வீராயி மக்கள் – விமர்சனம்
நடிப்பு: வேல ராமமூர்த்தி, மாரிமுத்து, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தில்குமாரி, ஜெரால்டு மில்டன், பாண்டியக்கா மற்றும் பலர்
இயக்கம்: நாகராஜ் கருப்பையா
ஒளிப்பதிவு: எம்.சீனிவாசன்
படத்தொகுப்பு: முகன்வேல்
இசை: தீபன் சக்கரவர்த்தி
தயாரிப்பு: ‘ஒயிட் ஸ்கிரீன் ஃபிலிம்ஸ்’ சுரேஷ் நந்தா
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)
ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘உரிமைக்குரல்’ என்ற படத்தில் கவிஞர் வாலி எழுதிய பிரபலமான பாடல் ஒன்று உண்டு:
”ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்”
என்பது தான் அந்த பாடல்.
ஆனால், உடன்பிறப்புகளுக்கு இடையில் மனக்கசப்பில் வரும் பிரிவு எத்தனை வலி மிகுந்தது? அதன் பிறகு உறவு வருவது எத்தனை கடினமானது? அப்படி மீண்டும் உறவு வந்தால் அது எத்தனை இனிமையானது? என்பதை ஒரு கிராமத்துப் பின்னணியில், உள்ளத்தைத் தொடும் வகையில், உணர்ச்சிகரமான கவிதையாக, காவியமாக படம் பிடித்துக் காட்டும் அபூர்வ திரைப்படமாகப் படைக்கப்பட்டிருக்கிறது ‘வீராயி மக்கள்’ திரைப்படம்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள தீயத்தூர் என்ற கிராமத்தில் இக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வசிக்கும் ஏழை விதவைத் தாயான வீராயி, தான் பெற்றெடுத்த மக்களை, தன் வயிறைக் கட்டி வாயைக் கட்டி வளர்த்து ஆளாக்குகிறார். அவரது பிள்ளைகள் ஒற்றுமையாக வளர்ந்து, மூத்த மகன் வேல ராமமூர்த்தியாகவும், இரண்டாவது மகன் மாரிமுத்துவாகவும், மூன்றாவது மகன் ஜெரால்டு மில்டனாகவும், ஒரே மகள் தீபா சங்கராகவும் ஆகிறார்கள். பின்னர் வேல ராமமூர்த்திக்கு ரமாவும், மாரிமுத்துவுக்கு செந்தில்குமாரியும் மனைவியாக வாய்க்கிறார்கள். தங்கை தீபா சங்கரை பக்கத்து ஊரான நரிக்குடியில் உள்ள ஒருவருக்கு மணம் முடித்து அனுப்பி வைக்கிறார்கள்.
கடைசித் தம்பியான ஜெரால்டு மில்டன் பெரிய படிப்பு படித்து, நல்ல உத்தியோகத்துக்குப் போய் கை நிறைய சம்பாதித்தால் கூட்டுக்குடும்பத்தை உயர்த்தி தலை நிமிரச் செய்து விடுவார் என்று நம்பும் அவரது அண்ணன்கள், கடனை வுடனை வாங்கி, அவரை சென்னைக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். ஆனால், சென்னை சென்ற ஜெரால்டு மில்டனோ, அங்கே ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டு, இந்த விவரத்தை – “நீங்கள் இதை ஏற்க மாட்டீர்கள்” என்ற குறிப்புடன் – ஒரு கடிதம் மூலம் அண்ணன்களுக்குத் தெரிவிக்கிறார். இதனால் ஏமாற்றத்துக்கு ஆளாகும் அவரது மொத்தக் குடும்பமும் அவரை வெறுத்து ஒதுக்கிவிடுகிறது.
திருமணத்தின்போது போட இயலாமல் பாக்கி வைத்திருக்கும் ஐந்து பவுன் நகைக்காக முறுக்கிக்கொண்டு திரியும் தீபா சங்கரின் கணவர் ஒருநாள் ஏடாகூடமாகப் பேச, அவருக்கும் தீபா சங்கரின் அண்ணன்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. விளைவாக, தீபா சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினருடனான உறவு முழுமையாக அறுந்துபோகிறது.
