ஆதிக்க மேல் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு: மக்களவையில் மசோதா நிறைவேறியது
அரசு நிறுவன உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்க மேல் சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன மசோதா மக்களவையில் நேற்று (08-01-2019) நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
“உயர் சாதியினர்” என கூறிக்கொள்ளும் ஆதிக்க மேல் சாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
இப்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. எனவே, ஆதிக்க மேல் சாதியினருக்கான இட ஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
இதன்படி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா 2019-ஐ மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். அதாவது அரசியல் சாசன சட்டத்தின் 15 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது. எனவே, இதில் திருத்தம் செய்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, “இந்த மசோதாவை எதிர்க்கிறோம். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. ஏழைகளின் நலனுக்காக போதுமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன” என்றார். அ.தி.மு.க. தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் ஆதிக்க மேல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்தன.
இதன்பின் மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் வாக்கெடுப்பை நடத்தினார். 323 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. 3 எம்.பி.க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.
இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இது சட்டமானால், பிராமணர், ரஜபுத்திரர் (தாகுர்), ஜாட், மராத்தா, பூமிஹர், வர்த்தக சாதியினர் உள்ளிட்டோர் பயனடைவர். இந்த மசோதாவின்படி, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் மற்றும் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெற முடியும்.