“பசுமையை அழிக்கும் சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டத்தை உடனே கைவிடுக!” – வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சென்னை – சேலம் இடையே 277.3 கி.மீ. தொலைவுக்கு எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்திட தமிழக அரசு முனைந்துள்ளது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள எட்டு வழி பசுமைச் சாலைக்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் சுமார் 5,790 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்த அரசு ஆணைப் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றது.
சேலம் மாவட்டம், அரியானூரில் இருந்து சென்னை வண்டலூர் வரை அமைக்கப்படும் பசுமைச் சாலை 257 கிமீ விளைநிலங்களின் வழியாகவும், 13.30 கிமீ அடர்ந்த காடுகள் வழியாகவும் அமைய இருப்பதாகத் திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதனால், இந்த வழியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பசுஞ்சோலைகளும், விளைநிலங்களும், கஞ்ச மலை, ஜருகு மலை, கல்வராயன் மலை, தீர்த்த மலை, கவுதி மலை, வேடியப்பன் மலை உள்ளிட்ட 8 மலைகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஏரிகளும், லட்சக்கணக்கான மரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
இயற்கை வளங்களைச் சூறையாடி, பசுமையை அழித்து உருவாக்கப்படும் 8 வழிச்சாலைக்கு பசுமைச் சாலை என்று மோசடியான பெயரை மத்திய அரசும், தமிழக அரசும் சூட்டி இருப்பதுதான் முரண்பாடாக இருக்கின்றது.
சென்னை – சேலம் பசுமை வழி விரைவுச் சாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொண்டுள்ள மக்கள், தங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நிர்க்கதியாக நிற்கும் நிலை ஏற்படுகின்றதே என்று தன்னெழுச்சியாக இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகின்றார்கள்.
கருத்துக் கேட்புக் கூட்டங்களைக் கண்துடைப்புக்காக நடத்திவிட்டு, மோடி அரசின் உத்தரவைச் செயல்படுத்த துடிக்கின்ற தமிழக அரசு வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி, அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது.
சேலத்தில் கஞ்ச மலை, திருண்ணாமலையில் கவுந்திமலை, தருமபுரி, அரூர் ஆகிய இடங்களில் உள்ள மலைகளில், நிலத்திற்குக் கீழே புதைந்து கிடக்கும் கனிம வளங்களை வரைமுறையின்றிச் சூறையாடி, சென்னைத் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லும் வகையில்தான் கார்ப்பரேட் பெருநிறுவனங்களின் ஆதாயத்திற்காக சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்கின்றன என்று வெளிவரும் தகவல்கள் பொய்யானவை அல்ல.
விளைநிலங்களையும், வீடுகளையும் இழந்து, நாதியற்றவர்களாக குடும்பத்துடன் ஏதிலிகளாக சொந்த மண்ணில் அலையும் நிலை வருகின்றதே என்று கண்ணீரும் கம்பலையுமாக அழுது புரளும் மக்களை, குறிப்பாகப் பெண்களையும், வயதான முதியவர்களையும் மூர்க்கத்தனமாக காவல்துறையை ஏவி தாக்குதல் நடத்துவதும், கிராமம் கிராமமாக நள்ளிரவில் வீடு புகுந்து மக்களைக் கைது செய்து சிறையில் பூட்டுவது, அச்சுறுத்தி மிரட்டுவது போன்ற தமிழக அரசின் ஏதேச்சாதிகார பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
மதிமுக எந்த வளர்ச்சித் திட்டங்களுக்கும் எதிரானது அல்ல. ஆனால் வளர்ச்சி யாருக்கு? என்பதுதான் கேள்வி. பாதிக்கப்படும் மக்களின் கொந்தளிப்பையும், தவிப்பையும் புரிந்தும் புரியாதது போல கடந்த 11 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், பசுமைச் சாலைத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது ஜனநாயக நாட்டில் ஏற்புடையது அல்ல.
தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக அறப்போர் களத்தில் மத்திய, மாநில அரசுகளின் நாசகாரத் திட்டங்களை எதிர்த்துப் போராடும்போது காவல்துறை குண்டாந்தடி மூலம் அடக்கி, ஒடுக்கிவிடலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நினைப்பது எதிர்விளைவுகளைத்தான் உருவாக்கும்.
சேலம் – சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் 5 மாவட்ட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பசுமையை அழிக்கும் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்.
வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்களை கைது செய்து, சிறையில் அடைக்கும் கொடுமையை நிறுத்த வேணடும். இயற்கையைக் காக்கக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சேலம் பியூஸ் மானுஷ், மாணவி வளர்மதி போன்றவர்களை, சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.