வீர தீர சூரன் பார்ட் 2 – விமர்சனம்

நடிப்பு: விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன், பிருத்விராஜ், பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: எஸ்.யு. அருண்குமார்
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
படத்தொகுப்பு: பிரசன்னா ஜி.கே
இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு: ஹெச் ஆர் பிக்சர்ஸ்
தயாரிப்பாளர்கள்: ரியா ஷிபு, மும்தாஸ் எம்
வெளியீடு: 5 ஸ்டார் செந்தில்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
படம் ஆரம்பித்தவுடன், திரையில் வருவது யார்? என்ன கதாபாத்திரம்? கதை எங்கே நடக்கிறது? என்பன போன்ற அடிப்படை விஷயங்களை பார்வையாளர்கள் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே – எடுத்த எடுப்பிலேயே – கதையை விறுவிறுப்பாக சொல்ல ஆரம்பித்துவிடுகிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார். வியப்புடன் நாம் நிமிர்ந்து உட்காருகிறோம்…
ஊர் திருவிழா நடக்கும் ஒரே இரவில் மொத்தக் கதையும் நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் அதிகார பலம், அடியாள் பலம், பண பலம் கொண்ட செல்வாக்கு மிக்க தாதாவாகத் திகழ்கிறார் பெரியவர் ரவி (பிருத்விராஜ்). அவரது மகன் கண்ணனும் (சுராஜ் வெஞ்சரமூடு) பெரிய தாதாவாகக் கலக்கிக்கொண்டிருப்பவர் தான். இவர்கள் பெரிய குடும்பமாக – ஒரே கூட்டுக்குடும்பமாக – வாழ்ந்து வருகிறார்கள். இவர்களது வீட்டுக்கு திருவிழா இரவு தன் 8 வயது மகளுடன் வரும் ஒரு பெண், “என் புருசன என்ன செஞ்சீங்க? கொன்னுட்டீங்களா? எனக்கு பதில் வேணும்” என்று கத்தி கூச்சல் போடுகிறார். அங்கிருந்து போகுமாறு வீட்டில் இருப்பவர்கள் கடுமையாக எச்சரித்தும், மிரட்டியும் அந்த பெண் கேட்பதாக இல்லை என்பதால்… கண்ணன் ஓங்கி ஒரே அறை… அந்த பெண் தரையில் சாய்கிறார்…
மேற்கண்ட பெண்ணின் கணவர் பதற்றத்துடன் காவல் நிலையம் வருகிறார். தன் மனைவி மற்றும் 8 வயது மகளைக் காணவில்லை என்று காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) அருணகிரியிடம் (எஸ்.ஜே.சூர்யா) புகார் அளிக்கிறார். அவர்களை பெரியவர் ரவியும், அவரது மகன் கண்ணனும் கொன்றிருப்பார்கள் என்று சந்தேகிப்பதாகவும் கூறுகிறார். ரவியையும், கண்ணனையும் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளி தன்னுடைய பழைய பகையைத் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் வராதா என்று காத்துக்கொண்டிக்கும் எஸ்.பி அருணகிரி, மேற்கண்ட புகாரின் அடிப்படையில் அன்றிரவே என்கவுண்ட்டர் செய்ய, தன்னுடைய குழுவினருடன் திட்டம் வகுக்கிறார்.
எஸ்.பி-யின் திட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும், மகன் கண்ணனை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி, பாதுகாப்பான ரகசிய இடத்தில் தங்க ஏற்பாடு செய்யும் பெரியவர் ரவி, தங்களை என்கவுண்ட்டர் செய்யும்முன் எஸ்.பி அருணகிரியை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது முன்னாள் அடியாளான காளியை (விக்ரம்) தேடிப் போகிறார்.
இனி அடிதடி, வெட்டுக்குத்து வேண்டாம் என்று ரவுடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு, வீட்டை ஒட்டி ஒரு மளிகைக்கடை வைத்துக்கொண்டு, சிறு வியாபாரியாய் தன் மனைவி கலைவாணி (துஷாரா விஜயன்), மகள், மகனுடன் நிம்மதியாய் வாழ்ந்துகொண்டிருக்கும் காளி, பெரியவர் ரவியின் கோரிக்கையை முதலில் ஏற்க மறுக்கிறார். ஆனால் தன் காலில் விழுந்து ரவி கெஞ்சியவுடன் மனம் மாறும் காளி, எஸ்.பி அருணகிரியைத் தீர்த்துக்கட்ட கிளம்புகிறார்.
