‘உட்தா பஞ்சாப்’ வழக்கு: படைப்பாளிகளுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/06/0.jpg)
‘உட்தா பஞ்சாப்’ படத்துக்கு 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த தணிக்கைக் குழுவின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, படம் ஏ சான்றிதழுடன் வெளியாக அனுமதி அளித்துள்ளது.
இயக்குநர் அபிஷேக் சௌபே இயக்கத்திலும், இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இணைத் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் படம் ‘உட்தா பஞ்சாப்’. இந்தப் படத்தின் கதைக்களமானது, பஞ்சாப் மாநிலத்தின் போதைப் பொருள்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை படக்குழு அணுகியுள்ளது. அப்போது, படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், பஞ்சாப் மாநிலம் தொடர்புடைய சில சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்திருந்தனர். இதற்கு திரைப்படக் குழுவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தணிக்கைக் குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “ஃபேண்டம் பிலிம்ஸ்’ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.சி.தர்மாதிகாரி, ஷாலினி ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், நீதிபதிகள் கூறியதாவது:
இந்தத் திரைப்படத்தில் பஞ்சாப் தொடர்பான காட்சிகளையும், வசனங்களையும் நீக்கினால் கதையின் சாராம்சமே கெட்டுப் போய்விடும். ஒரு நபரையோ, இடத்தையோ மையமாகக் கொண்டு கதை அமைத்தால் திரைப்படத்தில் அந்த இடம் அல்லது நபர் காண்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில், முழுப் படத்தையும் நீக்க வேண்டும். இந்த விவகாரத்தில் திரைப்படத் தணிக்கை அமைப்பினர் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளத் தேவையில்லை. அவ்வாறு நடந்துகொண்டால், திரைப்படத் துறையில் சிறந்த படைப்பாளிகள் உருவாவது தடைபட்டுப் போகும். இன்றைய தலைமுறையினர் மிகவும் பண்பட்டவர்களாக இருக்கின்றனர். எனவே, ஆபாசமான படங்களுக்கு அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். அவ்வாறு ஆபாசமாக இருந்தால் அந்தத் திரைப்படம் ஓடாது. எனவே, இது போன்ற திரைப்படங்களுக்கு தேவையில்லாத இலவச விளம்பரத்தை தணிக்கைத் துறையினர் தேடித் தர வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான மறு விசாரணையை 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், ‘உட்தா பஞ்சாப்’ படத்துக்கு 13 வெட்டுகளுடன் ஏ சான்றிதழ் அளித்தது தணிக்கைக் குழு. இதுதொடர்பாக தணிக்கைக் குழு தலைவர் நிஹலானி கூறும்போது, ‘உட்தா பஞ்சாப்’ படத்துக்கு 13 வெட்டுகளுடன் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு அவர்கள் நீதிமன்றம் செல்கிறார்களா என்பது அவர்கள் கையில் உள்ளது. நாங்கள் தலைப்பை மாற்றச் சொன்னதாக அதன் தயாரிப்பாளர் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் ஒருபோதும் அப்படி கோரிக்கை வைக்கவில்லை. படத்துக்கு விளம்பரம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர் ஊடங்களை அணுகினார் என்றார்.
இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளித்துள்ளது. தணிக்கைக் குழுவின் 13 வெட்டுகளை ரத்து செய்து, அதற்குப் பதிலாக படத்துக்கு ஒரு வெட்டுடன் ஏ சான்றிதழ் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘உட்தா பஞ்சாப்’, ஜூன் 17 அன்று வெளிவருகிறது.