துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கும் ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர் ‘ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

யாக்கை பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வருணன் – காட் ஆஃப் வாட்டர்’ திரைப்படத்தில் டத்தோ ராதாரவி, சரண்ராஜ் , துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, சங்கர் நாக் விஜயன், ஹரிப்பிரியா, மகேஸ்வரி, ஜீவா ரவி, அர்ஜுனா கீர்த்தி வாசன், ஹைடு கார்த்தி, பிரியதர்ஷன், கௌஷிக், துங்கன் மாரி, கிரண் மயி, பேபி ஜாயிஸ் , ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பை யு. முத்தையன் கையாள, கலை இயக்கத்தை பத்து கவனித்திருக்கிறார்.
‘நீரின்றி அமையாது உலகு’ எனும் டேக் லைனுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் வரும் 14-ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரை அரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் அன்புச்செழியன், இயக்குநர் சத்ய சிவா, நடிகர் கிருஷ்ணா, ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தின் தலைமை செயலாக்க அதிகாரி கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் அன்புச்செழியன் படத்தின் இசையை வெளியிட, படக்குழுவினரும், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் பெற்றுக் கொண்டனர்.

தயாரிப்பாளர் கார்த்திக் ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்று பேசுகையில், ”இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து எங்களை அன்பு மழையில் நனைய வைத்த தயாரிப்பாளர் அன்புச்செழியன் அவர்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘வருணன்’ திரைப்படத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் திரைக்கதையை எழுதி நிறைவு செய்து விட்ட பிறகு எங்களையும் எங்கள் குழுவினரையும் இயக்குநரின் தந்தை தயாரிப்பாளர் அன்புச்செழியனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் முழு திரைக்கதையையும் சமர்ப்பித்தோம். அவர் முழுமையாக வாசித்து விட்டு, ‘கதை நன்றாக இருக்கிறது. தயாரிப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கிறேன்’ என்றார். இப்படி சொன்னவுடன் எங்களுக்கெல்லாம் நம்பிக்கை பிறந்தது. அவருடைய வழிகாட்டுதலால் தான் இன்று நாங்கள் இந்த மேடையில் நிற்கிறோம். இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிய முதலீட்டு திரைப்படங்களின் நிலை என்ன என்று அனைவருக்கும் தெரியும். இந்தத் தருணத்தில் எங்களுடைய படம் நன்றாக இருக்கிறது என்பதாலும், அவர் கொடுத்த வாக்கினை காப்பாற்றுவதற்காகவும் இந்த திரைப்படம் திரு. அன்புச்செழியனின் உதவியுடன் வெளியாகிறது. படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இத்திரைப்படம் வரும் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
பாடலாசிரியர் ஹைடு கார்த்தி பேசுகையில், ”இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நானும் நடித்திருக்கிறேன். இசையமைப்பாளர் போபோ சசியின் ஆதரவால் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். இதில் கேங்க்ஸ்டர் பற்றிய ‘கோளாறு’ எனும் பாடலை நானே எழுதி, பாடியிருக்கிறேன். இந்த திரைப்படத்தில் ஐந்து நிமிட கால அவகாசத்திற்கு ஒரே ஷாட்டில் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும்,” என்றார்.
நடிகர் சங்கர் நாக் விஜயன் பேசுகையில், ”இந்தத் திரைப்படம் எங்களுக்கு நீண்ட நெடிய பயணம். நானும், இயக்குநரும் பால்ய காலத்து நண்பர்கள். அவர் குறும்படங்கள் இயக்கத் தொடங்கிய காலத்தில் இருந்தே நன்கு அறிமுகம். அவர் இயக்கிய குறும்படங்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நீ தான் நடிக்க வேண்டும் எனக் கூறினார். உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்திலிருந்து இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பணிகள் தொடங்கிய முதல் நாளிலிருந்து அன்புச்செழியனின் ஆதரவு இருக்கிறது. அது தற்போது வரை தொடர்கிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் உச்சகட்ட சண்டைக் காட்சியில் நடித்த போது உண்மையில் பதட்டமாக இருந்தேன். அதை படமாக்கும் போது சண்டை பயிற்சி இயக்குநர் மற்றும் அவரது குழுவினர் எங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கி சிறப்பாக இயக்கினர். எங்களின் அழைப்பை ஏற்று இத்திரைப்படத்தை காண வந்ததுடன் இன்று வரை தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்தின் நிர்வாகியான கவிதா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
ஸ்ரீதர் மாஸ்டர் பேசுகையில், ”இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் ‘ஆவ்சம் பீலு ‘ பாடலுக்கான உருவாக்கத்தின் போது இணைந்து பணியாற்றியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பாடல் காட்சியில் நடிகர் ஜெயப்பிரகாஷின் வாரிசான துஷ்யந்த் பிரகாஷ் அற்புதமாக நடனமாடி இருந்தார். இந்த பாடலுக்கான புரமோவை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் விளம்பரப்படுத்தி இருந்தார். ஒரு பாடலுக்கான ப்ரோமோவையே விளம்பரப்படுத்துவதற்கு கடின உழைப்பை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர், இப்படத்தினை அனைத்து மக்களிடத்திலும் கொண்டு சேர்ப்பதற்காக தொடர்ந்து உழைத்து வருகிறார். இந்தப் படத்தினை இயக்குநர் ஜெயவேல்முருகன் அற்புதமாக இயக்கியிருக்கிறார். திரையில் தோன்றும் போது ராதா ரவி போன்ற மூத்த நடிகர்களின் உச்சரிப்பு எங்களைப் போன்ற ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அனைவருக்கும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.
தற்போது ஒவ்வொருவருடைய வீட்டிலும் தண்ணீர் கேன் இல்லாமல் இருப்பதில்லை. அந்த தண்ணீர் கேனை வீட்டிற்கு எடுத்து வரும் நபர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. இதுபோல் அனைத்து தரப்பினரையும், ரசிகர்களையும் தொடர்பு கொள்ளும் தண்ணீர் கேனை பற்றிய படம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
ஆஹா சிஇஓ கவிதா பேசுகையில், ”இந்த மேடையில் இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். ஆஹா டிஜிட்டல் தளத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் இடையேயான தொடர்பும், பயணமும் தொடங்கி ஒன்பது மாதங்கள் ஆகிறது. இப்படத்தின் ஸ்னீக் பீக்கை பார்த்ததும் சிறந்த படம் என கருதினோம். பார்ப்பதற்கு புதிதாகவும், இசை சிறப்பானதாகவும் இருந்தது. ஆஹா டிஜிட்டல் தளம் எப்போதும் புதிய, இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும். தமிழ் சினிமாவிற்கு இது முக்கியமான பங்களிப்பு என நாங்கள் கருதுகிறோம். சிறிய முதலீட்டு திரைப்படமாக இருந்தாலும் இப்படமும் பெரிய வெற்றி படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இப்படத்துடன் பயணிக்கிறோம். இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா கைப்பற்றி இருக்கிறது.
படத்தின் இயக்குநரான ஜெயவேல் முருகன் புதுமுக இயக்குநர் போல் இல்லாமல் அனுபவமிக்க இயக்குநரை போல் அவருடைய படைப்பு இருந்தது. தண்ணீர் கேன் என்றொரு விஷயத்தை எடுத்துக் கொண்டு இப்படி ஒரு சிறப்பான படத்தை வழங்கி இருக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் சபேஷ் பேசுகையில், ”இப்படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷயம் இருப்பது நிச்சயமாக தெரிகிறது. தண்ணீர் கேனை வைத்து கதை சொல்லி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். எங்கள் குடும்பத்தில் ஒருவரான போபோ சசி இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் தர்ஷன் என்ற எங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் நடித்திருக்கிறார். இந்தப் படம் பெரிய வெற்றியை பெறும் என நம்புகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் அன்புச்செழியன் பேசுகையில், ”வருணன் படத்தை பார்த்து விட்டேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் அனைவரது வீட்டிலும் வாட்டர் கேன் இருக்கும். அந்த தண்ணீர் கேனை வைத்து இயக்குநர் ஜெயவேல் முருகன் அற்புதமான படத்தை இயக்கியிருக்கிறார்.
