்தான் கலவியல் தொழிலும் எய்ட்ஸ் நோயும் அதிகமாக உள்ளது என்பதை மையமாக கொண்டு பிரத்யேக பாடல் எழுதப்பட்டு, கலவியல் தொழில் நடக்கும் முக்கிய நகரங்களில் படமாக்கப்பட்டு உள்ளது” என்றார்.
படத்தின் ஹைலைட் என்னவென்றால், செக்ஸ் சாமியார் நித்யானந்தாவை நினைவூட்டும் சர்வானந்தா என்ற கதாபாத்திரத்துக்கு, நடிகை ரஞ்சிதாவை நினைவூட்டும் கதாபாத்திரம் “பணிவிடை” செய்யும் காட்சிகள் – சன் டிவி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய “பணிவிடை” காட்சிகள் – அப்படியே கேமராக்கோணம் மாறாமல் எடுக்கப்பட்டுள்ளதாம்.
துணிச்சலான கதையம்சம் கொண்ட படங்களை தயங்காமல் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள், ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’ படத்தையும் நிச்சயம் வரவேற்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறது படக்குழு.