இந்நிலையில், மழை பொய்த்துப்போய், விவசாய பூமி காய்ந்து, பயங்கர பஞ்சம் ஏற்படுகிறது. இதனால் தன் மனைவி – மக்களுடன் பஞ்சம் பிழைக்க திருப்பூருக்குக் கிளம்பும் வேல ராமமூர்த்தி, ”அம்மாவை கவனித்துக் கொள். மாதாமாதம் முடிந்த அளவு பணம் அனுப்புகிறேன்” என்று தம்பி மாரிமுத்துவிடம் சொல்லிவிட்டுப் போகிறார். சொன்னது போலவே மணியார்டரில் பணமும் அனுப்புகிறார். பணத்தைப் பெற்றுக்கொள்ளும் மாரிமுத்துவின் மனைவி செந்தில்குமாரிக்கு மாமியார் வீராயி புத்திமதி சொல்ல, அது மாமியார் – மருமகள் சண்டையாக விஸ்வரூபம் எடுக்க, மாரிமுத்து தன் மனைவிக்கு ஆதரவாக நின்று, அம்மாவை வீட்டைவிட்டே விரட்டிவிடுகிறார். போக்கிடம் இல்லாமல் கோயிலில் தங்கி கையேந்தும் நிலையில் இருக்கும் அம்மாவை தன் வீட்டுக்கு அழைத்துவர மகள் தீபா சங்கர் முயன்றபோதிலும், கணவரின் கண்டிப்பால் முடியாமல் போகிறது.
மனம் நொந்து, பலம் இழந்து, உயிரை விடுகிறார் வீராயி. தகவல் அறிந்து ஊர் திரும்பும் வேல ராமமூர்த்தி, தன் அம்மாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி கேள்விப்பட்டு தம்பி மாரிமுத்துவைச் சாடுகிறார். இது தகராறாகி, எல்லை மீறுகையில், ”சொத்தை பிரித்துக் கொடு” என்று வரிந்து கட்டுகிறார் செந்தில்குமாரி. ஊர்ப்பஞ்சாயத்து கூடி சொத்தைப் பிரித்துக் கொடுக்க, அதோடு அண்ணன் – தம்பி உறவு அற்றுப்போகிறது. அது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரணத்துக்காக செந்தில்குமாரி ஜாடை பேசி சண்டை இழுக்க, ரமா எதிர்த்து வாயாட, அக்கம்பக்கமாய் வசிக்கும் அண்ணன் குடும்பமும், தம்பி குடும்பமும் தினமும் முட்டி மோதியபடியே பொழுதைக் கழிக்கின்றன.
இப்படி வீராயி மக்கள் ஒருவரோடொருவர் உறவற்று பிரிந்து கிடக்க, வேல ராமமூர்த்தியின் இளைய மகனும், அத்தை தீபா சங்கரின் மகளான நாயகி நந்தனாவை காதலிப்பவருமான நாயகன் சுரேஷ் நந்தா, அனைத்து உறவுகளும் சிக்கலை மறந்து, ஒன்று சேர்ந்த பிறகு தான் நமக்கு கல்யாணம் என உறுதி ஏற்கிறார். அவர் விரும்பியபடி உறவுகள் ஒன்று சேர்ந்தனவா? சுரேஷ் நந்தா – நந்தனா திருமணம் நடந்ததா? என்பன போன்ற கேள்விகளுக்கு எமோஷனலாக விடை அளிக்கிறது ‘வீராயி மக்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
வீராயியின் மூத்த மகனாக வரும் வேல ராமமூர்த்தி எப்போதும் போல மிடுக்கான தோற்றத்தோடும், கோபமான பார்வையோடும், கம்பீரமான குரலோடும் நடித்திருந்தாலும், கல்லுக்குள் ஈரம் போல் உள்ளுக்குள் அன்பு சுரக்கும் பாசக்கார மூத்த அண்ணனாகவும் பார்வையாளர்களின் மனங்களில் இடம் பிடித்து விடுகிறார்.
