“கூட்டுக் குடும்பமாக வாழும் மலையக மக்களை பற்றிய படம் ‘வனமகன்!” – ஜெயம் ரவி
திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குனர் விஜய். படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படமாகவும் அமைந்திருக்கிறது. வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
“ஏசி ரூம்ல உட்கார்ந்து ஈஸியா பாடல் எழுதி கொடுத்துட்டேன். ஆனா மொத்த டீமும் காட்டுல கஷ்டப்பட்டு பாட்டை ஷூட் பன்ணிட்டு வந்துருக்காங்க. பழங்குடியினர் வாழ்க்கையைச் சொல்லும் ஒரு மிக முக்கியமான படம். ஜெயம் ரவி இந்த மாதிரி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் அவர் படத்தில் வேலை செய்யும் மற்ற கலைஞர்கள் அவர்களின் திறமையை வேறு பரிமாணத்தில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்றார் மதன் கார்க்கி.
“மனித உழைப்பை அதிகப்படுத்திய ஒரு படம் தான் ‘வனமகன்’. ‘மைனா’, ‘கும்கி’ படங்களுக்குப் பிறகு ஒரு இடைவெளி விட்டு காடு, மலை, பள்ளத்தாக்கு என நான் அலைந்து திரிந்து நடித்துள்ள படம். ஆதிவாசி மனிதனை மிகவும் நேர்மையான முறையில் சித்தரித்து விஜய் இயக்கியிருக்கிறார். 24 துறைகளும் மிகவும் ஆராய்ச்சி செய்து வேலை செய்துள்ள படம் தான் ‘வனமகன்’. பழம்பெரும் நடிகர் திலீப் குமார் அவர்களின் மகள் வழி பேத்தி சாயிஷா ஒரு பேரழகி. அதனால் தான் முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ‘பேராண்மை’ படத்தில் ஜெயம் ரவி எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருந்தாலும், அதையும் தாண்டி இதில் இன்னும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்” என்றார் நடிகர் தம்பி ராமையா.
“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. ‘வனமகன்’ அப்படி ஒரு படம். ஜெயம் ரவி இல்லாமல் இந்த ‘வனமகன்’ இல்லை. அபாரமாக உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுமையான நடிகையாக சாயிஷா கிடைத்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த டான்ஸர். சில்வா மாஸ்டரின் சண்டை வடிவமைப்பு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்கும். வினியோகஸ்தர்கள் தயவு செய்து எல்லா படத்தையும் ஆதரிக்க வேண்டும். படத்தின் பட்ஜெட் தான் விலையை நிர்ணயிக்கிறது. நீங்கள் ஆதரவு கொடுத்தால் தான் ‘பாகுபலி’, ‘சங்கமித்ரா’ மாதிரி படங்கள் வர முடியும். தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார் இயக்குனர் விஜய்.
“கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் இந்த படம் உருவாகியிருக்ககிறது. ‘நான் மட்டும் தான் ஈஸியா வேலை செஞ்சேன்’னு மதன் கார்க்கி சொல்றதுலாம் சுத்த பொய். அவர் மூளையை கசக்கி கஷ்டப்பட்டு தான் பாட்டு எழுதியிருக்கிறார். என் படத்தில் நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க. இயக்குனர் விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம். தமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க. போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி படம் ஓடலைனா சம்பளம் வாங்காமல் இயக்குனர் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்” என்றார் நாயகன் ஜெயம் ரவி.
நடிகர் சண்முகராஜன், சாம் பால், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.