வாழை – விமர்சனம்

நடிப்பு: பொன்வேல், ராகுல், ஜானகி, திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல், பத்மன், ஜே.சதீஷ்குமார் மற்றும் பலர்

இயக்கம்: மாரி செல்வராஜ்

ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்

படத்தொகுப்பு: சூரியா பிரதமன்

இசை: சந்தோஷ் நாராயணன்

பேனர்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நவ்வி ஸ்டூடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்

தயாரிப்பு: திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்

வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ என தொடர்ச்சியாக மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜின் நான்காவது படம் என்பதாலும், “என் சிறுவயதில் நான் சந்தித்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறேன். நான் முதன்முதலாக இயக்க நினைத்திருந்த படம் இது தான்” என்று ஒவ்வொரு பேட்டியிலும் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறி வந்ததாலும், வெளியிடப்பட்ட பாடல்களும், டிரைலரும் பட்டையைக் கிளப்பியதாலும், பொது திரையரங்குகளில் ரிலீஸாகும் முன்பே படத்தைப் பார்த்த பாலா உள்ளிட்ட திரைப்பட இயக்குநர்கள் உணர்ச்சி வசப்பட்டு வாயடைத்து, கண்கலங்கி தவித்த வீடியோ க்ளிப்ஸ் வைரலானதாலும், ‘வாழை’ திரைப்படத்துக்கு தமிழ் திரைத்துறையினர், விமர்சகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது திரைக்கு வந்திருக்கும் இந்த ‘வாழை’ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

இது ஒரு பீரியட் ஃபிலிம். 1990களின் பிற்பகுதியில், தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் கிராமம், கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, இவற்றைச் சுற்றியுள்ள வாழைத் தோப்புகள், வயல்வெளிகள், நீர்நிலைகளில் இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

புளியங்குளத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் தான் கதையின் நாயகன். பெயர் சிவனணைந்தான் (பொன்வேல்). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவனது அப்பா, செங்கொடியைக் கையிலேந்தி போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்தவர், ஒருநாள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட, அவனது அம்மா (ஜானகி), அக்கா வேம்பு (திவ்யா துரைசாமி) ஆகியோர், ஊரிலுள்ள பிற விவசாயக் கூலித் தொழிலாளர்களோடு சேர்ந்து வாழைத் தோப்புகளுக்குச் சென்று, வாழைத் தார்களை கழுத்தொடிய தலையில் சுமந்துகொண்டு, வாய்க்காலிலும் வரப்பிலுமாக நெடுந்துரம் நடந்து வந்து, ரோட்டோரம் நிற்கும் லாரியில் ஏற்றிவிட்டு, ஒரு வாழைத் தாருக்கு சுமைகூலி வெறும் ஒரு ரூபாய் என்ற கணக்கில் கிடைக்கும் சொற்பக் கூலியைக் கொண்டு சிரம ஜீவனம் நடத்தி வருகிறார்கள்.

கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் சிவனணைந்தான், பள்ளி நாட்கள் போக, சனி, ஞாயிறு மற்றும் ஏனைய விடுமுறை நாட்களில் அம்மா மற்றும் அக்காவுடன் வேண்டாவெறுப்பாக வாழைத் தார் சுமக்கச் செல்கிறான். அவனது வகுப்புத் தோழனும், ஆருயிர் நண்பனுமான சேகர் (ராகுல்) உட்பட அக்கிராமத்தில் படிக்கும் ஏனைய பள்ளி மாணவர்களும் வாழைத் தார் சுமக்கும் வேலைக்கு ‘விதியே’ என சென்று, சொற்பக் கூலியை வாங்கிக் கொடுத்து குடும்பத்திற்கு உதவியாக இருக்கிறார்கள்.

வாழைத் தார் சுமக்கும் வேலை அறவே பிடிக்காத சிவனணைந்தான், படிப்பில் கெட்டிக்காரன் என்பதால் பள்ளியில் அவன் செல்லப்பிள்ளை. அவன் ரஜினி ரசிகனாக இருக்க, அவனது வகுப்புத் தோழனான சேகர் கமல் ரசிகனாக இருக்கிறான். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வது வாடிக்கையாக இருந்தாலும், இணை பிரியாத ஆருயிர் நண்பர்களாகத் திகழ்கிறார்கள். மேலும், சிவனணைந்தான், தனது வகுப்பு ஆசிரியையான பூங்கொடி டீச்சர் மீது இனம் புரியாத ஈர்ப்பும், அலாதியான பிரியமும் கொண்டிருக்கிறான். பூங்கொடி டீச்சர் ஒருநாள் தன் அம்மா போலவும், மறுநாள் தன் அக்கா போலவும் அழகாக இருப்பதாக சிலாகிக்கும் சிவனணைந்தான், அந்த டீச்சர் தவறவிடும் கைக்குட்டையை ரகசியமாக எடுத்து ஞாபகார்த்தமாக பத்திரப்படுத்திக் கொள்கிறான்.

