இன்றைய தலைமுறை தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் மனதின் இயல்பான தன்மைகளை இழந்து வருகிறது!
வாழை திரைப்படம் OTT இல் வெளியானபிறகு அவ்வளவு எதிர்வினைகளைக் காணமுடிகிறது. சொல்லி வைத்தாற்போல சிவனைந்தன் – டீச்சர் நேசம் பலருக்குப் பிடிக்கவில்லை. நம் நட்பு வட்டத்தில் குருகுலக் கல்வி கற்ற முதியவர்களா இருக்கிறார்கள் என்று ஒரு கணம் திகைக்கச் செய்கிறார்கள்.
ஆமாம் உண்மையில் உங்கள் 14 வயதில் நீங்கள் விரல் சூப்பும் குழந்தைகளாகவா இருந்தீர்கள்? டீச்சர் மேல் உங்கள் யாருக்கும் ஈர்ப்பே உண்டானதில்லையா? எனக்கென்னவோ பொங்குகிறவர்களில் பலர் இரண்டு வகையினராக இருக்கலாம் என நம்பத்தோன்றுகிறது. ஒரு வகை, சிவனைந்தனை விடவும் பதினாறு அடிகள் பாய்ந்த குற்றவுணர்வில் குறுகுறுப்பவர்கள். மற்றையவகை, தாம் படித்த காலத்தில் இப்படியொரு டீச்சரும் இல்லை; தன்னாலும் சிவனைந்தன் போல் இருந்திட முடியலையே வகை!
கட்டுப்பெட்டித்தனமான ஊரில் ஆளையே மூடும் கோழிக்கூடு போலப் பெரிய பர்தாவைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப்போன என் 14 வயதில் ஓர் ஆசிரியர் மேல் சிவனைந்தனுக்குப் போலவே எனக்கு ஒரு நேசமிருந்தது. எனது கைக்குட்டையை வேண்டுமென்றே அவரைத் தொட்டுப்பார்க்க வைத்து அவர் தொட்டதற்காகவே துவைத்துக் கழுவாமல் புத்தகத்தினுள் மறைத்துக் கொண்டிருந்திருக்கிறேன். அவர் ஊக்குவிப்பதற்காக மட்டுமே பள்ளியில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறேன். கோட்டம் மட்டத்தில் தெரிவான பிள்ளைகளை மாகாண மட்டங்களுக்கு அவர்தான் அழைத்துக் கொண்டு போவார் எனத் தெரிந்ததும் அவரோடு அந்த ஒரு நாள் பயணம் போகவேண்டும் என்பதற்காக கஸ்ட்டப்பட்டு வாசித்துப் படித்துக் கட்டுரை எழுதி தேசிய அளவு வரைத் தெரிவாகியிருக்கிறேன்.
கைக்குட்டையைத் திரும்பத் தந்து, யாரும் கேட்டால் டீச்சரது என்று சொல்லாதே உங்க அக்காவினது என்று சொல் என்பதில் அப்படியென்ன முரண், நம்பமுடியாத திகைப்பு? உண்மையில் அந்த ஆசிரியர் பாத்திரம் அவன் மனதில் உள்ளதைத் தெரிந்து கொண்டு கூப்பிட்டுப் புத்தி சொல்லியோ எச்சரித்தோ அவனை உடைத்து விடாமல் கவனமாக அவன் போக்கில் கையாள்கிறார். அவனை கண்டிக்கவேண்டிய எல்லையை அவன் நெருங்கவில்லை. அவனைக் கண்டித்திருந்தால் அவன் குழந்தை மனம் எவ்வளவு வெக்கித்துக் கூனி குறுகியிருக்கும். அவனால் அதே பால்யத் துடிப்போடு பள்ளி செல்ல முடியுமா? சிவனைந்தன் பால்யபருவத்தில் இருக்கிறான். வளரும் போது தன் மீதான நேசத்தை மதிப்பாக மாற்றிக்கொள்வான் என டீச்சருக்கு நன்றாகவே தெரியும். அப்படி உணரத் தெரிந்த டீச்சர் கதாபாத்திரம் தான் அது.