வேல ராமமூர்த்தியின் மூத்த தம்பியாக வரும் மாரிமுத்து, இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார். சட்டென கோபிப்பது, தன் மனைவிக்கு ஆதரவாக நின்று தாயையும், உடன்பிறப்பையும் நொடியில் உதறித் தள்ளுவது என்ற குணநலன்களை மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வேல ராமமூர்த்தியின் ஒரே தங்கையாக வரும் தீபா சங்கர், சில இடங்களில் ஓவர் ஆக்ட்டிங் செய்தாலும், மூத்த அண்ணனின் பாசத்துக்காக ஏங்கும் பல காட்சிகளில் ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் வரும் ராதிகா சரத்குமாருக்கு இணையாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களில் கண்களை ஈரமாக்கி விடுகிறார்.
வேல ராமமூர்த்தியின் இளைய மகனாகவும், கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் சுரேஷ் நந்தா, அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் அருமையாக நடித்திருக்கிறார். அவரே படத்தின் தயாரிப்பாளராக இருந்தபோதிலும், தன்னை முன்னிறுத்தாமல், கதையையும், கதாபாத்திரத்தையும் முன்னிறுத்தி, அதற்காக மெனக்கெட்டிருப்பது பாராட்டத் தக்கது. அத்தை மகளை காதலிப்பதிலாகட்டும், கூலிப்படையை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சொந்த பந்தங்களுக்காக ஏங்குவதிலாகட்டும், உணர்ச்சிகளை சமச்சீரான அளவில் வெளிப்படுத்தி, நம்பிக்கைக்குரிய பக்குவமான நடிகராக ஜொலித்திருக்கிறார்.
நாயகனின் அத்தை மகளாக வரும் நாயகி நந்தனா, கிராமத்துக் கதைக்கு ஏற்ற இலட்சணமான முகம். எட்டாம் வகுப்பு மூன்று ஆண்டுகள் படிக்கும் பள்ளி மாணவியாக சீருடையில் வரும்போது, ‘களவாணி’ படத்தில் வரும் ஓவியாவை நினைவூட்டுகிறார். காதலும், குறும்பும் கலந்த நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
வேல ராமமூர்த்தியின் மனைவியாக வரும் ரமாவின் நடிப்பு அளவாக இருந்தாலும், அரிதாரப்பூச்சு அளவு கடந்ததாக இருக்கிறது. மாரிமுத்துவின் மனைவியாக வரும் செந்தில்குமாரி, பார்வையாளர்களுக்கு அந்த கதாபாத்திரம் மீது கோபம் வரும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஜெரால்டு மில்டன், பாண்டியக்கா உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாகராஜ் கருப்பையா. கிராமத்து மனிதர்களின் மனங்களையும், வாழ்வியலையும், உறவுகளின் சிக்கலையும், மேன்மையையும், நன்றாகப் படித்துத் தெளிந்தவர் இவர் என்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. இவரது காட்சி அமைப்புகளிலும், மேக்கிங்கிலும் ஆரம்ப கால பாரதிராஜாவைத் தரிசித்த சந்தோஷம் ஏற்படுகிறது. இருக்கும் உறவுகளை பகைத்துக்கொள்ளக் கூடாது; பகைத்துக்கொண்ட உறவுகளை மீண்டும் அணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவதில் இயக்குநர் நாகராஜ் கருப்பையா வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துகள்.
இசை இளையராஜாவோ என எண்ணும்படி இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பின்னி பெடலெடுத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டுபவை. பின்னணி இசை அளவாய் ஒலித்து காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் எம்.சீனிவாசன் கிராமத்து மண்ணையும், மக்களையும் உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தி , இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
‘வீராயி மக்கள்’ – அபூர்வமாகப் பூக்கும் குறிஞ்சு மலர்! பார்க்கலாம்! ரசிக்கலாம்! கொண்டாடலாம்!