வருணன் காட் ஆஃப் வாட்டர் – விமர்சனம்

நடிப்பு: ராதாரவி, சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேபிரில்லா, ஹரிபிரியா, சங்கர்நாக் விஜயன், பிரியதர்ஷன், ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், கிரண்மயி, பேபி ஜாய்ஸ், ஐஸ்வர்யா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜெயவேல் முருகன்

ஒளிப்பதிவு: எஸ். ஸ்ரீராம் சந்தோஷ்

படத்தொகுப்பு: யு.முத்தையன்

இசை: போபோ சசி

தயாரிப்பு: யாக்கை ஃபிலிம்ஸ்

தயாரிப்பாளர்: கார்த்திக் ஸ்ரீதரன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

’நீரின்றி அமையாது உலகு’ என்கிறது திருக்குறள். அப்படிப்பட்ட தண்ணீர் வருங்காலத்தில் பணம் கொடுத்து வாங்கும் விற்பனைச் சரக்காக மாறும் என்று சொன்னால், அது இலவசமாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த நம் தாத்தா – பாட்டி காலத்தில் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். ஆனால் இன்று அது தான் துயரமான யதார்த்தம். முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் ஏற்பட்டுள்ள இந்த கெடுவாய்ப்பான மாற்றம் காரணமாக குடிதண்ணீர் சப்ளை செய்வது தனியார் லாபம் கொழிக்கும் புதிய வியாபாரமாக உருவாகி, அதனுள் வியாபாரப் போட்டி, பொறாமை, அடி-தடி, வெட்டுக்குத்து, கொலை போன்ற அனைத்து சமூகத் தீமைகளும் புகுந்து அபாயகரமாகப் பெருகி வருகிறது. இதுவரை தமிழ்ச்சினிமாவில் சொல்லப்படாத இந்த புதிய கதைக்கருவை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ‘வருணன் காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படம்.

வடசென்னையில் உள்ள ராயபுரம் பகுதியை இரண்டு ஏரியாக்களாகப் பிரித்துக்கொண்டு, ஒரு ஏரியாவில் அய்யாவுவும் (ராதாரவி), இன்னொரு ஏரியாவில் ஜானும் (சரண்ராஜ்) தண்ணீர் கேன் சப்ளை செய்யும் பிசினஸ் செய்து வருகிறார்கள். இவர்களில் தொழிலதிபர் அய்யாவு, நாயகன் தில்லையை (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்) ஊழியராக வைத்துக்கொண்டு இந்த பிசினஸை நேர்மையாக நடத்திக்கொண்டு வருகிறார். ஆனால், தொழிலதிபர் ஜானும், அவரது மனைவி ராணியும் (மகேஸ்வரி), ராணியின் தம்பி டப்பாவின் (சங்கர்நாக் விஜயன்) உதவியுடன் குடிதண்ணீரோடு, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சுண்டக்கஞ்சியையும் சப்ளை செய்து வருகின்றனர்.

தொழிலதிபர்களான அய்யாவுக்கும் ஜானுக்கும் இடையில் நேரடி மோதல் இல்லை என்றாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள். இதனிடையே, போலீஸ் அதிகாரியான மதுரை வீரன் (ஜீவா ரவி), தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வியாபாரத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க விரும்புகிறார். இதற்காக அய்யாவுவுக்கு இணக்கமாகவும், ஜான் மற்றும் அவரது மனைவி ராணி, மைத்துனர் டப்பா ஆகியோருக்கு எதிராகவும் செயல்பட்டு, அய்யாவுவின் பங்குதாரர் ஆக முயற்சிக்கிறார். ஆனால், கூட்டு பிசினஸுக்கு அய்யாவு தயாராக இல்லை என்பது தெரிந்தவுடன், போலீஸ் அதிகாரி மதுரை வீரன் அய்யாவுவை பகைத்துக்கொண்டு, ஜான் கும்பலுடன் இணைந்துவிடுகிறார்.

இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வியாபாரப் போட்டி பெரும் பகையாக உருவாகி, ஒருவரையொருவர் கொலை செய்கிற அளவுக்கு குரோதம் வளர்கிறது. இதனால் அவர்களது வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது? தண்ணீர் கேன் வியாபாரப் பகை முடிவுக்கு வந்ததா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்‌ஷன் மூலம் விடை அளிக்கிறது ‘வருணன் காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, தண்ணீர் கேன் சப்ளை செய்யும் ஊழியர் தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ் நடித்திருக்கிறார். காதல், நட்பு, வீரம் உள்ளிட்ட உணர்வுகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக, சிட்டு என்ற கதாபாத்திரத்தில் ‘பிக்பாஸ் தமிழ்’ கேபிரில்லா நடித்திருக்கிறார். நாயகனை காதலிப்பதைத் தவிர கதையில் அவருக்கு வேறு எந்த முக்கியத்துவமும் இல்லை. என்றாலும், கொடுத்த வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.

மற்றொரு நாயகனாக, மருது என்ற கதாபாத்திரத்தில் பிரியதர்ஷனும், அவருக்கு ஜோடியாக அக்னி என்ற கதாபாத்திரத்தில் ஹரிபிரியாவும் நடித்திருக்கிறார்கள். இருவரும் அளவாக நடித்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

குடிதண்ணீர் பிசினஸ் செய்யும் தொழிலதிபர் அய்யாவுவாக ராதாரவி நடித்திருக்கிறார். வம்புச் சண்டைக்குப் போகாதவராக, அதே நேரத்தில் எதிலும் கறார் காட்டும் நபராக குணச்சித்திர நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

குடிதண்ணீர் பிசினஸ் செய்யும் மற்றொரு தொழிலதிபர் ஜானாக சரண்ராஜ் நடித்திருக்கிறார். திக்குவாய் குறைபாடு உடையவராக, முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உள்ளவராக அழகாக நடித்திருக்கிறார். அவரது மனைவி ராணியாக ‘பிக்பாஸ் தமிழ்’ மகேஸ்வரி நடித்திருக்கிறார். அவரும் அவரது தம்பி டப்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் சங்கர்நாக் விஜயனும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரி மதுரை வீரனாக வரும் ஜீவா ரவி, யாளியாக வரும் அர்ஜுனா கீர்த்திவாசன், ரம்யாவாக வரும் கிரண்மயி, துளசியாக வரும் பேபி ஜாய்ஸ், சீமாவாக வரும் ஐஸ்வர்யா உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல் முருகன். நகரத்தில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வியாபார நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் அரசியலை காதல் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் உள்ள கேங்ஸ்டர் படமாக உருவாக்கி, அதன்மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார். கதைக்கரு புதியது என்பதால், இதைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் அனுபவமும் புதியதாக இருக்கிறது. இலவசமாக கிடைத்துக்கொண்டிருந்த தண்ணீர் இப்போது சில தொழிலதிபர்களுக்கு லாபம் ஈட்டித்தரும் விற்பனைச் சரக்காக மாறிவிட்டது என்பதையும், இந்த வியாபாரத்தில் போட்டி. பொறாமை, சண்டை, கொலை உள்ளிட்ட பல சமூகத் தீமைகள் புகுந்துவிட்டதையும் அழகாக சித்தரித்துக் காட்டியிருக்கிறார். பாராட்டுகள்.

இசையமைப்பாளர் போபோ சசியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷின் கேமரா, வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறது.

‘வருணன் காட் ஆஃப் வாட்டர்’ – நிகழ்கால நிலைமைகளைப் புரிந்துகொள்ள அவசியம் பார்க்க வேண்டிய படம்!

ரேட்டிங்: 3/5