“நாம் தமிழர் கட்சி நமக்கு பகை சக்தி அல்ல”: விடுதலை சிறுத்தைகள் விளக்கம்!
“தலித் என்ற அடையாளத்தை மட்டும் முன்னிறுத்தி தமிழ் மையநீரோட்ட அரசியலில் இருந்து எவரும் எங்களை ஒதுக்க முடியாது. எல்லா ஒடுக்கு முறைக்கும் எதிராக நிற்பதுதான் தலித் அரசியல். மாநில சுயாட்சி, இன மொழி உரிமைகளுக்காக இந்தியாவிலேயே குரல் கொடுக்கும் ஒரே தலித் இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள்.
“தமிழ் தேசியத்தில் இருக்கும் சாதியக்கூறுகள் குறித்த ரஞ்சித்தின் கோபம் நியாயம் என்றாலும் அனிதா விஷயத்தில் இந்த சந்தர்ப்பத்தில் அதை வெளிப்டுத்தியிருக்க வேண்டாம. அனிதாவுக்காக குரல் கொடுப்பவர்களில் சாதியவாதிகள் இருந்தாலும் அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் ஜனநாயக சக்திகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிராக நிறுத்தக் கூடாது.”
– கடந்த 10.9.2017 அன்று தோழர் எவிடன்ஸ் கதிர் அவர்களின் நூல் அறிமுகக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் உரை.
அனிதா பிரச்சினையில் இயக்குநர் திரு.பா.ரஞ்சித் அவர்கள் பேசிய கருத்து குறித்து இணைய தளங்களில் சாதிய, மத அடிப்படைவாதிகள் மிக மோசமான விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அவரை விமர்சிக்கும்போதே அவர்களின் சாதிய மனோபாவம் வெளிப்படுகிறது. இது மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய சூழலில் இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு ஆதரவாக நமது இயக்கத் தோழர்களும் எதிர்வினையாற்றுவது தவிர்க்க முடியாததே ஆகும். எனினும், தனிநபர் விமர்சனகளைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சில பதிவுகள் அநாகரீகமாகவும் அருவருப்பாகவும் உள்ளது. உண்மையிலேயே விடுதலைச்சிறுத்தைகள் தான் அப்படி பதிவிடுகிறார்களா? அல்லது சிறுத்தைகளின் பெயரை வேறு எவரும் பயன்படுத்துகிறார்களா என்கிற அய்யம் எழுகிறது. ஏனென்றால், நமது தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஒவ்வொரு அணி அணியாக சந்தித்து ஒரு பேராசியரை போல வகுப்பெடுத்து வருகிறார். அதில் குறிப்பாக சமூக ஊடகத்தை எப்படி சிறுத்தைகள் கையாள வேண்டும், எப்படி விமர்சனங்களுக்கு நாகரீகமாக பதிலளிக்க வேண்டும் என்றும், யாருடைய மனதையும் புண் படுத்தக் கூடாது என்றும் வழிகாட்டி இருக்கிறார். ஆனால்,சிலர் அநாகரீகமாக எழுதுவதைப் பார்த்தால் அய்யம் எழுகிறது. இப்படி எழுதுபவர்கள் விடுதலை சிறுத்தைகளாக இருக்க மாட்டார்கள்.
நம்முடைய நட்பு சக்தி எது? பகை சக்தி எது? என்பதை அடையாளம் காணுவது மிக முக்கியமானது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி நமக்கு பகை சக்தி அல்ல. அக்கட்சியின் தலைவர் திரு.சீமான் அவர்கள் சாதியச் சிக்கல் குறித்துப் பேசியது நமக்கு முரண்பாடானது என்றாலும் அதற்காக அவரையும் அக்கட்சியினரையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நமக்கு நாகரிகம் அல்ல.
தலித் விடுதலை அரசியலை மிக நிதானமாக, அதே நேரத்தில் மிக ஆழமாக -அழுத்தமாக பொது நீரோட்டத்தில் இணைத்து வருகிறார் நமது தலைவர் எழுச்சித்தமிழர். அந்த முயற்சிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
நமக்கு எதிரான விமர்சனங்களையும் கருத்தியல் அடிப்படையில் நேர்மறையாக, நாகரிகமாக, துணிச்சலாக எதிர்கொள்வோம்.
வன்னி அரசு
மாநில துணை பொது செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி