“நேற்று வாடிவாசல்! இன்று நெடுவாசல்! நாளை கோட்டை வாசல் திறப்போம்!”
எங்கள் சோலைவனத்தை
பாலைவனமாக்க
வந்த காலனே!
கையாலாகாத அரசே!
உனக்கு கார்பன் தான்
வேண்டும் என்றால் ஒரு வழி சொல்கிறேன் கேள்!
பாராளுமன்றத்தின்
மைய மண்டபத்திலும்,
தமிழ்நாடு சட்டமன்றத்திலும் துளை போட்டு உறிஞ்சு!
விஷ வாயுக்கள் மொத்தமும்
அங்கே இருப்பதாக ஒரு அதிகாரப்பூர்வ செய்தி!
என் தோழனே!
அறிவியல் அறியா
உன் அப்பத்தா
உன்னிடம் வந்து
ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன என்று கேட்டால்…
ஒத்தை வரியில்
அவளுக்கு
அது தான் “எமன்”என்று சொல்!
சொல்லி விட்டு ஒதுங்கி நில்!
மிச்சத்தை அவள் பார்ப்பாள்!
எச்சைகளை அவள் தீர்ப்பாள்!
“முத்து” விளைந்த பூமியிலா
உன் சித்து வேலை?
இன்னுமா
புரியவில்லை! – இது
மண்ணுரிமைக்காக தன்
இன்னுயிர் போகும் வரை
முழக்கமிட்ட
“முத்துக்குமரன்”பிறந்த
புண்ணிய பூமியடா!
உன் நல்ல நேரம்
அவன் இன்றில்லை இங்கு!
இருந்திருந்தால் அறுபட்டிருக்கும்
உன் சங்கு!
பித்தம் தலைக்கேறிய உன் அரசின் சித்தம் கலங்கியிருக்கும்..
அவனில்லா விட்டால் என்ன?
அவன் தம்பிகள்
நாங்கள்! – ஆடுவோம்
அவன் வழியில் ஆட்டம்!
பின்னங்கால் பிடறி விழ நீ எடுப்பாய் ஓட்டம்!
எங்கள் இனத்தின் எல்லா
வாசலையும் அடைத்துப் பார்க்கிறாய்!
நீ அடைக்க அடைக்க
நாங்கள் திறப்போம்!
நீ ஒரு வாசல் அடைத்தால் நாங்கள் பல வாசல் திறப்போம்!
நேற்று வாடிவாசல்!
இன்று நெடுவாசல்!!
நாளை ………
…………கோட்டை வாசல்!!!
எம் மண்ணுக்கான உரிமை போராட்டத்தில் பங்கெடுக்க
முடியா வலியுடன்….
அயலகத்திலிருந்து
இராம.இளவழகன்