கட்சி வேறுபாடின்றி பாராட்டப்படும் கல்வியாளர் – வசந்திதேவி!
பொதுக்கல்வி முறையின் தூதுவர் வசந்திதேவி! வாழ்த்துகள், ஒரு ஆரோக்கியமான அரசியலை தொடங்கிவைத்ததற்கு
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து தேமுதிக–மக்கள் நலக் கூட்டணி சார்பில் நாடறிந்த கல்வியாளர் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவியை விடுதலைச் சிறுத்தைகள் நிறுத்தியுள்ளது.
வசந்திதேவி சிறந்த மாற்றுக்கல்வி சிந்தனையாளர். தமிழ்நாட்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். தொழிற்சங்கவாதியும், கிறித்தவ அறவாணரும், சிந்தனையாளருமான சக்கரைச்செட்டியாரின் மகள்வழி பெயர்த்தி. இவருடைய தந்தை வழக்கறிஞராகவும், திண்டுக்கல் நகராட்சித் தலைவராகவும் இருந்தார். இவருடைய தாத்தா காலத்திலிருந்து மதம், சாதி கடந்து இவருடைய குடும்பத்தில் திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. வசந்திதேவி திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் படித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
1988வரை பல அரசுக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1988ல் திண்டுக்கல்லில் பணியாற்றும்போது உசிலம்பட்டி சிசுக்கொலைகள் குறித்த அதிர்ச்சி செய்திகள் வெளியானபோது அப்பகுதி பெண்கள், மாணவிகள் மத்தியில் சிசுக்கொலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்களித்தார். 1988 முதல் 1990 வரை குடந்தை அரசு மகளிர் கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார். அப்போது மாணவியர் மத்தியில் பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பெறவும், வரலாற்றுணர்வு பெறவும் ஏராளமான கருத்தரங்குகள், சிறப்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்து தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்களை அழைத்து வந்து மாணவியரோடு உரையாடச் செய்தார்.
1990 முதல் 1992 வரை இந்திய சமூக அறிவியல் குழு ஆய்வாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து 1992ல் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். அதுவரை பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்லூரி போன்று நடந்துவந்தநிலையில், அதை உரையாடலுக்கான களமாக்கினார். பல்கலை பாடத்திட்டங்களில் ஏராளமான மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். நவீன காலத்துக்கேற்ற புதிய, புதிய துறைகளை ஏற்படுத்தினார். ஆண்டு முழுவதும் பல தலைப்புகளில் கருத்தரங்குகளும், சிம்போசியங்களும் நடந்தவண்ணமிருந்தன. அவர் பணியாற்றிய ஆறு ஆண்டுகளில் பல்கலைக்கழகம் மறுமலர்ச்சி அடைந்தது.
தொடர்ந்து தமிழ்நாடு அரசின் திட்டக்குழு உறுப்பினராக ஓராண்டு பணியாற்றினார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவராகப் பணியாற்றியது. அப்போதுதான் தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆணையம் இருக்கிறது என்பதே மக்களுக்குத் தெரியவந்தது.
இவரது தலைமையில் ஏராளமான பொதுவிசாரணை நடத்தி பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை வெளிக்கொணர்ந்தார். குறிப்பாக, பெண்களை கொத்தடிமை முறையிலிருந்து விடுவித்தார்.
முனைவர் வசந்திதேவையைப் பொறுத்தவரை பெண் விடுதலையும், கல்வியும் இரண்டு கண்கள். அதிலும் அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தவேண்டிய மாற்றங்கள்குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பல மட்டங்களில் பேசி நெருக்குதல் அளித்துள்ளார். சமச்சீர் கல்வியின் ஆதரவாளர். அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க பொதுப்பள்ளி முறை வேண்டும் என்று அண்மைக்காலமாக தீவிரமாகப் போராடி வருபவர்.
இவர், இப்போது அரசியலில் இறங்கியிருப்பது பொதுப்பள்ளியின் தூதுவர் அரசியலுக்கு வந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இவர் ஆர்.கே. தொகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதை கட்சி வேறுபாடின்றிப் பாராட்டுகிறார்கள்.
– அப்பண்ணசாமி
# # #
வெற்றி தோல்வி என்பது எல்லாம் இரண்டாவதுதான். மாற்றத்திற்கான நம்பிக்கைக்கான முயற்சி முக்கியம்.
சிறுத்தைகளை மிகவும் பாராட்ட வேண்டும். முனைவர் வசந்தி தேவி அவர்களை ஆர்.கே.நகர் தொகுதியில் நிற்க வைத்து மற்ற கட்சிகளுக்கு ஒரு பாடத்தை நடத்தி இருக்கின்றனர்.
படித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள அந்த தொகுதி மக்களின் மனசாட்சிக்கும் சவால் ஏற்பட்டு உள்ளது.
எதிர்த்து நிற்கும் வேட்பாளர் நம்மைவிட நற்பெயரில் இருக்கும்போது ஒரு பயம் ஏற்படும். அந்த பயம் ஜெயலலிதாவிற்கு கண்டிப்பாக ஏற்படும்.
தலித் அரசியல் என்பது பொது சமூகத்தை சாதி ஒழிப்பிற்கு அழைத்து வருவது என்பதை உணர்ந்து இருக்கின்றனர் சிறுத்தைகள்.
– எவிடென்ஸ் கதிர்