‘பிக் பாஸ்’ கமலுக்கு மன்சூர் அலிகான் சவால்: “அஜித் – விஜய் உடன் மோத தயாரா?”

ஏபிகே பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘உறுதி கொள்’. ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
“கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி, அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்” என்றார் நடிகர் ஆரி.
இதனை மறுத்துப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும்” என்றார்.
அவர் மேலும் பேசுகையில், “சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் 100 நாள் வேலை திட்டம் மாதிரி, கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி.காரங்க ஏதோ 100 நாள் படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார்.
“பிக்பாஸ்’ நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறுநாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட். நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தினால், அதனுடன் கமல் மோத தயாரா? அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்தால் என்னஆகும்? கமல் யோசிக்க வேண்டும்” என்றார் மன்சூர் அலிகான்.
இந்த விழாவில் முனீஸ்காந்த், அபி சரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட ஏராளமான திரைக் கலைஞர்கள் பங்கேற்றனர்..
விழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் அய்யப்பன், பழனி, இயக்குனர் அய்யனார் வரவேற்றனர்..