ஜெயவேல் முருகன் எப்போதும் என் அலுவலகத்தில் இருப்பவர். இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியீட்டிற்கு அவருக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். இது ஒரு சின்ன படம். ரிலீஸ் செய்வது கடினம் என்பது தெரியும். அவருடைய உழைப்பு மற்றும் அவருடைய குழுவின் உழைப்பு வீணாகக் கூடாது என்பதற்காகவும், இந்த இளைஞர்களின் கனவு நனவாக வேண்டும் என்பதற்காகவும், வரும் வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் வெளியாகிறது. வருணன் படக்குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று நிறைய ஓடிடி தளங்கள் இருந்தாலும் சினிமா வியாபாரம் என்பது சுமார் தான். இதுபோன்ற கடினமான காலகட்டத்தில் ‘வருணன்’ படத்தை வெளியிடுகிறார்கள். இதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் முரளி பேசுகையில், ”இந்த திரைப்படம் உண்மையில் ஒரு தரமான படம் என்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. இது சின்ன படம் என்கிறார்கள். இது சின்ன படமே இல்லை. இது பெரிய படம். இந்த திரைப்படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருந்தேன். ஏனெனில் கடினமாக உழைத்திருந்தார்கள். இந்தப் படத்திற்கு போபோ சசி இசையமைத்திருக்கிறார். எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன. அதிலும் பாடல்களில் சவுண்ட் புதிதாக இருக்கிறது. ரிதம் வித்தியாசமாக இருக்கிறது. இது ஒரு புது முயற்சி. இதற்காக போபோ சசிக்கு வாழ்த்துகள். ராதாரவி ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய வெற்றி படம். அந்த வகையில் இந்த படமும் வெற்றிப் படம் தான். இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில்,”இப்படத்தின் இயக்குநர் எடுத்திருக்கும் கதை தண்ணீர் கேன். இந்தப் பிரச்சனை 10 வருஷத்திற்கு முன்னாலும் இருந்தது இன்னும் 50 வருஷத்திற்கும் இருக்கும். இப்படத்தின் கதை அவுட்டேட்டட் அல்ல. அனைவருக்கும் நெருக்கமான கதை தான். இந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ராதாரவி , ஜீவா ரவி, துஷ்யந்த் என அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கன்டென்ட் அனைவருக்கும் ரீச் ஆக வேண்டும் என்றால் இவர்களைப் போன்ற சிறந்த நடிகர்களால் தான் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியும். கதாசிரியர்கள் கதாபாத்திரத்தை எழுதினாலும்.. அதை உள்வாங்கி திரையில் நடிக்கக்கூடிய ஆற்றல் மிக்க நடிகர்கள் தேவை. இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் வழங்கி இருக்கிறார்.
காசை கொட்டிக் கொடுத்து ரிச் ஆக எடுத்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று இல்லை. இந்தக் குழுவினரிடம் பணம் இல்லை. ஆனால் நிறைய புத்திசாலித்தனம் இருந்தது. அத்துடன் தன்னம்பிக்கையும் இருந்தது. சில ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை துளி அளவு கூட குறையவில்லை. படத்தை வெளியிடுவதற்காக குழுவினரின் புதிய முயற்சியை பாராட்ட வேண்டும்.
இப்படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. ஒட்டுமொத்த குழுவினரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இப்படம் அன்புச்செழியனின் ஆதரவுடன் வெளியாகிறது.
