வல்லமை – விமர்சனம்

நடிப்பு: பிரேம்ஜி, திவதர்ஷினி, தீபா சங்கர், விளக்கு எண் முத்துராமன், சிஆர் ரஜித், சூப்பர்குட் சுப்பிரமணி, சுப்பிரமணியன் மாதவன், விது, போராளி திலீபன் மற்றும் பலர்
எழுத்து, இயக்கம்: கருப்பையா முருகன்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்பு: சி.கணேஷ்குமார்
இசை: ஜிகேவி
தயாரிப்பு: ‘பேட்லர்ஸ் சினிமா’ கருப்பையா முருகன்
பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்
கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்ததால், மனைவியை இழந்த விவசாயி சரவணன் (பிரேம்ஜி), தனது ஒரே மகளான பூமிகாவை (திவதர்ஷினி) நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் மகளுடன் சென்னைக்குக் குடி பெயர்கிறார். இங்கு வாடகைக்கு வீடு பிடிப்பது, மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்துவிடுவது போன்ற சவால்களை எளிதாகக் கடந்துவிடும் சரவணன், சினிமா போஸ்டர் ஒட்டும் வேலையில் சேர்ந்து, அந்த வருமானத்தில் பிழைப்பை நடத்தி வருகிறார்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வெளியே வரும் சிறுமி பூமிகா, தனது ‘ஒண்ணுக்கு இருக்கும் இடத்தில்’ ரத்தம் வருவதாக அப்பாவிடம் கூறுகிறார். அதை வைத்து, தன் மகள் பூப்பெய்தி விட்டதாக நினைக்கும் சரவணன், ஆலோசனை பெறுவதற்காக அவரை அழைத்துப்போய் ஒரு பெண் மருத்துவரிடம் (தீபா சங்கர்) காட்டுகிறார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பூப்பெய்தவில்லை என்றும், அவருக்குத் தெரியாமலே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார். நிலைமையைப் புரிந்துகொள்ளும் சிறுமி பூமிகா, தனக்கு நேர்ந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது; அதற்கு தன்னை சீரழித்த குற்றவாளியைக் கண்டுபிடித்து, அவனை கொலை செய்ய வேண்டும் என்று உறுதியான குரலில் கூறுகிறார்.
மகளின் மனக்கொதிப்பைப் புரிந்துகொள்ளும் சரவணன், குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடித்து, அவரை கொலை செய்யும் முயற்சியில் இறங்குகிறார். சரவணன், பூமிகா என்ற சாமானிய மனிதர்களின் அசாத்தியமான இந்த கொலை முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா என்பதை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகளின் குமுறலாகவும், கோபமாகவும், போதனையாகவும் சொல்லுகிறது ‘வல்லமை’ திரைப்படத்தின் மீதிக்கதை.
சரவணன் கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்திருக்கிறார். வழக்கமாக லைட்டான கேரக்டரில் நகைச்சுவை ததும்ப மிகவும் மேலோட்டமாக நடித்துவிட்டு கடந்துசெல்லும் பிரேம்ஜி, இப்படத்தில், வழக்கத்திற்கு மாறாக, கனமான, சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க முன்வந்ததற்காகவே அவரை பாராட்ட வேண்டும். தாயில்லாப் பிள்ளையான தன் மகள் தான் உலகம் என்று வாழும் சராசரி தந்தையை இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். மகளின் நிலையை எண்ணி சோகத்தில் மூழ்குவது, பின்னர் எரிமலையாகப் பொங்குவது என மாறுபட்ட குணச்சித்திர நடிப்பால் கவர்கிறார்.
சிறுமி பூமிகாவாக திவதர்ஷினி நடித்திருக்கிறார். தனது பக்குவமான நடிப்பாலும், முதிர்ச்சியான பேச்சாலும் ரசிக்க வைக்கிறார்.
மருத்துவராக வரும் தீபா சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் வழக்கு எண் முத்துராமன், சக்கரவர்த்தி என்ற வில்லனாக வரும் சி.ஆர்.ரஜித் போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் சூப்பர்குட் சுப்பிரமணி. வில்லனின் கார் டிரைவராக வரும் சுப்பிரமணியன் மாதவன், பெட்ரோல் திருடன் பாபுவாக வரும் விது, பள்ளிக்கூட பியூனாக வரும் திலீபன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார் கருப்பையா முருகன். பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற, ஆபத்தான சூழலில் வாழும் தற்கால அவலத்தை படத்தில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறுமிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அனுபவிக்கும் வலியை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். திரைக்கதையை இன்னும் செதுக்கியிருந்தால், படத்தை கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஜிகேவியின் பின்னணி இசை, சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு, சி.கணேஷ்குமாரின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் கதைக்கு ஏற்பவும், பட்ஜெட்டுக்கு ஏற்பவும் பயணித்துள்ளன.
‘வல்லமை’ – ’எளியவன் நிமிர்ந்தால் வலியவன் அழிவான்’ என்ற கருத்தை கதையோடு சொல்லும் படம்; பார்க்கலாம்!
ரேட்டிங்: 2.5/5