‘வடசென்னை’ படத்தில் தனுஷூடன் இணையும் விஜய் சேதுபதி!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/07/0a1c-17.jpg)
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படத்திற்கான பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இப்படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
வடசென்னையில், தனுஷுடன் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்திற்காக சென்னை மத்திய சிறைச்சாலையை தத்ரூபமாக ‘செட்’ அமைத்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்த செட்டில் தான் படமாக்கி வருகிறார்கள்.
மூன்று பாகமாக வெளியாகவிருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தனுஷ் தயாரித்துவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் குழப்பத்தில் சமந்தா விலகினார். அதனால் சமந்தா கதாப்பாத்திரத்தில் நடிக்க அமலாபாலை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் வடசென்னை படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி சில நாட்களாக இணையத்தில் பரவியது. தற்பொழுது தனுஷ் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வடசென்னை படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறார் என்று ட்விட் செய்துள்ளார்.
தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் ‘ஜூனியர் ஆர்டிஸ்டாக’ நடித்தவர் விஜய்சேதுபதி. இப்பொழுது தனுஷூடன் முக்கிய ரோலில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் தயாரிப்பில் நானும் ரவுடிதான் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருந்தார்.
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் வடசென்னை என்பதால் எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது.