வீரையன் – விமர்சனம்

தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை நிறைவேற்ற போராடி வருகிறார் ஆடுகளம் நரேன். மற்றொரு பக்கத்தில் கவுன்சிலராக வருகிறார் வேல ராமமூர்த்தி. பள்ளிக்கு செல்லும் அவரது மகளும், வேல ராமமூர்தியின் டிரைவரும் காதலித்து வருகின்றனர்.

அதே ஊரில் வீடு வாசல் இல்லாமல், வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வருகிறார் இனிகோ பிரபாகர். அவருடன் அவரது நண்பர் மற்றும் திருநங்கை ஒருவரும் வேலையின்றி ஊர்சுற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், வேல ராமமூர்த்தியின் மகளும், டிரைவரும் ஊரை விட்டு ஓட முயற்சிக்கும் போது, இனிகோ பிரபாகர் அந்த டிரைவருடன் சண்டையிட்டு அவரை அடிக்கிறார். இந்நிலையில், அங்கு வரும் நரேனின் மகன் அந்த சண்டையை தடுத்து நிறுத்துகிறான். இந்த விஷயம் குறித்து வேல ராமமூர்த்திக்கு தகவல் போக, நரேனின் மகன் தனது மகளை காதலிப்பாதாக எண்ணி அவனை பள்ளியில் இருந்து நீக்கும்படி செய்துவிடுகிறார்.

உன்னால் தான் தனது பள்ளி படிப்பு தடைபட்டதாக இனிகோ பிரபாகரை நரேனின் மகன் திட்ட, அவனை படிக்க வைப்பதாக இனிகோ வாக்கு கொடுக்கிறார். இதையடுத்து தனது தந்தைக்கு தெரியாமல் டுட்டோரியல் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார்.

கடைசியில் நரேனின் மகனை இனிகோ படிக்க வைத்தாரா? நரேனின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றினாரா? நரேனுக்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்ததா? அந்த காதல் ஜோடி என்ன ஆனார்கள்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

0a1d

வேலையில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து சேட்டை செய்யும் இளைஞனாக இனிகோ பிரபாகர் நடித்திருக்கிறார். நண்பனாகவும், ஒரு அண்ணனாகவும், காதலனாகவும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷைனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பேசும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். திருநங்கை கதாபாத்திரமும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் படமாக்கியிருக்கிறார். ஒருவனை உதவாக்கரையாக நினைத்து பாவித்து வரும் ஒருவரால் அவரது வாழ்க்கையில் செய்யப்படும் முக்கியமான உதவியால் அவர் மனம் மாறி அவரையே குலதெய்வமாக நினைக்கும் நிலைக்கு வருகிறார் என்பதை படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார். படத்தில் அடுத்தடுத்த  காட்சிகளின் நீனம் அதிகமாக இருப்பது படத்திற்கு மைனசாக அமைகிறது.

எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளது. பி.வி.முருகேசின் ஒளிப்பதிவில் காட்சிகளும் 90-களில் உள்ளது போல சிறப்பாகவே வந்திருக்கிறது.

மொத்தத்தில் `வீரையன்’ குலசாமி.