வாத்தி – விமர்சனம்

நடிப்பு: தனுஷ், பாரதிராஜா, சம்யுக்தா, சமுத்திரக்கனி,  சாய்குமார், தணிகெல்லா பரணி, தொட்டபள்ளி மது, ஆடுகளம் நரேன், இளவரசு, ஷாரா மற்றும் பலர்

இயக்கம்: வெங்கி அட்லூரி

ஒளிப்பதிவு: யுவராஜ்

படத்தொகுப்பு: நவீன் நூலி

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

தயாரிப்பு: நாகவம்சி, சாய் சௌஜன்யா

வெளியீடு: செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ

பத்திரிகை தொடர்பு: ரியாஸ் கே.அகமது (வி4யு மீடியா)

அனைத்துச் சேவைகளிலும் உயர்ந்த சேவையாக கருதப்பட்ட கல்விச்சேவை, தற்போது ஒன்றிய அரசின் தனியார்மயம் மற்றும் தாரளமயக் கொள்கை காரணமாக சேவைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, கொள்ளை லாபம் கொழிக்கும் வியாபாரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, காசு கொடுத்தால் மட்டுமே வாங்கப்படக் கூடிய கடைச்சரக்காக மாற்றப்பட்டு வருகிறது. இந்த அவல நிலையை அறச்சீற்றம் கொண்டு தோலுரித்துக் காட்டும் மிக முக்கியமான படமாக வந்திருக்கிறது ‘வாத்தி’.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை, 1990களின் இறுதியில் நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. கல்வியை வியாபாரமாக பார்க்கும் வில்லனுக்கும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் நாயகனுக்கும் இடையிலான மோதல் தான் `வாத்தி` திரைப்படத்தின் மையக்கரு.

0a1b

“கல்வித் தந்தை” என்ற போர்வையில் கல்விக் கொள்ளையராகத் திகழ்பவர் திருப்பதி (சமுத்திரக்கனி). இவர் சொந்தமாக ஒரு தனியார் பள்ளி வைத்திருப்பதோடு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புத் தலைவராகவும் இருக்கிறார். ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, நம் பிள்ளை தனியார் பள்ளியில் தான் படிக்க வேண்டும். அங்கே தான் தரமான கல்வி கிடைக்கும். அங்கே படித்தால்தான் டாக்டராகவோ, இஞ்சினியராகவோ வர முடியும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு ஏற்பட வேண்டும்’என்ற நினைப்பு உள்ளவர் இவர். ’அரசாங்கப்பள்ளியில் படிப்பது கேவலம், அதில் படிக்கும் மாணவர்கள் பெரிய அளவில் முன்னேறிவிட முடியாது என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு வர வேண்டும்’ என்ற எண்ணம் உள்ளவர்.

எல்லோருமே தனியார் பள்ளியிலேயே படித்துவிட்டால் அரசுப்பள்ளிகளின் நிலை என்ன ஆகும்? எனவே நாங்களே அரசுப்பள்ளிகளை தத்து ஏடுத்துக்கொண்டு, எங்களிடம் உள்ள் ஆசிரியர்களை வைத்து நடத்துகிறோம் என திருப்பதி சொல்லி அரசுப்பள்ளிகளை கையகப்படுத்துகிறார். ஆனால், நல்ல அனுபவம் உள்ள ஆசிரியர்களை தனியார் பள்ளிகளில் நியமிப்பது, அதிகம் அனுபவம் இல்லாத புதிய ஆசிரியர்களை அரசுப்பள்ளியில் நியமித்து டம்மி ஆக்குவது என்பது தான் அவரது திட்டம்.

திருப்பதியின் தனியார் பள்ளியில் ஒரு உதவி ஆசிரியர் பாலமுருகன் (தனுஷ்). அவரை தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் இருக்கும் சோழபுரம் என்ற  கிராமத்தின் அரசுப்பள்ளியில் ஆசிரியராக திருப்பதி நியமிக்கிறார். இவர் அங்கே போய் பெரிதாக என்ன பண்ணிவிடப் போகிறார் என்ற  எண்ணத்தில்தான் பாலமுருகனை திருப்பதி நியமிக்கிறார். ஆனால் பாலமுருகன் அங்கே போய் என்ன என்ன தரமான சம்பவங்களை செய்கிறார்? திருப்பதிக்கு எப்படி ஆப்பு வைக்கிறார்? என்பது ‘வாத்தி’ படத்தின்  மீதிக்கதை.

‘தனியார் மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை ‘வாத்தி’ திரைப்படம் அச்சு அசலாய் படம் பிடித்துக் காட்டியுள்ளது. கல்வி குறித்தும், சமத்துவம் குறித்தும் படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படத்தின் மொத்த பலமும் தனுஷாகத் தான் இருக்கிறார். தன் சிறப்பான நடிப்பால் ஒற்றை ஆளாய் படத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார். கதையில் மாணவர்களை படிக்க வைப்பதற்கு புது விதமான யோசனைகளுடன் தனுஷ் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஆசிரியராக வரும் தனுஷ், சக ஆசிரியையாக வரும் சம்யுக்தா ஆகியோரின் ஜோடி பொருத்தம் அற்புதம்.

0a1c

வில்லனாக வருகிறார் சமுத்திரக்கனி . இதுவ்ரை அவரை நாயகனாக , குணச்சித்திர கதாபாத்திரமாக பார்த்த நமக்கு வில்லனாகப்பார்க்க சங்கடமாக இருந்தாலும் நடிப்பில் அவர் எந்தக்குறையும் வைக்கவில்லை. கார்ப்பரேட் வில்லன் போல கல்விக்கு எதிரான வில்லனாக காட்டப்பட்டு இருக்கிறார்.

பாரதிராஜா ஒரே ஒரு சீனில் கெஸ்ட் ரோலில் வருகிறார். அருமையான நடிப்பு. ஆடுகளம் நரேன் நல்ல குணச்சித்திர நடிப்பு , ஊர் தலைவராக வரும் சாய் குமார், மாணவராக வரும் கென் கருணாஸ் உள்ளிட்ட அனைவரும் கச்சிதம்.

வழக்கமான கமர்சியல் திரைப்படத்திற்கான அம்சங்களுடன் ’வாத்தி’ படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கியிருந்தாலும், அதில் சிந்தனையைத் தூண்டும் அருமையான கருத்துக்களை விரவி இருப்பது சிறப்பு. தெலுங்கு இயக்குனர் என்பதாலோ என்னவோ, தெலுங்கு பட சாயல் தூக்கலாக இருப்பது நெருடல்.

ஜீ.வி. பிரகாஷின் இசையில் ‘வா வாத்தி’, ‘நாடோடி மன்னன்’ ஆகிய பாடல்கள் முத்திரை பதித்திருக்கின்றன. இயக்குனரின் கதை சொல்லும் உத்திக்கு ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் பக்கபலமாக இருந்திருக்கின்றன.

’வாத்தி’ – வரவேற்போம்!