லயோலா கல்லூரி கண்காட்சி சர்ச்சை: பாஜக மீது வேல்முருகன் குற்றச்சாட்டு
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கை:-
சென்னை லயோலா கல்லூரியில் 6-வது ஆண்டாக ‘வீதி விருது விழா’ கடந்த 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் மாணவர் அரவணைப்பு மையமும், மாற்று ஊடக மையமும் சேர்ந்து இதனை நடத்தியுள்ளன. கல்லூரியின் கலை இலக்கியப் பிரிவு, தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் அமைப்பு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தன்னார்வ கலைஞர்கள் சங்கம் ஆகியவையும் இதற்கு ஒத்துழைத்தன.
5,000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில் தமிழக அமைச்சர் ஒருவரும் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.
விழாவையொட்டி இயற்கை உணவுக் கண்காட்சி மற்றும் ஓவியக் கண்காட்சியும் நடத்தப்பட்டன. மதத்தின் பெயரால் வன்முறை, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல தலைப்புகளில் ஓவியங்கள் இடம்பெற்றன. சமூக செயற்பாட்டாளர்களை மத்திய பாஜக அரசு நசுக்குவதை விளக்கும் ஓவியங்களும் இருந்தன.
ஆனால், அந்த ஓவியங்களுக்கு பாஜக தலைவர்கள் மட்டும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘பாரத மாதாவை #MeToo என குறிப்பிட்டு ஓவியம் வரைந்ததைக் கண்டு ரத்தம் கொதிக்கிறது; இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்’ என்றார். பாஜகவின் தேசிய செயலரான ஹெச்.ராஜா, இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று டிஜிபி அலுவலகம் சென்று கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்தார்.
இந்து மதம் மற்றும் தேசத்தின் மீது தாக்குதல் என்று சொல்லும் பாஜகவினருக்குச் சொல்கிறோம்: இந்து என்பது தமிழ்நாட்டில் ஒரு பொது சொல் அவ்வளவுதான்; அரசமைப்புச் சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. அப்படியிருக்க, பச்சைப் பொய்யை பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருவதேன்?
தேசத்தின் மீது தாக்குதல் என்கிறீர்களே, தேசம் என்றால் பொருளென்ன? தமிழ் இலக்கணத்தில் ‘இடவாகுபெயர்’ என்று உண்டு; அதன்படி, எல்லைகள் கொண்ட நிலப்பரப்பே தேசம் என்று ஆகிவிடாது; மக்கள் இல்லையென்றால் அது வெறும் நிலம்தான்; எனவே மக்கள்தான் தேசம். ஆனால் மக்களாகிய இந்த தேசத்தை என்ன பாடுபடுத்துகிறது பாஜகவும் அதன் அரசும்!
அதேபோல், ‘பாரத மாதா’வை பாஜக கற்பனை செய்வது போல்தான் மக்களும் கற்பனை செய்ய வேண்டுமா என்ன? விழாவில் இடம்பெற்ற ஓவியங்களுக்கு அதிகார பலம் கொண்டு பாஜக எதிர்ப்பும் மிரட்டலும் விடுத்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் அந்த ஓவியங்களை நீக்கியது; மன்னிப்பும் கேட்டு அறிக்கையும் விட்டது.
ஆனாலும் பாஜகவினரின் அடாவடி நின்றபாடில்லை. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு எதிரான அவதூறுகளைக் கட்டவிழ்க்கின்றனர். லயோலா கல்லூரி மாற்று ஊடக மையத்தின் பொறுப்பாளர் முனைவர் காளீஸ்வரன், அவரது துணைவியார், ஓவியர் முகிலன் ஆகியோரை செல்போனில் மிரட்டி வருகின்றனர்.
எனவே முனைவர் காளீஸ்வரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஓவியர் முகிலனுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
தனது இந்துத்துவத்தால் வட இந்திய மாநிலங்களை பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறது பாஜக. இதனை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது அவசியமாகிறது. அப்படி பாஜகவின் வக்கிரங்களைத் தோலுரித்துக் காட்டும் ‘வீதி விருது விழா’ போன்ற மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளையும் முடக்கப் பார்க்கிறது.
இந்த அடாத செயலை பாஜக தமிழ்நாட்டில் தொடர முடியாது; இருந்த இடம் தெரியாமல் போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.