வடக்குப்பட்டி ராமசாமி – விமர்சனம்
நடிப்பு: சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேஷு, தமிழ், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, ஜான் விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், ஜாக்குலின், கூல் சுரேஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: கார்த்திக் யோகி
ஒளிப்பதிவு: தீபக்
படத்தொகுப்பு: சிவனாண்டீஸ்வரன்
இசை: ஷான் ரோல்டன்
தயாரிப்பு: ’பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ டி.ஜி.விஷ்வ பிரசாத்
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்
”ஏண்டா டேய், சாமியே இல்லேன்னு சொல்லி, ஊருக்குள்ள சுத்திட்டுத் திரிஞ்சியே… அந்த ராமசாமி தானே நீ?” என்று ஒருவர் நக்கலாகக் கேட்க, “நா அந்த ராமசாமி இல்லே” என்று ‘அந்த’வுக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து தெனாவட்டாக பதில் சொல்லுவார் சந்தானம். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் டிரைலரில் இடம்பெற்ற இந்த உரையாடல், பெரியார் ஈ.வே.ராமசாமியை சந்தானம் வம்புக்கு இழுக்கிறாரோ என்ற சந்தேகத்தைக் கிளப்ப, சர்ச்சை சமூக ஊடகங்களில் வெடித்து, படக்குழு எதிர்பார்த்த கவன ஈர்ப்பு மிகப்பெரிய அளவில் படத்துக்குக் கிடைத்தது. இதோடுகூட, ‘டிக்கிலோனா’ வெற்றிப்படத்துக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் யோகியும் நடிகர் சந்தானமும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘ஏ1’ வெற்றிப்படத்துக்குப் பிறகு ’லொள்ளு சபா’ கூட்டணியான சந்தானம், மாறன், சேஷு மூவரும் மீண்டும் இணைந்துள்ள படம் ஆகிய சிறப்பு அம்சங்களும் கூடுதலாக சேர்ந்துகொள்ள, இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்க்கலாம்…
வடக்குப்பட்டி கிராமத்தில், சிறுவயதில், ராமசாமி (சந்தானம்) பானை உள்ளிட்ட மட்பாண்டங்கள் செய்து, விற்று, பிழைத்து வருகிறார். எவ்வளவு தான் உழைத்தாலும், இந்த தொழில் மூலம் தன் குடும்ப வறுமை தீரவில்லை என்ற விரக்தியில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்.
இதனிடையே, அந்த ஊரில் காட்டேரி இருப்பதாக நம்பும் மக்கள், அதை எதிர்த்து வீழ்த்த அஞ்சுகிறார்கள். இந்நிலையில், களவு போகும் ராமசாமியின் பானையால் காட்டேரியின் கதை முடிவுக்கு வருகிறது. அதற்கு காரணமான ராமசாமியின் பானைக்கு தெய்வசக்தி இருப்பதாக கருதும் மக்கள், அதை அம்மனாக பாவித்து வழிபடத் தொடங்கி விடுகிறார்கள். மக்களின் இந்த மூடநம்பிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ராமசாமி, தனது சொந்த நிலத்தில் அந்த பானையை வைத்து ஒரு கோயிலைக் கட்டி, அதன்மூலம் மக்களை ஏமாற்றி, பக்தியை வியாபாரப் பொருளாக்கி பணம் சம்பாதித்து வருகிறார்.
ஒரு கட்டத்தில், ராமசாமியின் கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரிக்க தாசில்தார் கதிரேசன் (தமிழ்) முயற்சிக்கிறார். அதற்கு ராமசாமி ஒத்துழைக்க மறுப்பதால், சீல் வைத்து கோயிலை மூட வைக்கிறார். மூடப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க ராமசாமி என்ன செய்கிறார்? என்ற கேள்விக்கு காமெடியும், கலகலப்புமாக விடை அளிக்கிறது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கடவுள் நம்பிக்கை இல்லாத, அதே நேரத்தில் மக்களின் மூட நம்பிக்கையை வைத்து அவர்களை ஏமாற்றுகிற நாயகன் ராமசாமி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருக்கிறார். நாயகன் என்பதற்கான பில்டப் – உதார் காட்சிகள் எதுவும் இல்லாமல், காமெடி ஹீரோவாக, கதையில் ஒரு கதாபாத்திரமாக வந்து, நகைச்சுவையை அழுத்தமாகப் பதித்து, வசனங்களில் தொடர் காமெடி சரவெடிகளைத் தெறிக்க விட்டிருக்கிறார். சந்தானத்திடம் இதைத் தான்… இதைத் தான் எதிர்பார்த்தோம் என்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள் ரசித்து சிரிக்கிறார்கள்.