என் அனுபவத்தில், என் ஆசிரியருக்கு என் மனது புரிந்தது. என் படிப்பும், கல்வியில் ஆர்வமும் துடிப்பும் தடங்கல்படாதவாறும் அதேநேரம் என் பால்யத்தின் உணர்வை தனக்கு வசமாகப் பயன்படுத்திக் கொள்ளாமலும் மிக அழகாக அந்த நாட்களிருந்தன. பதினெட்டு இருபது வயதில் எனக்கே அவற்றை எல்லாம் எண்ணிப்பார்க்க கொஞ்சம் கூச்சமாக இருந்த அதேநேரம், “சேர் எவ்வளவு நல்லபடியாக என்னைக் கையாண்டுள்ளார்” என்று அவர் மீது மதிப்புக் கூடியது. வேறு சில ஆசிரியர்கள் அதிபர் அறை வரை இழுத்தோ, பெற்றோரைக் கூப்பிட்டு அடிவாங்கித் தந்தோ வாழ்வையே திசை மாறச் செய்திருப்பார்கள். ஏன் அந்த ஆசிரியரே கூட தன் வசத்துக்கு இழுத்து சீரழித்திருக்கவும் முடியும். ஆனால் உண்மையாக மனிதத்துவம் மேலோங்கிய ஆசிரியர் என்பதன் பொருளையும் மதிப்பையும் உணர்ந்தவர்கள் அவ்வாறு செய்வதில்லை.
இந்த அனுபத்தினாலாயிருக்கலாம் நான் உண்மையில் வாழை திரைப்படத்தில் சிவனைந்தன் டீச்சர் நேசத்தை ரசித்தேன். அதில் துளி விரசம் எனக்குத் தெரியவில்லை. அத்தகைய நேசத்தில் விரசம் இருக்காது. ஆனால் இங்கே பலரது கண்களிலும் இதயங்களிலும் அவ்வளவு கோளாறு. அது சரி, அழுகிற குழந்தைக்குப் பாலூட்டும் தாயின் முலையைக்கூட உற்றுப்பார்த்து உசுப்பேறும் மனிதர்கள் பார்வையில் நேசத்தின் வகைமைகளுக்குப் பொருளேது?
14 வயதில் நான் பார்த்து ஆசைப்பட்ட அந்த ஆசிரியரோடு இதோ இப்போது வரையிலும் என்னால் பேசமுடிகிறது. அதுவும் உயர்ந்த மதிப்போடு! சில நெருடலான பொழுதுகளில்கூட அழைத்து ஆலோசனை கேட்க முடிகிறது. அந்த மதிப்பு அவர் எனக்குப் பள்ளியில் பாடம் சொல்லித் தந்தததினால் மட்டுமில்லை, ஆசிரியர் என்ற சொல்லுக்குப் பொருளாய் இருந்ததற்கு, எனக்கும் என் வயதுக்கும் மதிப்பளித்ததற்கு!
இந்த தலைமுறை தொழில்நுட்பத்தின் தாக்கத்தினால் மனதின் இயல்பான தன்மைகளை இழந்து வருகிறது. இது உண்மை என்பதுபோல பெரியவர்களும் இளையோரைப் போல அல்லது இளையோராக காண்பித்துக் கொள்வதற்காக இயந்திரத்தனமாகவே அனைத்தையும் பார்க்கிறார்கள். அவர்களுக்கு 14 வயதும் புரியவில்லை 24 வயதும் தெரியவில்லை. கண்டபடி எழுதிக் குவிக்கிறார்கள். எதையோ எதனோடோ இழுத்துக் கோர்க்கிறார்கள்.
–Sharmila Seyyid