இது இப்படி இருக்க, கஷ்டப்பட்டு வாழைத் தார் சுமந்து உழைத்தும் கைக்கும் வாய்க்கும் பத்தாத பரிதாப வாழ்க்கை வாழ்ந்துவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள், சுமைகூலியை ஒரு வாழைத் தாருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி, இரண்டு ரூபாயாகக் கொடுக்குமாறு கோரிக்கை வைக்கிறார்கள். இந்த கோரிக்கையை முதலில் ஏற்க மறுக்கும் வியாபாரி (ஜே.சதீஷ்குமார்), பின்னர் வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொண்டுவிட்டு, கூலித் தொழிலாளர்களை வேறு விதத்தில் வஞ்சிக்கிறான். அவன் செய்யும் வஞ்சகம் என்ன? அதனால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்ற கேள்விகளுக்கான விடைகளை பார்வையாளர்களின் நெஞ்சம் பதற, ஈரக்குலை நடுங்க விவரிக்கிறது ‘வாழை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் சிவனணைந்தானாக பொன்வேலும், அவனது உற்ற தோழன் சேகராக ராகுலும் நடித்திருக்கிறார்கள். கேமரா பயமோ, நடிக்கிறோம் என்ற பதட்டமோ சிறிதும் இல்லாமல், அசால்ட்டாக இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். பிரபல பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படித்த சிறுவர்கள் கூட, தங்கள் கதாபாத்திரங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டு, இந்த கிராமத்து சிறுவர்கள் அளவுக்கு இத்தனை சிறப்பாக, இயல்பாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. வாழ்த்துகள் தம்பிகளே!

சிவனணைந்தானின் அக்கா வேம்புவாக திவ்யா துரைசாமியும், போர்குணம் கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளி கனியாக கலையரசனும் நடித்திருக்கிறார்கள். உழைப்பினூடே இருவருக்கும் இடையே மெல்லுசாகத் தோன்றி வளரும் காதலை, இருவரும் தங்கள் யதார்த்தமான நடிப்பு மூலம் காவியம் ஆக்கியிருக்கிறார்கள்.

பூங்கொடி டீச்சராக அழகே அழகான நிகிலா விமல் நடித்திருக்கிறார். சமீபத்தில் நிகழ்ந்த வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தானொரு நடிகை என்பதையே மறந்து, DYFI இளைஞர்களோடு சேர்ந்து சேவையாற்றிய வகையில் அவர் மீது நமக்கு ஏற்கெனவே நல்ல மதிப்பு உண்டு. அது எந்த வகையிலும் கெடாமல், தன் மீது இனம் புரியாத ஈர்ப்புக் கொண்ட விடலைப்பருவ மாணவனை பக்குவமாகக் கையாளும் அருமையான கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் நிகிலா விமல். பாராட்டுகள்.

சிவனணைந்தான் மற்றும் வேம்புவின் அம்மாவாக ஜானகி நடித்திருக்கிறார். பாசம் ஒருபுறம், இல்லாமையாலும், குடும்ப பாரம் தாங்காமலும் ஏற்படும் கோபம் மறுபுறம் என இரண்டையும் கலந்துகட்டி நடிப்பில் வெளிப்படுத்தி, தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

வியாபாரியாக வரும் ஜே.சதீஷ்குமார், புரோக்கராக வரும் பத்மன் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்கள்.

இப்படத்தை மாரி செல்வராஜ் எழுதி இயக்கியிருக்கிறார். தனது முந்தைய படங்களில் சாதிய அவலத்தை சற்று தூக்கலாகவே பேசிய மாரி செல்வராஜ், இப்படத்தில் சாதி அரசியலைப் பேசாமல், உழைக்கும் கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலாளர்களின் அவலத்தையும், அவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவத்தையும் அப்பட்டமாக அதிரடியாகப் பேசியிருக்கிறார். வர்க்க சமூகத்தில் நிலவும் சுரண்டலின் உச்சக் கொடுமையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஒரு ரூபாய்க் கூலியை இரண்டு ரூபாயாக உயர்த்துவதற்கு வியாபாரி காட்டும் கடுமை உழைக்கும் மக்களை எப்படி காவு வாங்குகிறது என்பதை மனம் துடிக்கத் துடிக்க படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். ஏழ்மையானது ஒரு அம்மாவையே சொந்த மகனை எப்படி கொடுமைப்படுத்த வைக்கும் என்பதை சித்தரித்துக் காட்டியிருக்கிறார். பசிக்கு மகன் சாப்பிட்டானா என கேட்க வேண்டிய அம்மாவே பசி மயக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகனை அடித்துத் துரத்தும் அளவுக்கு வறுமையின் கொடுமை இருப்பதை – எந்த பூச்சும் இல்லாமல் – பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார். மாரி செல்வராஜ், தன்னுடைய வாழ்க்கை வலியை கண்ணீர் மல்க நமக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாமும் அதைப் பார்த்து கண்ணீர் விடுகிறோம். நம் அனைவரது கண்ணீரும் ஒன்று கலந்து, ஒருநாள் சாதியற்ற – வர்க்க பேதமற்ற சமுதாயம் படைக்கும் என நம்புவோம்.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை சார்ந்து பயணித்திருக்கிறது. குறிப்பாக, ஒப்பாரி பாடல் இதயத்தை கனக்கச் செய்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கிராமப்புற பசுமையையும், ஏழை மக்களின் எளிமையையும் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. விபத்துக் காட்சியை படமாக்கி பதட்டத்தை ஏற்படுத்திய விதத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.

‘வாழை’ – தமிழ் சினிமா வரலாற்றில் காலம் கடந்தும் வாழப்போகும் உன்னதமான திரைப்படம்! காணத் தவறாதீர்கள்!