330 திரை அரங்குகளில் வெளியாகும் காமெடி, ஆக்ஷன் திரைப்படம் ‘வீரா’ – முன்னோட்டம்!
ரஜினிகாந்த் நடிப்பில், பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் வெளியான ‘வீரா’ வெற்றிப்படத்தின் தலைப்பில் உருவாகியிருக்கும் புதிய படமான ‘வீரா’, வருகிற (பிப்ரவரி) 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.
காமெடி, ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘வீரா’, தமிழகத்தில் 250 திரையரங்குகள், கர்நாடகாவில் 45 திரையரங்குகள், கேரளாவில் 35 திரையரங்குகள் என சுமார் 330க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
‘யாமிருக்க பயமேன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியை வைத்து ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் மிக பிரமாண்டமாக இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
‘சலீம்’, ‘ஜிகர்தண்டா’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ‘சேதுபதி’ போன்ற வெற்றி படங்களை வெளியிட்ட ஆரஞ்சு கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.
இதில் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பி ராமையா,மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி, நரேன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
‘யாமிருக்க பயமேன்’ படத்தின் இயக்குநர் டிகே-விடம் இணை இயக்குநராக பணியாற்றிய ராஜாராமன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – ஏ.குமரன்
பாடல்கள் – விக்னேஷ் வாசு
,பாடலிசை – லியோன் ஜேம்ஸ்
பின்னணி இசை – எஸ்.என்.பிரசாத்
கதை, திரைக்கதை, வசனம் -, பாக்கியம் ஷங்கர்
இப்படம் குறித்து இதன் இயக்குனர் ராஜாராமன் கூறுகையில், “புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு வரும் ஒரு தத்ரூபமான கேங்க்ஸ்டர் படம் இது. கேங்க்ஸ்டர் கதையாக இருந்தாலும் இப்படத்தை ஆக்ஷன் மற்றும் சமகால அரசியல் கலந்த காமெடி படமாக எடுத்திருக்கிறோம்.
இந்த கதையில வரும் பிரதான கதாபாத்திரத்தின் பெயர் வீரமுத்து. எனவே, ‘வீரமுத்து’ அல்லது ‘முத்துவீரா’ என்ற தலைப்பு வைக்கத் தான் முதலில் நினைத்தோம். அதன்பிறகு ரஜினி சார் நடித்த ‘வீரா’ படத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து, தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் பஞ்சு சுப்பு சாரை அணுகி, முறையாக அனுமதி பெற்று, இந்த தலைப்பை வைத்துள்ளோம். ரஜினி சார் படத்தின் தலைப்பை வைத்ததால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சும்மா தேமே என்று வந்து போகாமல், ஒவ்வொருவருடைய கேரக்டரிலும் நகைச்சுவையுடன் கூடிய நெகட்டீவ் ஷேடு இருக்கும்படியாக அனைத்து கதாபாத்திரங்களையும் வடிவமைத்திருக்கிறோம். இவர் தான் வில்லன் என்று தனியாக யாரும் இல்லை. ஆனால் வருகிற எல்லோருமே வில்லனாகத் தெரிவார்கள் என்பது இப்படத்தின் சுவாரஸ்யம்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி சூப்பர்ஹிட் ஆகி விட்டன. இப்படத்துக்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக கதாபாத்திரங்கள் சில கெட்ட வார்த்தைகள் பேசுகின்றன. அவற்றை வெட்ட வேண்டாம் என்று சொல்லி ‘ஏ’ சான்றிதழ் வாங்கியிருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் ராஜாராமன்.
இப்படத்தை வெளியிடும் ஆரஞ்சு கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், “ஒரு படத்தை அதன் கதை, அது படமாக்கப்பட்டுள்ள விதம், தரம் இவற்றை பார்த்து தான் நாங்கள் வாங்குவோம். அந்த வகையில் ‘வீரா’ படத்தின் கதையம் சமும், அது படமாக்கப்பட்டுள்ள விதமும் எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் வெற்றிப்பட பட்டியலில் சேர்வதற்கான அனைத்து அம்சங்களும் ‘வீரா’வில் உள்ளது” என்கிறார் நம்பிக்கையுடன்.