பிரபல ஓவியரும் நடிகருமான வீர.சந்தானம் இயற்கை எய்தினார்
பிரபல ஓவியரும், நடிகரும், தமிழுணர்வு போராளியுமான வீரசந்தானம் மாரடைப்பால் சென்னையில் நேற்று (வியாழன்) இரவு காலமானார். அவருக்கு வயது 70.
அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஓவியத் துறையில் பங்காற்றியவர் வீரசந்தானம். ஓவியத் துறையையும் கடந்து ஆடை வடிவமைப்பாளர், தமிழ் உணர்வாளர், நடிகர் என பன்முகம் கொண்டவராக விளங்கினார்.
தோற்பாவைக் கூத்து, தொன்மையான இசைக் கருவிகள், கோயில் சிற்பங்கள், நிகழ்த்து கலைகள் போன்றவை இவருடைய ஓவியங்களில் தனித்து நிற்பவை. மரபுக் கலை, கட்டிடம் மற்றும் மரபு இசைக் கருவிகளை தனது ஓவியப் படைப்பின் வழியே இவர் மீள் உருவாக்கம் செய்துள்ளார். ஆடை வடிவமைப்புத் துறையில் இவர் தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் உணர்வாளராக இருந்த இவர், பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார்.
பாலு மகேந்திரா இயக்கிய ‘சந்தியா ராகம்’ மற்றும் ‘அவள் பெயர் தமிழரசி’, ‘பீட்சா’, ‘கத்தி’ உள்ளிட்ட பல படங்களிலும், குறும்படங்களிலும் நடித்துள்ளார். ‘தானே’ புயலின்போது சென்னையில் மிகப் பெரிய ஓவியக் கண்காட்சியை நடத்தி நிதி வசூல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளார்.
ஓவியர் வீரசந்தானத்தின் கலைப் பயணத்தை எடுத்துரைக்கும் விதமாக ‘காமதேனு’ என்ற ஆவணப்படம் வெளியாகி யுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோயிலில் பிறந்த இவர், சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தார். அவருக்கு சாந்தி என்ற மனைவியும், சங்கீதா, சாலிகா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். அவரது இறுதி சடங்கு நாளை (சனிக்கிழமை) நடக்கவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.