“பரியேறும் பெருமாள்’ வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும்!” – வேல்முருகன்
நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தைப் பார்த்துவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியதாவது:
தமிழ்ச் சமூகம் முற்போக்கு பேசக்கூடியதாக இருந்தாலும், அது எப்படிப்பட்ட சாதிய சமூகமாக இருக்கிறது என்பதை இந்த “பரியேறும் பெருமாள்” திரைப்படம் மிக எதார்த்தமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது.
திரைப்படங்கள் வாயிலாக எது எதையோ சமூகத்தில் திணித்துக் கொண்டிருக்கிற இந்த சூழலில், இந்தப் படம் மிக முக்கியமான கருத்தினைத் தாங்கி வந்துள்ளது. இதனை துணிந்து தயாரித்த இயக்குநர் பா. இரஞ்சித் அவர்களுக்கும், தன் மண்ணில் நடந்த சாதிய கொடுமைகளை பதிவு செய்த அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்தப் படத்தின் வாயிலாக மனிதம் காக்கப்பட வேண்டும், மனிதம் போற்றப்பட வேண்டும்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.