உயிர் தமிழுக்கு – விமர்சனம்
நடிப்பு: அமீர், சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ஆனந்த்ராஜ், ராஜ்கபூர், சரவண சக்தி, மாரிமுத்து, கஞ்சா கருப்பு மற்றும் பலர்
இயக்கம்: ஆதம் பாவா
ஒளிப்பதிவு: தேவராஜ்
படத்தொகுப்பு: அசோக்
இசை: வித்யாசாகர்
தயாரிப்பு: மூன் பிக்சர்ஸ்
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
சமகால அரசியல் இழிவுகளை நையாண்டி செய்து, பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் தமிழ் திரைப்படங்களை ரசிப்பதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதனால் தான் அத்தகைய திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்து வெற்றிப்படங்களாகவும் அமைந்து விடுவது உண்டு. இதற்கு உதாரணமாக சோவின் ‘முகமது பின் துக்ளக்’, மணிவண்ணனின் ‘அமைதிப்படை’ உள்ளிட்ட பல திரைப்படங்களைச் சொல்ல முடியும். அந்த வரிசையில், அரசியல் நையாண்டியோடு காதலையும் கலந்த கதம்பத் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது, இயக்குநர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம்.
’உயிர் தமிழுக்கு’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, தமிழ்மொழி மீதான பற்றினை பிரகடனம் செய்யும் தீவிர முழக்கம் போல் தானே தெரிகிறது. இந்த படத்தின் கதைப்படி அப்படி இல்லையாம். தமிழ் என்ற பெயருடைய கதாநாயகியைக் காதலிக்கும் நாயகன் அவள் மீது உயிரையே வைத்திருக்கிறான் என்பது தான் படத்தின் தலைப்பின் பொருளாம்.
படத்தின் தலைப்பின் பொருளே இவ்வளவு வேடிக்கையாக இருந்தால், படத்தின் கதை எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்? பார்க்கலாம்…
கேபிள் டிவி தொழில் செய்து வருபவர் நாயகன் பாண்டியன் (இயக்குநர் அமீர்), ஆளும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். அவர் நாயகி தமிழை (சாந்தினி ஸ்ரீதரன்) கண்டதும் காதல் கொள்கிறார். நாயகி தமிழோ எதிர்க்கட்சியைச் சேர்ந்த சைதாப்பேட்டை எம்.எல்.ஏ பழக்கடையாரின் (ஆனந்த்ராஜ்) மகள்.
தமிழ் வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுகிறார். எப்படியாவது அவரது காதலைப் பெற வேண்டும் என்று நினைக்கும் பாண்டியன், தமிழுக்கு எதிராக தானும் தேர்தல் களத்தில் குதிக்கிறார். ஆனால், பிரசாரத்தின்போது தமிழ்மொழியைப் பற்றி புகழ்ந்து பேசுவது போல், ஜாடைமாடையாக நாயகி தமிழைப் பற்றி அவரது காதுபட பேசி, அவரது கவனம் ஈர்க்கிறார். அந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பாண்டியன் வெற்றி பெற்று வார்டு கவுன்சிலர் ஆவதோடு, தமிழின் காதலர் ஆவதிலும் வெற்றி பெறுகிறார்.
ஆனால், பாண்டியன் – தமிழ் காதலுக்கு, தமிழின் அப்பாவான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ பழக்கடையார் முட்டுக்கடை போடுகிறார். இதனால், பாண்டியனுக்கும், பழக்கடையாருக்கும் இடையே பகை ஏற்படுகிறது.
இந்த நிலையில், பழக்கடையார் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட, அந்த கொலைப்பழி பாண்டியன் மீது விழுகிறது. தமிழும் தனது அப்பாவை கொலை செய்தது பாண்டியன் தான் என்று நம்பி அவரை வெறுக்கிறார். ஜெயிலுக்குள் தள்ளுகிறார்.
ஜாமீனில் வெளியே வரும் பாண்டியன், தமிழின் அப்பா பழக்கடையார் எம்.எல்.ஏ.வாக இருந்த சைதாப்பேட்டை தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் போட்டியிடுவதை அறிந்து, அவரை எதிர்த்து தானும் போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றது யார்? எம்.எல்.ஏ பழக்கடையாரைக் கொலை செய்தது யார்? பாண்டியன் கொலையாளியா, நிரபராதியா? தமிழை பாண்டியன் கரம் பிடித்தாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு தற்கால தமிழக அரசியல் நிகழ்வுகளைக் கலந்து சிரிக்கச் சிரிக்க விடை அளிக்கிறது ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் பாண்டியனாக அமீர் நடித்திருக்கிறார். இதற்குமுன் முரட்டுத்தனமான ரவுடி வேடங்களில் திரையில் தோன்றியிருக்கும் அமீர், முதன்முறையாக காமெடியும் அரசியலும் கலந்த கமர்ஷியல் நாயகப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கேபிள் டிவி தொழில் செய்யும் எம்.ஜி.ஆர் ரசிகராக அறிமுகமாகி, மாவட்டச் செயலாளராக உயர்ந்து, அரசியல் வாழ்க்கை, காதல் வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திட்டமிட்டோ, தற்செயலாகவோ, ஆங்காங்கே ‘பருத்தி வீரன்’ ஹீரோவின் உடல்மொழி எட்டிப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
நாயகி தமிழ் வேடத்தில் சாந்தினி ஸ்ரீதரன் நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். அழகாக சிரிக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். எனினும், படத்தின் முதல் பாதியில் ஒல்லியான உடலமைப்புடன் தோற்றம் தந்தவர், இரண்டாவது பாதியில் சற்று கூடுதலாகவே பருமனாகக் காட்சி தருகிறார். உடலை ஒரே சீராக வைத்துக் கொள்வது, அவரது கேரியருக்கு நல்லது.
நாயகியின் அப்பாவாக, சைதாப்பேட்டை எம்.எல்.ஏ பழக்கடையாராக வரும் ஆனந்த்ராஜ், தலைவர் திருச்செல்வமாக வரும் ராஜ்கபூர், சுடலையாக வரும் இமான் அண்ணாச்சி, சேதுவாக வரும் சரவணசக்தி, டி.என்.எஸ்ஸாக வரும் மாரிமுத்து, பரமனாக வரும் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்திய ’ஆன்ட்டி இந்தியன்’ திரைப்படத்தை தயாரித்த ஆதம்பாவா, இந்த ‘உயிர் தமிழுக்கு’ மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சமகால தமிழக அரசியலில் நிகழ்ந்த சில வினோத சம்பவங்களை நினைவூட்டி நையாண்டி செய்வதோடு, ஒரு சுவாரஸ்யமான காதல் கதையையும் இணைத்து நகைச்சுவையாகவும், போரடிக்காமலும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். திரைக்கதையிலும், காட்சி அமைப்புகளிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், இது மிகப் பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
வித்யாசாகரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. தேவராஜின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது.
‘உயிர் தமிழுக்கு’ – கண்டு களிக்கலாம்!