யுஐ – விமர்சனம்

நடிப்பு: உபேந்திரா, ரீஷ்மா நானய்யா, முரளி சர்மா, அச்யுத் குமார், ஓம் சாய் பிரகாஷ், பி.ரவி சங்கர், சது கோகிலா மற்றும் பலர்
இயக்கம்: உபேந்திரா
ஒளிப்பதிவு: எச்.சி.வேணுகோபால்
படத்தொகுப்பு: விஜய்ராஜ் பி.ஜி
இசை: பி.அஜனீஷ் லோக்நாத்
தயாரிப்பு: லஹரி பிலிம்ஸ் & வீனஸ் ர்ண்டர்டெயினர்ஸ்
தயாரிப்பாளர்கள்: ஜி.மனோகரன், ஸ்ரீகாந்த் கே.பி, பௌமிக் கோண்டாலியா
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்
‘Ui’ என்பது ‘Universal inteligence’ (’யுனிவர்சல் இண்டலிஜன்ஸ்’) என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம்.
பிரபல திரைப்பட இயக்குநர் (உபேந்திரா) இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஒன்றை திரையரங்குகளில் பார்க்கும் சிலர் பித்து பிடித்தது போல் ஆகிறார்கள். சிலர் தைரியமான சில முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால், அந்த படத்தை ஒரு தரப்பினர் கொண்டாட, மற்றொரு தரப்பினர் படத்தை தடை செய்ய வேண்டும் என்று போராடுகிறார்கள். இது போதாது என்று முன்னணி திரைப்பட விமர்சகர் (முரளி சர்மா) அந்த படத்தை நான்கு முறை பார்த்த பிறகும் விமர்சனம் எழுத முடியாமல் திணறுகிறார். இதனால், அந்த படம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள முயற்சிக்கும் அவர், படத்தின் இயக்குநரை தேடிச் செல்ல, அவரது தேடலுக்கான விடை கிடைத்ததா? உபேந்திரா இயக்கிய அந்த படத்தின் கதை தான் என்ன? என்பது தான் ’யுஐ’ படத்தின் கதை.
அரசியலை நையாண்டியாக மட்டும் இன்றி, ஃபேண்டஸியாகவும் இப்படத்தில் பேசியிருக்கும் இயக்குநர் உபேந்திரா, நாட்டில் மதம் மற்றும் சாதியை வைத்து மக்களை பிளவு படுத்தும் சக்திகள் பற்றி பேசுவதோடு, இயற்கை வளங்களை சுரண்டுவதால் எதிர்காலத்தில் எத்தகைய ஆபத்து ஏற்படும் என்பதையும் தனது கற்பனை உலகத்தின் மூலம் பார்வையாளர்களுக்கு உணரச் செய்திருக்கிறார்.
சத்யா மற்றும் கல்கி பகவான் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் உபேந்திரா, சத்யாவாக மென்மையாகவும், கல்கியாக மிரட்டலாகவும் நடித்திருக்கிறார். ஆரம்பக்காட்சியில் இரத்தம் தெறிக்க எண்ட்ரி கொடுப்பவர், எதிராளிகளை பந்தாடுவார் என்று எதிர்பார்க்கும் நேரத்தில், அவர்களிடம் தன் உடம்பை பஞ்சராக்கிக் கொண்டு மாஸ் காட்டி அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரீஷ்மா நானய்யா, பாடல் காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அம்சமாக படம் முழுவதும் வலம் வருகிறார்.
திரைப்பட விமர்சகராக நடித்திருக்கும் முரளி சர்மா, உபேந்திராவின் தந்தையாக நடித்திருக்கும் அச்யுத் குமார் மற்றும் ஓம் சாய் பிரகாஷ், சது கோகிலா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியலாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எச்.சி.வேணுகோபாலின் கேமராவை காட்டிலும், வி.எஃப்.எக்ஸ் கலைஞரும், கலை இயக்குநரும் அதிகம் உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது.
எழுதி இயக்கியிருக்கும் நடிகர் உபேந்திரா, உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை பேசியிருந்தாலும், எதையும் நேரடியாக பேசாமல் குறியீடாக காட்டி பேசியிருக்கிறார். அவரது இந்த முயற்சி வித்தியாசமானதாக இருந்தாலும் அதுவே விபரீதமாகவும் மாறியிருக்கிறது. இதனால், படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்வையாளர்கள் புரியாமல் புலம்புகிறார்கள்.
நாட்டில் ஒழுங்கான சாலைகள் இல்லை, ஆனால் விண்வெளி ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மக்களுக்கு சரியான உணவு இல்லை என்றாலும் ஆயுதங்களை வாங்கி குவித்துக்கொள்வது, இயற்கை வளங்கள் பலரது சுயநலத்திற்காக சூறையாடப்படுவது ஆகியவற்றால் எதிர்காலத்தில் மக்களின் நிலை எப்படி இருக்கும்? என்ற தனது கற்பனைக்கு உயிர் கொடுத்தாலும், அதை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இயக்குநராக உபேந்திரா சற்று தடுமாறியிருக்கிறார்.
‘யுஐ’ – ஒருமுறை பார்க்கலாம்.