காமெடியில் சந்தானத்துக்கு பக்கபலமாக முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் மாறனும், பூசாரி கதாபாத்திரத்தில் சேஷுவும் படம் முழுக்க அவருடன் வருகிறார்கள். அவர்கள் அடிக்கும் லூட்டிகள் திரையரங்கையே சிரிப்பில் அதிர வைக்கிறது. சேஷுவின் பரத நாட்டியத்தைப் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது எனும் அளவுக்கு அது அட்டகாசம்!
ஊர்ப்பெரியவர்கள் மூக்கையனாக வரும் ஜான் விஜய், காளையனாக வரும் ரவி மரியா மட்டுமல்ல, ராணுவ அதிகாரி மேஜர் சந்திரகாந்தாக வரும் நிழல்கள் ரவியும் கூட காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார்கள்.
முனுசாமியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர், தன்ராஜாக வரும் கூல் சுரேஷ், லட்சுமியாக வரும் ஜாக்குலின், இரண்டாம் பாதியில் வரும் நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் காமெடிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
வில்லனாக, தாசில்தார் கதிரேசனாக வரும் தமிழ் நெகட்டிவ் ரோல் செய்திருந்தாலும், வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் அவரும் தன் பங்குக்கு கிச்சுக்கிச்சு மூட்டியிருக்கிறார்.
நாயகியாக, கண் மருத்துவர் கயல்விழியாக வரும் மேகா ஆகாஷ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார். அவர் காமெடி பண்ணாவிட்டாலும், அவரை வைத்து மற்ற கதாபாத்திரங்கள் காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கார்த்திக் யோகி, சந்தானம் நாயகனாக நடிக்கும் படத்துக்கு வரும் ரசிகர்கள் எதை எதிர்பார்த்து வருகிறார்கள் என்பதை எவ்வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இந்தப்படமும் ஒரு சான்று. சந்தானத்திடம் ரசிகர்கள் அதிரடி ஆக்ஷனை எதிர்பார்க்கவில்லை; உள்ளத்தை உருக்கும் காதலை, கண்ணீரைப் பிழியும் சென்டிமென்ட்டை. மயிர்கூச்செறிய வைக்கும் திரில்லரை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், சந்தானம் தன்னோடு நடிப்பவர்களோடு சேர்ந்து படம் ஓடுகிற இரண்டரை மணி நேரமும் காமெடி வெடிகளைக் கொளுத்திப் போட்டு நம்மை வயிறு குலுங்க, வாய்விட்டுச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதை தான். இந்த தெளிவு இயக்குநர் கார்த்திக் யோகிக்கு இருப்பதால் தான், ‘மக்களிடம் உள்ள கடவுள் நம்பிக்கையைப் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இளைஞன்’ என்ற இலகுவான ஒருவரிக்கதையை உருவாக்கி, ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு வகையில் காமெடி பண்ணும் வகையில் எல்லா கதாபாத்திரங்களையும் வடிவமைத்து, எல்லாக் காட்சிகளிலும் நகைச்சுவையைத் தூவி திரைக்கதை அமைத்து, சுவாரஸ்யமாக இப்படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். அதனால் வெற்றியும் பெற்றுள்ளார். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், படத்தின் டிரைலர் சந்தேகிக்க வைத்ததற்கு மாறாக, படத்தை பெரியாருக்கு எதிராகத் திருப்பாமல், வேறொரு ரூட்டில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். பாராட்டுகள். அவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இதுபோல் நல்ல நல்ல நகைச்சுவைப் படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கலாம்!
படம் கலர்ஃபுல்லாகவும், பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக ஒளிப்பதிவாளர் தீபக் கடுமையாக உழைத்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைப்பில் பாடல்கள் ஓ.கே ரகம். அவரது பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. சிவனாண்டீஸ்வரனின் படத்தொகுப்பு, ராஜேஷின் கலை இயக்கம் உள்ளிட்ட ஏனைய தொழில்நுட்ப அம்சங்களிலும் குறை ஏதுமில்லை.
‘வடக்குப்பட்டி ராமசாமி’ – ஏராளமான காட்சிகள் வெடித்துச் சிரிக்க உத்திரவாதம் தருவதால், குடும்பத்துடன் கண்டு களிக்கத் தக்க தரமான காமெடி பெருவிருந்து!