வசந்த முல்லை – விமர்சனம்
நடிப்பு: பாபி சிம்ஹா, காஷ்மீரா பர்தேசி, ஆர்யா, சரத்பாபு, கொச்சு பிரேமன், ரமா பிரபா மற்றும் பலர்
இயக்கம்: ரமணன் புருஷோத்தமா
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்
இசை: ராஜேஷ் முருகேசன்
தயாரிப்பு: ரஜனி தல்லூரி, ரேஷ்மா சிம்ஹா
பத்திரிகை தொடர்பு: யுவராஜ் (யுவி கம்யூனிகேசன்)
தூங்க வேண்டிய நேரத்தில், தூங்க வேண்டிய அளவு தூங்க வேண்டும் என்பது பெரியோர் அறிவுரை. இதை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை விறுவிறுப்பான த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் நல்ல படம் தான் ‘வசந்த முல்லை’.
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ருத்ரனுக்கு (பாபி சிம்ஹா), சீக்கிரம் எக்கச்சக்கமாக பணம் சம்பாதித்து, விரைவில் செட்டில் ஆக வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக, குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்று அவரது கைக்கு வருகிறது. பணம் ஈட்டும் வெறியில் நாள் கணக்கில், இரவு பகல் பாராமல், தூங்காமல் தொடர்ந்து வேலை பார்க்கும் ருத்ரன் மன அழுத்தத்துக்கு ஆளாவதோடு, கண்ணில் கோளாறு ஏற்பட்டு ’ப்ளாக்அவுட்’ நோயால் பாதிக்கப்படுகிறார்.
அவரை பரிசோதிக்கும் மருத்துவர், வேலையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, ஜாலியாக சுற்றுலா போய்வருமாறு அறிவுரை கூறுகிறார். அதன்படி, தன் காதலி நிலாவோடு (காஷ்மீரா பர்தேஸி) காரில் சுற்றுலா செல்கிறார் ருத்ரன். அப்படி போகும்போது, வழியில், அடர்ந்த காட்டுப்பகுதியில், இரவில், தனியாக இருக்கும் ‘வசந்த முல்லை’ என்ற விடுதியில் தங்குகிறார்கள்.
அங்கு காதலி நிலாவுக்கு திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட, மருந்து வாங்குவதற்காக ருத்ரன் அந்த இரவு நேரத்தில் காரில் விரைகிறார்.. திரும்ப விடுதிக்கு வரும்போது, அவருடைய காதலி மாயமாகி விடுவதோடு, விடுதியில் இருக்கும் பெரியவர் ருத்ரனை யார் என்று தெரியாதவாறு நடந்துக்கொள்வதோடு, அவர் அங்கு தங்கவில்லை என்றும் கூறுகிறார். இதனால் குழப்பமடையும் ருத்ரன், நிஜத்தையும், தனது காதலியையும் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை எதிர்பாராத திருப்பங்களுடனும், விறுவிறுப்புடனும் சொல்வது தான் ‘வசந்த முல்லை’ படத்தின் மீதிக்கதை.
குறைந்த எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதையில், நாயகன் ருத்ரனாக வரும் பாபி சிம்ஹா தனியொரு ஆளாக மொத்தப் படத்தையும் தாங்கிச் செல்கிறார். பணி சுமையால் பாதிக்கப்படும் காட்சிகளிலும் சரி, தங்கும் விடுதியில் நடக்கும் குழப்பமான சம்பவங்களிலும் சரி, நடிப்பில் அசத்துகிறார். ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும் தனது மாறுபட்ட நடிப்பால் ஒட்டு மொத்த திரையரங்கையே சிம்ஹா கட்டிப்போட்டு விடுகிறார்.
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில், காதலி நிலாவாக வரும் காஷ்மீரா பர்தேசி அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கவும் செய்கிறார். அவர் ‘ருத்ரா… ருத்ரா’ என கதறும் காட்சிகளில் நம் கண்கள் கலங்குகின்றன,
சிறப்புத் தோற்றத்தில் நட்புக்காக வரும் ஆர்யா திகிலும், திருப்பமும் ஏற்படும் வண்ணம் சிறப்பாக நடித்திருக்கிறார். மருத்துவராக வரும் சரத்பாபு, தங்கும் விடுதி பணியாளர்களாக வரும் கொச்சு பிரேமன், ரமா பிரபா ஆகியோர் அவர்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அளவாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
வித்தியாசமான திரைக்கதையில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் டைம்லூப் உள்ளிட்ட சில திருப்பங்களுடன் கதையை நகர்த்தி செல்லுகிறார் இயக்குநர் ரமணன் புருஷோத்தமா. அதன்படி இன்டர்வல் ப்ளாக் திருப்பமும், சம்பவங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்ற ஆர்வமும் மேலோங்கச் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். இறுதி வரை சஸ்பென்ஸை கட்டிக் காப்பாற்றியிருப்பது சிறப்பு. எளிமையான சஸ்பென்ஸ் திரில்லர் கதையை யூகிக்க முடியாத திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மூலம் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார்.
ராஜேஷ் முருகேசன் பின்னணி இசையும், கோபி அமர்நாத்தின், ஒளிப்பதிவும் கதைக்கு தேவையான பங்களிப்பை செலுத்துகின்றன.
பணத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் உடல்தான் பிரதானம் என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பது நன்று, ‘தூங்கி எழ அலாரம் வைக்குறோம்… நம்மல்ல யாராச்சும் சரியான நேரத்துல தூங்குறதுக்கு அலாரம் வைக்கிறோமா?’ என்பன போன்ற அழுத்தமான வசனங்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன.
வசந்த முல்லை – பரபர த்ரில்லர்; கண்டு களிக்கலாம்!