இயக்குனர் அமீர், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியினர் மீது பொய் வழக்கு: விசிக கண்டனம்!
கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தின்போது கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்த பாஜகவினர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையினர், மாறாக, இயக்குநர் அமீர் மீதும், நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சியினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் இந்தப்போக்கு கண்டனத்துக்குரியதாகும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் “வட்டமேசை விவாத” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய திரைப்பட இயக்குநர் அமீர் அவர்களைக் குறிவைத்து அவர் பேசத் தொடங்கியதுமே பாரதிய ஜனதா கட்சியினர் திடீரென கூச்சலிட்டு குழப்பம் விளைவித்துள்ளனர். அதனால் நிகழ்ச்சியைத் திட்டமிட்டவாறு தொடர இயலாதநிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாஜகவினர் இவ்வாறு நடந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கூச்சலிட்டுக் குழப்பம் விளைவித்த பாஜகவினர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையினர், மாறாக, இயக்குநர் அமீர் மீதும் நிகழ்ச்சியை நடத்திய தொலைக்காட்சியினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக அரசின் இந்தப்போக்கு கண்டனத்துக்குரியதாகும்.
எதிரும் புதிருமான கருத்துள்ளவர்கள் பங்கேற்கிற இத்தகைய நிகழ்ச்சிகளில் பொதுமக்களும் பங்கேற்பது சனநாயகத்தின் சிறப்புக்கூறுகளுள் ஒன்றாகும். ஆனால், பொதுமக்கள் என்ற பெயரில் சனநாயகவிரோத சக்திகள் அரங்கை ஆக்கிரமித்துக்கொண்டு கூச்சலிடுவதும் குழப்பம் விளைவிப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இது பாஜகவினரின் வாடிக்கையாகவுள்ளது. அவர்கள் வேண்டுமென்றே இவ்வாறு திட்டமிட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், அக்கட்சியின் தலைவர்கள் ஒப்புக்காகக் கூட தமது கட்சியினரைக் கட்டுப்படுத்துவதே இல்லை. மாறாக, உள்ளம் பூரிக்க புன்னகைத்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.
கோவையிலும் இதே போக்குதான் நிலவியுள்ளது. பாஜக தலைவர்கள் யாரும் தங்கள் கட்சியினரைக் கட்டுப்படுத்தாமல் அமைதிகாத்து ஊக்கப்படுத்தியுள்ளனர். பாஜகவினரின் இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாஜகவினரின் கண்ணசைவுகளுக்கேற்ப இயக்குநர் அமீர் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சியினர் மீது பொய்வழக்குப் பதிவு செய்துள்ள அதிமுக அரசு, சுதந்தரமாக செயல்பட இயலாதநிலையில் உள்ளது என்பதை அறியமுடிகிறது. இது மிகவும் வேதனைக்குரியதாகும். அவர்கள் மீதான பொய்வழக்குகளைத் திரும்ப பெறுவதுடன், வன்முறைக்கு வழிகோலும் வகையில் நடந்துகொண்ட பாஜகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.