மீண்டும் ஒரிஜினல் கபடி – ’வெண்ணிலா கபடி குழு 2’
2009ஆம் ஆண்டு கபடி போட்டியை பிரதானப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்து எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து பெரும் வெற்றிபெற்ற படம் “வெண்ணிலா கபடி குழு”. இப்படத்தின் மூலம் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் புரோட்டா சூரி, இயக்குனர் சுசீந்திரன் ஆகியோருக்கு தமிழ் சினிமா உலகில் அங்கீகாரம் கிடைத்தது.
தற்போது இயக்குனர் சுசீந்திரனின் மூலக்கதையில், இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில் புதுப்பொலிவுடன் “வெண்ணிலா கபடி குழு 2” திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்துக்காக கபடி விளையாட்டு பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
”1987ஆம் ஆண்டில் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிக விமர்சையாக திருவிழா போல் கபடி விளையாட்டுப் போட்டியை கொண்டாடும் நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வந்துள்ளோம். மேலும், முதல் பாகத்தில் நடித்த புரோட்டா சூரி, அப்புகுட்டி என பல நடிகர்கள் இரண்டாம் பாகத்திலும் நடித்தது இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது” என்கிறார் இயக்குனர் செல்வசேகரன்.
இப்படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளார். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அற்புதம் சினிமாஸ் சார்பாக பூங்காவனம், ஆனந்த் தயாரித்துள்ள இப்படத்தை கருப்பன், இரும்புத்திரை, தர்மதுரை, அண்ணாதுரை படங்களின் வினியோகஸ்தர் பிக்சர் பாக்ஸ் அலெக்ஸாண்டர் உலகமெங்கும் வெளியிடுகிறார்.
நிஜ கபடி வீரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்ட மின்னொலி கபடி போட்டியை 8 நாட்கள் தொடர்ந்து தத்ருபமாக படமாக்கியுள்ளார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக “வெண்ணிலா கபடி குழு 2” படம் அமையும்.