உச்சத்துல சிவா – விமர்சனம்

ஒரே இரவில் நடக்கும் கதை இது.

இரவில், நட்டநடுரோட்டில் நாயகி நேகா ரத்னாகரன் மணக்கோலத்தில் ஓர் ஆணுடன் ஓடிவருகிறார். அவர்களை ஒரு ரவுடி கும்பல் துரத்தி வருகிறது. அப்போது, நேகாவுடன் வந்தவரை அந்த ரவுடி கும்பல் சுட்டு வீழ்த்துகிறது. அத்தோடு, ரவுடி கும்பல் வந்த காரும் விபத்துக்குள்ளாகி, அதில் உள்ள அனைவரும் இறக்கிறார்கள்.

அப்போது அந்த வழியே காரில் வரும் டாக்ஸி டிரைவரான நாயகன் கரண், இதையெல்லாம் பார்த்து பதைபதைத்து, நேகாவை தனது காரில் ஏற்றிக்கொள்கிறார். தனது அப்பாவின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், ரவுடிகளை வைத்து தன்னை கொலை செய்ய அவர் முயற்சி செய்கிறார் என்று தன் கதையை கரணிடம் விவரிக்கிறார் நேகா. இதனால், நேகாவை காப்பாற்றுவதற்காக அவரை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு சுற்றி வருகிறார் கரண்.

குண்டு பாய்ந்து இறந்துபோன நேகாவின் காதல் கணவரும், அவரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பலும் ஒரே இடத்தில் இறந்து கிடப்பதை பார்க்கும் போலீசார், இதற்கெல்லாம் யார் காரணம்? என்பதை அறிய தீவிர விசாரணையில் இறங்குகிறார்கள்.

நேகாவுடன் காரில் சுற்றி வரும்போதே, அவர் மீது கரணுக்கு காதல் வந்துவிடுகிறது. இந்நிலையில், இவர்கள் பயணிக்கும் காரில், நேகாவின் திருமணத்துக்கு உறுதுணையாக இருந்த அவரது அண்ணனும் ஏறிக் கொள்கிறார். இதையறிந்த நரேன் மற்றும் அவரது கூட்டாளிகள், இவர்களுடைய காரை துரத்துகிறார்கள். அப்போது, நேகாவின் அண்ணன் மட்டும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட நினைக்கிறார். அவரை ரவுடி கும்பல் துரத்தி சுட்டு வீழ்த்துகிறது.

இதையெல்லாம் பார்க்கும் கரண், இவர்களிடமிருந்து நேகாவை காப்பாற்ற, போலீசாரிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் சொல்ல முடிவெடுக்கிறார். ஆனால், நேகாவோ இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இறுதியில், நரேன் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து நேகாவை கரண் எப்படி காப்பாற்றினார்? போலீசிடம் செல்ல நேகா ஏன் தயங்குகிறார்? என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகன் கரண் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படம் இது என்பதால், அதை உணர்ந்து அவர் எதார்த்தமான  நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் இளமையாகத் தெரிகிறார்.

நாயகி நேகா ரத்னாகரனை சுற்றித்தான் கதையே நகர்கிறது. சென்டிமென்ட் காட்சிகள், உருக்கமான காட்சிகளில் எல்லாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நரேன் முத்திரை பதித்திருக்கிறார்.

படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்கள் காமெடி என்ற பெயரில் செய்யும் விஷயங்கள் கடுப்பைத்தான் வரவழைக்கின்றன. ஒருநாள் இரவிலேயே நடக்கும் கதையை விறுவிறுப்பாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குனர் ஜேப்பி. ஆனால், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாதது பெரிய குறை. கார் சேசிங், ரவுடி கும்பலிடம் இருந்து தப்பிப்பது இந்த மாதிரியான காட்சிகள் வைத்தாலே விறுவிறுப்பாகிவிடும் என்று தப்பு கணக்கு போட்டிருக்கிறார், பாவம்.

வித்யாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஹார்முக் ஒளிப்பதிவும் கை கொடுத்திருக்கிறது.

‘உச்சத்துல சிவா’ – அந்தரத்தில்!