இப்படத்திற்காக பாடலை பாடி ஒத்துழைப்பு வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், சைந்தவிக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் உச்சகட்ட சண்டை காட்சி நிச்சயம் வரவேற்பை பெறும். இது சின்ன பட்ஜெட் படம் அல்ல என்பதை இந்த காட்சி நிரூபிக்கும். ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்,” என்றார்.
நடிகை ஹரிப்பிரியா பேசுகையில், ”நான் இந்த தருணத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்தப் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. இதற்காக நான் தவம் இருந்திருக்கிறேன். நான் எந்த கோயிலுக்கு சென்றாலும் இந்த படம் வெளியாக வேண்டும் என்ற பிரார்த்தனையை செய்ய தவறுவதில்லை. இந்தத் திரைப்படம் எனக்கு மேஜிக் போன்றது. என்னைப் பொறுத்தவரை இந்த திரைப்படம் தான் ஸ்டார்ட்டிங் பாயிண்ட். என்னுடைய பயணம் இனிமேல் தான் தொடரப் போகிறது. இதற்காக இயக்குநர் ஜெயவேல் முருகனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு கே. பி. சாரை மிகவும் பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவருடைய உதவியாளரான ஜெயவேல் முருகனுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
நான் யுவனின் தீவிர ரசிகை. நான் நடித்திருக்கும் காட்சிக்கு அவர் பாடியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் எங்களுக்கு உதவிய மக்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை வெளியிடுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கும் அன்புச்செழியனுக்கும் நன்றி” என்றார்.
நடிகர் கிருஷ்ணா பேசுகையில், ”இது எங்களுடைய ஃபேமிலி ஃபங்ஷன். என் தம்பி சங்கர் நாக் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். என்னை பொருத்தவரை சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. ஓடும் படம்.ஓடாத படம் இந்த இரண்டு தான் இருக்கிறது. நல்ல கதை என்றால் அனைவரும் ஆதரிப்பார்கள். கதை நன்றாக இருந்தால் தான் ராதாரவி நடிப்பார். இந்த படத்தில் ராதாரவியும் நடித்திருக்கிறார். நான் இந்த படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் ராதாரவி பேசுகையில், ”இந்த காலத்தில் எவ்வளவு வேகமாக இயங்க வேண்டும் என்பதை இந்த குழுவினரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன்.
நான் இந்த படத்தில் இயக்குநரின் தந்தைக்காக நடிக்க ஒப்புக்கொண்டேன். அவர் பெயர் கருணாநிதி. எனக்கு மிகவும் பிடித்த பெயர் இது. அன்புச்செழியனின் அலுவலகத்தில் பணியாற்றுபவர். நான் அந்த வழியாக தினமும் கடந்து செல்வேன். அந்த நேரத்தில் கருணாநிதி இருந்தால் அலுவலகத்தில் அன்புச்செழியன் இருக்கிறார் என்று அர்த்தம்.
இப்படத்தின் ஹீரோ ஜெயப்பிரகாஷின் மகன் என்றதும் சந்தோஷமாக இருந்தது. இதில் பணியாற்றி இருக்கும் அனைவரும் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்றார்கள்.
நான் கேமரா முன்னால் நன்றாக நடிப்பேன். அனைவரையும் பற்றி குறிப்பிட வேண்டும் என விரும்புவேன். இந்த விஷயத்தை டாக்டர் கலைஞரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். சில முறை அவர் என் பெயரை குறிப்பிட மறந்து விடுவார். எனக்கு கோபம் வரும். ஆனால் பேசும்போது இதை கவனித்து விட்டு ‘தம்பி ராதா ரவி குறிப்பிட்டது போல்..’ என சொல்வார். அவரிடமிருந்து இது போன்ற நல்ல விஷயங்களை மட்டும் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு அனைவரும் வரவேண்டும். அதுதான் இந்த படம் வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
இந்தப் படம் நன்றாக இருக்கும். நான் இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை இருந்தும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால்.. தண்ணீர் கஷ்டம் கடுமையாக இருக்கிறது. அதை வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் இந்தப் படம் நிச்சய வெற்றி பெறும். இது தண்ணீரில் எழுத வேண்டிய எழுத்தல்ல கல்வெட்டாக இருக்க வேண்டும். இந்தப்படம் இன்றைய சூழலுக்கு நிச்சயம் கல்வெட்டாக இருக்கும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த இயக்குநருக்கும் குழுவினருக்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்,” என்றார்.
