வலிமை – விமர்சனம்
நடிப்பு: அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா மற்றும் பலர்
இயக்கம்: ஹெச்.வினோத்
தயாரிப்பு: போனிகபூர்
பாடலிசை: யுவன் ஷங்கர் ராஜா
பின்னணி இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: நீரவ் ஷா
போதைப்பொருளைக் கடத்தி சப்ளை செய்யும் சமூகவிரோதக் கும்பலைப் பிடிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தீவிரமாய் முயலுகையில், அந்த கும்பல் அவரது தம்பியையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தி தப்பிக்க நினைத்தால் என்ன ஆகும் என்பதுதான் ‘வலிமை’ படத்தின் கதைக்கரு.
கொலம்பியாவில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் மூட்டை மூட்டையாக கப்பலில் வருகிறது. வழியில் புதுச்சேரி கடலில் திருட்டுத்தனமாக சில மூட்டைகள் இறக்கப்பட்டு, அவை சென்னைக்கும் கடத்தப்படுகின்றன. இதை அறிந்து காவல்துறையினர் அங்கு செல்வதற்குள், பைக்கில் வரும் சில இளைஞர்கள் – பைக் ரேசர்கள் – அதை களவாடி தப்பிச்சென்று விடுகிறார்கள்.
சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் அந்த போதைப்பொருள் பிரித்து சப்ளை செய்யப்படுகிறது.. இதனைத் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள், கொலைகள் அடிக்கடி நிகழ்கின்றன. மாநகரில் பதற்றம் பற்றிக்கொள்கிறது.
பதற்றத்தைத் தணிக்க – குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுக்கொடுக்க – சரியான காவல்துறை அதிகாரி ஒருவர் தேவை என சென்னை மாநகர காவல் ஆணையர் எண்ணும்போது, அவரது சிந்தனையில் பளிச்சென வருவது –
அஜித் குமார்…!
அஜித் குமார் மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். குற்றவாளிகளுக்கு லாடம் கட்டுவதும், அதேநேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்வதும் அவரது கேரக்டர். பாசமான அம்மா (சுமித்ரா), குடிகார அண்ணன் அச்யுத் குமார், பொறியியல் படித்துவிட்டு உருப்படியான வேலை கிடைக்காமல் திரியும் தம்பி ராஜ் அய்யப்பா, இழிவுபடுத்துவதையே பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் புகுந்த வீட்டாரிடம் சிக்கிச் சீரழியும் அக்கா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னைக்கு வரும் அஜித் குமார், மேன்சன் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞனை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அப்போது அந்த தற்கொலையின் பின்னணியில் கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ’பைக் ரேசர்’ கும்பலின் தலைவன் கார்த்திகேயா இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.
குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வாங்கித் தர முற்படும்போது அஜித் குமாரின் சொந்த வாழ்க்கையில் அவரது குடும்பத்தில் சோதனைகள் எட்டிப் பார்க்கின்றன. பாசமா, கடமையா என முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் அஜித் என்ன செய்கிறார்? குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்தது யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக்கதை.
வீரமும் விவேகமும் உள்ள காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் அஜித் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். முந்தைய படங்களிலிருந்து தனது சிகை அலங்காரத்தையும், முகத்தோற்றத்தையும் முற்றிலும் மாற்றி வசீகரிக்கிறார். அதிரடி ஆக்சன், குடும்ப செண்டிமெண்ட், நடனம் என அனைத்திலும் அலட்டிக்கொள்ளாத – பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பைக் ரேசிங் – பைக் சேசிங் காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். அண்ணன் – தம்பி பாசக் காட்சிகளில் நெகிழ வைத்திருக்கிறார்.
நாயகியாக வரும் ஹுமா குரேஷி, பெண் காவல் அதிகாரியாக அதிரடி ஆக்சனில் மாஸ் காட்டியிருக்கிறார். படத்தில் காதல் உள்ள போதிலும், டூயட் இல்லாதது ஆறுதல்.
பிரதான வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா தமிழுக்குப் புதுமுகம். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தவறான பாதைக்குத் திருப்பிவிடும் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரது கட்டுடல் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
அஜித்தின் அம்மாவாக சுமித்ரா பொருத்தமாக இருக்கிறார். அவர் காட்டும் தாய்ப்பாசமும், தன் இளைய மகன் ராஜ் அய்யப்பாவை நினைத்து அவர் உருகும் காட்சிகளும் கண் கலங்க வைக்கின்றன. சுமித்ராவின் இளம் வயது கேரக்டருக்கு அவரது நிஜமகள் உமாவை பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
அஜித்தின் தம்பியாக வரும் ராஜ் அய்யப்பா, போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ் ஆகியோரும், ஏனையோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்துள்ளார்கள்.
அஜித் குமார் பைக் சாகசப் பிரியர் என்பதாலும், அவரது படங்களில் குடும்ப செண்டிமெண்ட் ஒர்க்-அவுட் ஆகியிருப்பதாலும், இவ்விரு அம்சங்களையும் கலந்துகட்டி, பைக் ரேசிங் கொள்ளையர் மற்றும் அம்மா – மகன் பாசம், அண்ணன் – தம்பி பாசம் என்பவற்றை மையமாகக் கொண்டு கதை பண்ணி எளிதாக ஓ.கே. வாங்கியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். சண்டை காட்சிகளுக்காகவும், பைக் சாகச காட்சிகளுக்காகவும் அதிக அளவில் மெனக்கெட்டு அப்ளாசை அள்ளும் இயக்குனர், அதே அளவு கதை – திரைக்கதை அமைப்பதிலும் மெனக்கெட்டிருந்தால் பார்வையாளர்களின் வரவேற்பு வேற லெவலில் இருந்திருக்கும். படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.
யுவன் சங்கர் ராஜா இசையில் “வேற மாறி” பாடல் ஆடவும், “அம்மா” பாடல் உருகவும் வைக்கின்றன. பின்னணி இசையில் ஜிப்ரான் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு அருமை. ஆக்சன் காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் பிரமிக்க வைத்திருக்கிறார்.
’வலிமை’ – அஜித் ரசிகர்களுக்கும், ஆக்சன் பிரியர்களுக்கும் செம விருந்து!