வான் மூன்று – விமர்சனம்

நடிப்பு: ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் மற்றும் பலர்

இயக்கம்: ஏஎம்ஆர் முருகேஷ்

ஒளிப்பதிவு: சார்லஸ் தாமஸ்

படத்தொகுப்பு: அஜய் மனோஜ்

இசை: ஆர்2 புரோஸ்

தயாரிப்பு: ‘சினிமாக்காரன்’ வினோத் குமார் சென்னியப்பன்

ஓடிடி தளம்: ஆஹா தமிழ்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (டிஒன்)

படத்தின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு, மூன்று வானமா? என்று குழப்பிக்கொள்ளத் தேவை இல்லை. காதலைத் தான் ‘வான்’ என்று கவித்துவமாக குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ஏஎம்ஆர் முருகேஷ். எனில், ‘வான் மூன்று’ என்றால் ‘காதல் மூன்று’ என்பதே பொருள்.

0a1d

சுஜித் குமார் (ஆதித்யா பாஸ்கர்) என்ற இளைஞனும், ஸ்வாதி (அம்மு அபிராமி) என்ற இளைஞியும் தனித்தனியே காதலில் தோல்வியுற்று, தற்கொலைக்கு முயன்று, சிகிச்சைக்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு இவர்களுக்கிடையில் முகிழ்ப்பது ‘காதல்-1’.

ஜோசுவா (வினோத் கிஷன்) என்ற கிறிஸ்துவ இளைஞன், ஜோதி மீனாட்சி (அபிராமி வெங்கடாச்சலம்) என்ற பார்ப்பனப் பெண்ணைக் காதலித்து, அவளது பார்ப்பனத் தந்தையின் எதிர்ப்பையும் மீறி, திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்பவன். மனைவி ஜோதி மீனாட்சி கருவுற்றிருக்கிறாளா என பரிசோதிக்க அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவள் மூளை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. பேரதிர்ச்சி அடைகிறான். படுக்கையில் இருக்கும் ஜோதி மீனாட்சி, தன் மீது கோபமாக இருக்கும் தன் அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். மாமனார் தன்னை அவமானப்படுத்துவார் என தெரிந்தும், மனைவி மேல் கொண்ட காதலால் அவளது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்கிறான் கணவன் ஜோசுவா. இது ‘காதல்-2’.

கணவன் – மனைவியாக நாற்பது ஆண்டுகள் இனிமையாக இல்லற வாழ்க்கை நடத்துபவர்கள் சிவம் (டெல்லி கணேஷ்) – சித்ரா (லீலா சாம்சன்) தம்பதியர். உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மனைவி சித்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏழு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. வசதியாக இருக்கும் மகன் பணஉதவி செய்ய மறுக்க, மனைவி மீது கொண்ட காதலால் அவளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பணத்துக்காக அலைகிறார், வயோதிக கணவரான சிவம். இது ‘காதல்-3’.

இந்த மூன்று காதல்களிலும் அடுத்தடுத்து என்ன நடக்கிறது? முடிவுகள் என்ன? என்பது ‘வான் மூன்று’ திரைப்படத்தின் மீதிக்கதை.

0a1c

இந்த மூன்று காதல் ஜோடிகளில் நம்மை அதிகம் ஈர்ப்பது, முதுமையிலும் அன்புமயமாக இருக்கும் சிவம் – சித்ரா ஜோடி தான். சித்ராவாக வரும் லீலா சாம்சன் சிறப்பான நடிப்பால் நம் மனசில் பசை போல் ஒட்டிக்கொள்கிறார். படுக்கையில் படுத்தபடியே முகபாவனையாலும் உடல்மொழியாலும் உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது கணவர் சிவமாக வரும் டெல்லி கணேஷ், தன் அனுபவ நடிப்பால் ஆர்ப்பாட்டமின்றி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அடுத்து நம்மை ஈர்ப்பது, இளம் தம்பதியான ஜோசுவா – ஜோதி மீனாட்சி ஜோடி. ஜோதி மீனாட்சியாக வரும் அபிராமி வெங்கடாச்சலம், தனக்கு மூளை செயலிழப்பு நோய் இருப்பது தெரிந்து கையறு நிலையில் கண் கலங்குவது நம்மை கலங்கடிக்கிறது. அதுபோல் தன் ஆடையிலேயே மலஜலம் கழித்துவிட்டு அவர் கதறுவது எந்த கல்நெஞ்சக்காரரையும் மனம் விம்மச் செய்துவிடும். அவரது கணவர் ஜோசுவாவாக வரும் வினோத் கிஷன், தன்னை அவமானப்படுத்தும் மாமனாரை மனைவிக்காக சந்திக்கும் காட்சியிலும், டெல்லி கணேஷுடன் உரையாடும் காட்சியிலும் நம் உள்ளத்தைத் தொடுகிறார்.

இதற்கு  அடுத்து தான், காதலில் தோல்வியுற்று, தற்கொலைக்கு முயன்று, சிகிச்சைக்காக வந்த இடத்தில் பரஸ்பரம் காதல் வயப்படும் சுஜித் குமார் – ஸ்வாதி ஜோடி. ‘96’ படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக நடித்து நல்ல அறிமுகமான ஆதித்யா பாஸ்கர் சுஜித் குமாராகவும், ‘அசுரன்’ படத்தில் அறிமுகமாகி மேலும் சில படங்களில் நடித்து பெயர் பெற்றிருக்கும் அம்மு அபிராமி ஸ்வாதியாகவும் வருகிறார்கள். இருவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். திறமைசாலிகளான இவர்களை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருந்தால் படத்தில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.

இந்தப்படம் ஓடிடிக்குத் தான், திரையரங்குக்கு அல்ல என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஏஎம்ஆர் முருகேஷ். அதனால் ரொம்ப நிதானமாக, சொற்ப கதாபாத்திரங்களை வைத்து, பெரும்பாலான காட்சிகள் மருத்துவமனையிலேயே நிகழ்வதுபோல் அமைத்திருக்கிறார். அதோடு தொலைக்காட்சி சீரியல் போல் உரையாடல்கள் மூலமே கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார். அதனால் படம் படுஸ்லோவாக நகருகிறது. என்றாலும், வெட்டு – குத்து, ஆபாசம் எதுவும் இல்லாமல் ஃபீல் குட் மூவியாக இப்படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவும், ஆர்2 புரோஸின் இசையும் இயக்குனரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

’வான் மூன்று’ – வித்தியாசமான காதல் கதைகளை விரும்பும் ரசிகர்கள் இதை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்!