இயக்குநர் சத்யசிவா பேசுகையில், ”முதலில் இந்தப் படத்தின் இயக்குநரை பற்றி பேச வேண்டும். நான் எப்படி முதல் படத்தினை இயக்கி விட்டு ஆர்வத்துடன் எந்த உணர்வுடன் காத்திருந்தேனோ அதே உணர்வில் இவரும் இருக்கிறார். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், கஷ்டப்பட்டு இருக்கிறார். சின்ன படங்களுக்கு தியேட்டரை தவிர வேறு எந்த வியாபாரமும் இல்லை. அதனால் இந்த படம் வெளியாகிறது என்றாலே அவருக்கு சந்தோஷம் தான். இயக்குநருக்கு இதுவே வெற்றிதான்.
இந்தப் படத்தில் சங்கர் நாக் நடித்திருக்கிறார். இவர் எங்களுடைய குடும்ப நண்பர். இவர் எங்களுடைய குடும்ப விழாவிற்கு அழைத்தாலும் கூட வரமாட்டார். இந்த படத்தின் பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்று சொல்லிவிடுவார். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அவர் எவ்வளவு கடினமாக உழைத்து இருக்கிறார் என்று தெரிய வருகிறது. அவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என நான் நம்புகிறேன்.
இளைஞர்கள் ஒன்று கூடி தங்களின் கனவுகளை படைப்பாக நனவாக்கி இருக்கிறார்கள். இதற்கு உங்களின் ஆதரவு தேவை. வெற்றி பெற வேண்டும் என நானும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
நடிகை கேப்ரியல்லா பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. வருணனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிஜ வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை வைத்து எந்தவித டிராமாவும் இல்லாமல் அழகான சினிமாவை உருவாக்கி இருக்கிறோம். இது போன்ற யதார்த்தமான கதை உள்ள படத்தில் எனக்கும் வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நான் இரண்டு பாடலுக்கு நடனமாடுகிறேன். இதுவே எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் சிட்டு.
நாம் அனைவருக்கும் தண்ணீர் எவ்வளவு அவசியம் என்று தெரியும் ஆனாலும் தெரியாதது போல் இருக்கிறோம். இந்த வருணன் படத்தின் மூலம் தண்ணீருடைய அவசியம் பற்றி அனைவருக்கும் தெரியவரும். இந்தப் படத்தை பொழுதுபோக்குடன் இயக்குநர் சொல்லி இருக்கிறார். இது போன்ற குழுவில் பணியாற்றி நான் ஒன்றை மட்டும் தான் கற்றுக் கொண்டிருக்கிறேன் ‘நெவர் கிவ் அப்’.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மார்ச் 14ம் தேதி அன்று வெளியாகும் வருணன் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் பேசுகையில், ”வருணன் படத்தில் முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நினைவில் இருக்கிறது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் இரண்டு பயங்களை வென்றிருக்கிறேன். முதலில் எனக்கு உயரம் என்றால் பயம். ஆனால் இந்த படத்தில் 120 அடி உயரத்தில் சண்டைக் காட்சிகள் நடித்திருக்கிறேன். டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் என்றாலும் பயம்.
