அமிதாப் நடிக்கும் முதல் தமிழ் படம் ‘உயர்ந்த மனிதன்’; இணைந்து நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே…” என்ற பாடலைக் கேட்டு உருகாத தமிழர் எவரும் இருக்க மாட்டார்கள். பிரசித்தி பெற்ற அந்த பாடல் இடம் பெற்ற படம் ‘உயர்ந்த மனிதன்’. சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நடித்த வெற்றிப்படம் அது.

தற்போது அதே தலைப்பில் புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது. தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ்  சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட்ஸ் இணைந்து மிக பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை, ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்.

இது பற்றிய அறிவிப்புக்கான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:

எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். நேற்று ட்விட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் ‘உயர்ந்த மனிதன்’. தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயக்குனர் தமிழ்வாணன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோருக்கு தான்.

இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது. 2  வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். அவர் படித்து முடித்த பிறகு, ‘கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும்’ என்றார். விளக்கத்தைக் கேட்ட பிறகு ‘கண்டிப்பாக நான் நடிக்கிறேன்’ என்றார்.

இந்த படம் பற்றி யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார்.

நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான். அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் ‘உயர்ந்த மனிதன்’. இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்த படத்துக்கு மிகப் பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவரகளுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது.

இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சீனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது.

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

இயக்குனர் தமிழ்வாணன் பேசுகையில், “எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று  விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம்.  தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை.

இந்த கதையை எழுதி முடித்தபோதே எஸ்.ஜே.சூர்யா சாரிடம் சொன்னேன். இந்த படம் பற்றி ஆசைப்பட்டது மட்டும் தான் நான். இதை இந்த அளவுக்கு கொண்டு போனது சூர்யா சாரும், தயாரிப்பாளர் சுரேஷ் கண்ணன் சாரும் தான். அமிதாப் பச்சன் சார், சூர்யா சார் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் கதை இது. படத்தை பற்றிய மற்ற தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கிறோம்” என்றார் இயக்குனர் தமிழ்வாணன்.

0a1a