பெரியவர் ரவி மற்றும் அவரது மகன் கண்ணன் கதையை முடிக்க எஸ்.பி அருணகிரி துடிப்பது ஏன்? அவர்களுக்கு இடையிலான முன்பகை என்ன? எஸ்.பி-யின் என்கவுண்ட்டர் திட்டம் நிறைவேறியதா? அல்லது அதற்கு முன்பாகவே எஸ்.பி-யின் கதையை காளி முடித்து வைத்தாரா? காளிக்கும், பெரியவர் ரவிக்கும் அடுத்து பகை மூண்டது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷனில் விடை அளிக்கிறது ‘வீர தீர சூரன் பார்ட் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதை நாயகனாக காளி என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். அவர் எத்தனை சிறப்பாக நடித்திருப்பார் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. படத்தின் ‘வீர தீர சூரன்’ என்ற தலைப்புக்குப் பொருத்தமாக, கரடுமுரடான வீராதி வீரனாக, கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகளை துவம்சம் செய்யும் சூராதி சூரனாக திரையில் ஜொலித்திருக்கிறார். ஆக்ஷனில் மட்டும் அல்ல, செண்டிமெண்ட், காதல், விசுவாசம் உள்ளிட்ட ஏனைய உணர்ச்சிகளையும் துல்லியமாக பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும், மனைவிக்கும் இடையிலான சீண்டல், ஊடல், கூடல் காட்சிகள் ரசனையானவை. மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக எந்த எல்லை வரையும் செல்லும் கதாபாத்திரத்தை ரசித்து, இயல்பு மீறாமல் நேர்த்தியாக செய்து அசத்தியிருக்கிறார் விக்ரம். வாழ்த்துகள்.
நாயகனின் காதல் மனைவி கலைவாணி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். சாதாரண மளிகைக்கடை வியாபாரியின் எளிய மனைவி எப்படி இருப்பாரோ அப்படியே திரையில் தோன்றி கவனம் ஈர்த்துள்ளார். காதல், பாசம், கோபம், வெறி என அனைத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தி தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.
காவல் கண்காணிப்பாளராக, எஸ்.பி அருணகிரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். வழக்கமான அலட்டலோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல், அதேநேரத்தில் தான் நினைத்ததைச் சாதிக்க எதையும் செய்யும் வில்லனாக புதுவித பாணியில் மிரட்டியிருக்கிறார். அவர் போடும் என்கவுண்ட்டர் திட்டம் அட்டகாசம்.
பெரியவர் ரவியாக வரும் பிருத்விராஜ், அவரது மகன் கண்ணனாக வரும் சுராஜ் வெஞ்சரமூடு, ரவியின் மனைவியாக வரும் மாலா பார்வதி, நாயகன் காளியின் அம்மாவாக வரும் ஸ்ரீஜா ரவி, எஸ்.பி அருணகிரியின் மாமனாராக வரும் ரமேஷ் இந்திரா, வெங்கட்டாக வரும் பாலாஜி உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கி, படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார். முதல் பாகத்தை வெளியிடாமல், இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு புதுமை செய்திருக்கிறார் இயக்குநர். விக்ரமுக்காகவே உருவாக்கப்பட்ட மிகவும் சீரியஸான கதை அம்சம் கொண்ட படம் இது என்பதால், நகைச்சுவைக்கு இடம் அளிக்காமல், விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் திரைக்கதை அமைத்து, தரமான ஆக்ஷன் காட்சிகளால் படத்தை நகர்த்தியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாமல் பார்வையாளர்களை பதட்டத்துடன் சீட் நுனியில் உட்கார வைப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் உத்தியிலும் புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். மனித மனங்களுக்குள் மண்டிக் கிடக்கும் வன்மத்தை தோலுரித்துக் காட்டியிருப்பது, நாயகனின் பாசத்தைப் பாடல் காட்சிகளின் மாண்டேஜிலேயே சொன்ன விதம், போலீஸ் என்கவுன்ட்டர், கஸ்டடி மரணம் ஆகிய முக்கிய பிரச்னைகளை கதைக்குள் ரொம்ப இயல்பாக சேர்த்திருப்பது ஆகியவற்றிற்காகவும் இயக்குநரை பாராட்டலாம்!
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை படத்துக்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் அருமை. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால், அவற்றின் இயல்பு கெடாமல் நேர்த்தியாகவும், சிரத்தையாகவும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் தேனி ஈஸ்வர். இவர்களோடு படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே-யும், ஸ்டண்ட் மாஸ்டர் பீனிக்ஸ் பிரபுவும் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர்.
‘வீர தீர சூரன் பார்ட் 2’ – விக்ரம் ரசிகர்களுக்கும், ஆக்ஷன் விரும்பிகளுக்கும் செம விருந்து! கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.75/5.