முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்
இன்று இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா க்ட்சியைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.
வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த வாஜ்பேயி, அரசியலிலிருந்து ஒதுங்கி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகத் தொற்று, மார்புச் சளி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டதால் கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவர் குழு கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை நேற்று கவலைக்கிடமானது. உயிர்iகாக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது. எனினும், உடல்நிலை சீரடையாமல் மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாயின் உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.