“பொது தேர்தலை நடத்துவது தான் தீர்வாக அமையும்!” – திருமாவளவன்
ஜெயலலிதா குற்றமற்றவர் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறவில்லை. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் இரு நீதியரசர் இருக்கை அளித்துள்ள தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல் சக்திகளுக்குப் பாடம் புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.
எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப்படுவதால், தமிழகத்தில் பல்வேறு வகையிலான குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன என்பதை இச்சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், ஜெயலலிதா காலமானதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது, அவர் குற்றமற்றவரென்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.