வல்லவன் வகுத்ததடா – விமர்சனம்
நடிப்பு: தேஜ் சரண்ராஜ், ராஜேஷ் பாலச்சந்திரன், அனன்யா மணி, ஸ்வாதி மீனாட்சி, விக்ரம் ஆதித்யா, ரெஜின் ரோஸ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: விநாயக் துரை
ஒளிப்பதிவு: கார்த்திக் நல்லமுத்து
படத்தொகுப்பு: அஜய்
இசை: சகிஷ்னா சேவியர்
தயாரிப்பு: ’ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ்’ விநாயக் துரை
பத்திரிகை தொடர்பு: சதீஷ் – சிவா (எய்ம்)
மகாபாரதக் கதையை மையமாகக் கொண்டு, சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைக்காவியம் ‘கர்ணன்’. அதில், போர்க்களத்தில் படுகாயமுற்று, குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் கர்ணனின் உயிரைத் தானம் பெறுவதற்காக, “உள்ளத்தில் நல்ல உள்ளம்…” என்ற – எக்காலத்துக்குமான – அருமையான பாடலைப் பாடியபடி வருவான் சூழ்ச்சிக்கார கிருஷ்ண பரமாத்மா. அந்த பாடலில் வருவது தான் “எல்லாம் இறைவன் செயல்” எனப் பொருள்படும் “வல்லவன் வகுத்ததடா” என்ற வரி. இந்த வரியையே தலைப்பாகக் கொண்டிருக்கும் இப்படம், எதை ”இறைவன் செயல்” எனச் சொல்லுகிறது? பார்ப்போம்…
இக்கதையில் ஐந்து தீயவர்கள், ஒரு நல்லவர் என மொத்தம் ஆறு முக்கிய நபர்கள் இருக்கிறார்கள்…
முதல் நபர் அகல்யா (அனன்யா மணி). அவரது மோசடிக்காதலில் இருந்து தான் படம் ஆரம்பமாகிறது. அவரது அழகிலும், தேனொழுகும் பேச்சிலும் சொக்கிப் போகும் அவரது காதலன், அவருக்குப் பிடித்த விலையுயர்ந்த நகையை வாங்கிக் கொடுக்கிறார். குறிப்பிட்ட ஒரு வெட்டவெளியை சுட்டிக்காட்டும் அகல்யா, “இது ஒருகாலத்துல எங்களுக்குச் சொந்தமான நிலம். எங்கப்பாவோட குடியாலும் கெட்ட சகவாசத்தாலும் பறி போயிடுச்சு. எப்படியாவது இதை மீட்கணும்” என்று உருக்கமாகச் சொல்ல, அந்த நிலத்தை மீட்டுக்கொடுக்கிறார் காதலன். இப்படி தன்னை காதலிப்பவர்களை எல்லாம் ஏமாற்றி, பணம் பறித்து, சொகுசாக வாழ்ந்து வருபவர் அகல்யா.
இரண்டாவது நபர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமணி (ராஜேஷ் பாலச்சந்திரன்). தன் வலையில் மாட்டும் எல்லோரிடமும் எக்கச்சக்கமாக பணம் கறப்பவர். அவரது காவல் நிலையத்தில் இருக்கும் காவலரே தலையில் அடித்துக்கொள்ளும் அளவுக்கு பணப்பித்து பிடித்துத் திரிபவர்.
மூன்றாவது, நான்காவது நபர்கள் சிரஞ்சீவி (தேஜ் சரண்ராஜ்) மற்றும் சக்கரை என்ற சக்கரவர்த்தி (ரெஜின் ரோஸ்). இருவரும் நண்பர்கள். கூட்டுக் களவாணிகள். கார், பணம் என அடுத்தவர்களின் பொருள் எதுவாக இருந்தாலும் அபகரித்துக் கொள்பவர்கள்.
ஐந்தாவது நபர் குபேரன் (விக்ரம் ஆதித்யா). பெரிய பணக்காரர். வட்டிக்கு கடன் கொடுப்பவர். அவரிடம் கடன் வாங்கியவர்களால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாவிட்டால், அவர்களின் உடலுறுப்புகளை அபகரித்து விற்று, கடன்தொகையை மீட்டுக்கொள்பவர்.
ஆக, அகல்யா, இன்ஸ்பெக்டர் நீதிமணி, சிரஞ்சீவி, சக்கரவர்த்தி, குபேரன் ஆகிய ஐவரும் தான் அந்த தீயவர்கள்.
அடுத்து, ஒரே நல்லவரான ஆறாவது நபர். பெயர் சுபத்ரா (ஸ்வாதி மீனாட்சி). ஒரு காலத்தில் செல்வ செழிப்புடன் திகழ்ந்த இவரது குடும்பம், மற்றவர்களுக்கு உதவி செய்தே ஓட்டாண்டியாகி விட்டதால், இவரது அப்பா இப்போது ஏடிஎம் காவலாளி; சுபத்ரா கால் டாக்ஸி டிரைவர். இவரது தங்கையின் சீமந்தம் மற்றும் பிரசவ செலவுக்கு பணம் தேவைப்படுவதால், இவரது அப்பா வட்டிக்கு பணம் வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கிக் கொள்கிறார். அவர் வாங்கி வந்த பணம் காணாமல் போய் விடுகிறது. அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவச் செலவுக்கு பணம் கேட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாடுகிறார் சுபத்ரா. பணம் கிடைத்த பாடில்லை.
மேற்சொன்ன ஆறு கதாபாத்திரங்களுக்கும் ஒரே சமயத்தில் பண த் தேவை ஏற்படுகிறது. இந்த சமயத்தில் இரண்டு கோடி ரூபாய் பணம் உள்ள வாகனம் கை மாறுகிறது .இதில் உள்ள பணம் ,இறுதியில், இந்த ஆறு பேரில் யார் கையில் சென்றடைந்தது? என்பதே ‘வல்லவன் வகுத்ததடா’ திரைப்படத்தின் மீதிக்கதை.
அகல்யாவாக வரும் அனன்யா மணி, இன்ஸ்பெக்டர் நீதிமணியாக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன், சிரஞ்சீவியாக வரும் தேஜ் சரண்ராஜ், சக்கரவர்த்தியாக வரும் ரெஜின் ரோஸ், குபேரனாக வரும் விக்ரம் ஆதித்யா, சுபத்ராவாக வரும் சுவாதி மீனாட்சி ஆகியோர் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறை சொல்ல இடமின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
விநாயக் துரை இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ரொம்ப சிக்கலான கதையை தன்னிஷ்டத்துக்குத் தெளிவில்லாமல் குழப்பியடித்திருக்கிறார். ஏதோ புதுமை செய்வதாக நினைத்துக்கொண்டு, பகவத்கீதை நீட்டி முழக்கும் “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது…” என தொடங்கும் உபதேசத்தின் வரிகளை தலைப்புகளாகக் கொண்டு, படத்தை அத்தியாயங்களாகப் பிரித்திருக்கிறார். இந்த வெட்டிவேலை போதாதென்று, கிளைமாக்ஸில் ஒரு சாமியாரை பலவந்தமாகத் திணித்து, தான் இப்படத்தில் சொல்ல நினைத்த “சூழ்ச்சியும் தர்மம் தான்” என்ற கேடுகெட்ட கருத்தை அந்த சாமியார் மூலம் சொல்லியிருப்பது அபத்தம்.
கொஞ்சம் முற்போக்காக சிந்திக்கப் பழகியபின் அடுத்த படம் எடுப்பது பற்றி யோசிங்க, மிஸ்டர் விநாயக் துரை!