நடிகர் ரஞ்சித்துக்கு எதிராக போலீசில் விசிக புகார்: “சமூக அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருகிறார்!”
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் கொலை செய்யப்படும் சம்பவங்களும், கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது.
ஆனால், பிற்போக்கு சிந்தனை கொண்ட நபர்கள் சாதி ஆவணக் கொலைக்கு நியாயம் கற்பித்துவரும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த சூழலில் அண்மையில் நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் ’கவுண்டம்பாளையம்’ என்ற திரைப்படம் வெளியானது. இதனை முன்னிட்டு பேட்டியளித்த ரஞ்சித், ஆணவக் கொலை என்பது வன்முறை அல்ல என்றும், இதுவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது காட்டும் அக்கறை போன்றதுதான் என்றும் குறிப்பிட்டார்.
ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையான நிலையில், தன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்ந்து கதிகலங்கிய ரஞ்சித், தடாலென பல்டி அடித்து, தான் ஆணவக் கொலைகளுக்கு ஆதரவாளன் இல்லை என்று ஓர் அவசர விளக்கம் அளித்தார். ஆனால், ஆணவக் கொலைகளை ஆதரித்துப் பேசிய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தன. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு எதிராக விசிக துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சார்பில் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “சமூக அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஞ்சித் பேசி வருகிறார். ரஞ்சித் இயக்கி நடித்துள்ள ’கவுண்டம்பாளையம்’ திரைப்படத்தில் திட்டமிட்டு விசிகவை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளன. தணிக்கை குழுவிடம் புகார் அளித்த பின்னர், சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.
’கவுண்டம்பாளையம்’ படத்தில், ஆணவ கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். ஆணவப் படுகொலைகளுக்கு நியாயம் இருக்கிறது என்று பேசுவதை தீவிரவாத செயலாகத்தான் பார்க்க வேண்டும்.
ஆணவக் கொலைக்கு ஆதரவாக பொதுவெளியில் கருத்து தெரிவித்து சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் நடிகர் ரஞ்சித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வன்னியரசு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விசிக தலைவர் திருமாவளவன், “ஆணவக் கொலையை குற்றமில்லை, வன்முறை இல்லை என்று சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும்; அல்லது வணிக நோக்கத்திற்காக இருக்க வேண்டும். இதன்மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணி இது போன்ற கருத்துகளை பரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல” என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.