அவருடைய இயக்கத்திலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கும், ஸ்ரீதர் மாஸ்டருக்கும் நன்றி. இப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படம் மார்ச் 14ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் போபோ சசி பேசுகையில், ”இந்த படத்திற்கு என்னை நம்பி வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி. படத்தின் இயக்குநரும் அவருடைய முதல் படத்தில் என் மீது நம்பிக்கை வைத்தார். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி விட்டேன் என நினைக்கிறேன். பாடல்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஐந்து பாடல்கள்.. ஐந்தும் ஐந்து வெரைட்டியாக இருக்கும். ஒரு பாடலை யுவன் சார் பாடியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜீ. வி.பி சாரும் சைந்தவி மேடமும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு சிங்கிள் ஷாட் இடம் பெறுகிறது. அந்த காட்சிக்கு பின்னணி இசை அமைப்பது கடும் சவாலாக இருந்தது. இந்த காட்சிக்காக இயக்குநரும் நானும் இணைந்து மூன்று நாட்கள் உழைத்தோம். மிகச் சிறப்பாக அந்தக் காட்சி அமைந்திருக்கிறது. இந்தக் காட்சி பேசப்படும் என நம்புகிறேன். அனைவரும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ஜெயவேல் முருகன் பேசுகையில், ”இது போன்ற சின்ன பட்ஜெட் படங்களுக்கு என்னுடைய நண்பர்கள் உதவி இருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களைத் தொடர்ந்து அன்பு சார் இவரை நான் காட் ஆப் சினிமா ( God of Cinema) என்றுதான் சொல்வேன். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் கே பி சார் ஸ்கூலில் இருந்து வந்தவன். அன்பு சார் யுனிவர்சிட்டி. அவருடைய ஆதரவு இல்லை என்றால் இந்த திரைப்படம் இவ்வளவு தூரம் வந்திருக்காது.
இது கன்டென்ட் மூவி. தண்ணீரை பற்றிய ஒரு படம். வட சென்னை தான் கதைக்களம். ஆண்டவர் வாட்டர் சப்ளை என்ற பெயரில் மதுரையிலிருந்து இங்கு வந்து தண்ணீர் கேன் சப்ளை செய்பவராக ராதாரவி நடித்திருக்கிறார். ஜான் வாட்டர் சப்ளை என்று சென்னையிலே பிறந்து சென்னையில் வாட்டர் சப்ளை செய்பவர் சரண் ராஜ். இந்த இரண்டு பேருக்கு இடையே நடைபெறும் மோதல் தான் படத்தின் கதை.
இந்தப் படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த சத்யராஜிற்கு நன்றி. இந்தப் படத்தின் கதையை வருண பகவானின் கோணத்திலிருந்து சொல்லி இருக்கிறோம்.
யுவன் சங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ் குமார், சைந்தவி ஆகியோருக்கும் நன்றி.
ஐம்பூதங்களை பற்றிய ஒரு கதை தான் இது. நாம் என்றைக்கு தண்ணீரை காசு கொடுத்து வாங்க ஆரம்பித்தோமோ அன்றிலிருந்து இந்த இயற்கையின் சாபம் நம்மை துரத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் இந்த படத்தின் டேக் லைன், ஒன் லைன்.
இதில் தண்ணீரைப் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். தண்ணீர் கேன் சென்னைக்கு 95ம் ஆண்டில் அறிமுகமானது. அதன் பிறகு அது மிகப்பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. நல்ல சுத்தமான தண்ணீர் எங்கும் கிடைக்கவில்லை. அதுதான் உண்மை. தண்ணீர் சேமிப்பு குறித்து எங்களால் முடிந்தவரை இந்த படத்தில் சொல்லியிருக்கிறோம். தண்ணீரால் வரும் பிரச்சனைகளை பற்றியும் சொல்லி இருக்கிறோம்.
எல்லோரும் எல்லா வேலையும் செய்கிறார்கள். நான் என்னுடைய நண்பனின் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை தழுவித்தான் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறேன். அனைவரும் இந்தத் திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தாருங்கள். நீரின்றி அமையாது உலகு,” என்றார்.