மராட்டிய முதல்வர் ஆனார் உத்தவ் தாக்கரே: மதச் சார்பின்மை திட்டத்தை ஏற்றார்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2019/11/0a1a-15.jpg)
தீவிர இந்துத்துவ கட்சியான சிவசேனை, ’மதச்சார்பின்மை’ கொள்கையை ஏற்க முன்வந்ததை அடுத்து அக்கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணி சார்பில் சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்வராக இன்று பதவியேற்றார்.
மும்பை சிவாஜி பூங்காவில் கோலாகலமாக நடைபெற்ற இதற்கான பதவியேற்பு விழாவில், சிவசேனை கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், சாஹாகான் பூஜ்பால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாலாசாகிப் தொராட், நிதின் ராவத் ஆகிய ஆறு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பகால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தனது நீண்டகாலக் கூட்டணிக் கட்சியான பாஜகவை விட்டு விலகிவந்துள்ள சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி நடத்துவதற்கு ‘குறைந்தபட்ச பொதுத் திட்டம்’ ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதில், ’மதச்சார்பற்ற முறையில் ஆட்சி நடத்தப்படும்’ என்பதும் ஒன்று. நீண்டகாலம் பாஜகவின் இந்துத்துவக் கொள்கைக் கூட்டாளியாக இருந்த சிவசேனை, தான் பங்கேற்கும் கூட்டணி ஆட்சி மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றும் என அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த கூட்டணி ஆட்சி நீடிக்கும் வரையிலாவது சிவசேனை இந்துத்துவ கோட்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்காது என்று நம்பப்படுகிறது.
ஆளும் கூட்டணியின் குறைந்தபட்ச பொதுத் திட்ட்த்தில் உள்ள முக்கிய அம்சங்கள்:
- விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம்.
- மொழி, சாதி மற்றும் மதத்தால் பாகுபாடு காட்டப்படாது.
- இந்திய அரசியல் சாசன கொள்கைகளின்படி அரசு செயல்படும்.
- விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், சிறுகுறு வியாபாரிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- உயர் சிறப்பு மருத்துவமனை எல்லா மாவட்டங்களிலும் அமைக்கப்படும்.
- பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மை அளிக்கப்படும்.
- அங்கன்வாடி மற்றும் ஆஷா சேவிக் ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்படும்.