மனித இனத்தை மொத்தமாய் அழிக்க கடல்கள் தயாராகி விட்டன: ஐ.நா எச்சரிக்கை
மானுடப் பரிணாமத்தை ஊட்டி வளர்த்த கடல்கள் தற்போது பூவுலகின் ஒட்டுமொத்த மானுட வாழ்க்கையின் மீது கொடுந்துயரத்தைக் கட்டவிழ்க்க தயாராக இருக்கிறது, ஏனெனில் கரியமில வாயு பூமியின் கடல்சார், புவிசார் சுற்றுச்சூழலை நாசம் செய்வது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக ஐநா வரைவு அறிக்கை எச்சரித்துள்ளது.
மாற்ற முடியாத சிலபல பேரழிவு மாற்றங்களை ஏற்கெனவே புவிவெப்பமடைதல் ஏற்படுத்தத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது, மீன்களின் எண்ணிக்கை கடல்களில் கடுமையாக குறைந்து வருகிறது, மகாபுயல்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் நூறு மடங்கு சேதங்கள் அதிகரித்துள்ளன. பலகோடி மக்கள் கடல் நீர்மட்ட அதிகரிப்பினால் குடிபெயர்ந்துள்ளனர், கிரையோஸ்பியர் என்று அழைக்கப்படும் பூமியின் உறைபனி மண்டலங்கள் மற்றும் கடல்கள் பற்றிய சிறப்பு அறிக்கையை தயார் செய்த ஐநா பன்னாட்டு வானிலை மாற்றக் குழு வெளியிட்டு எச்சரித்துள்ளது.
21ம் நூற்றாண்டு தொடங்கி இதுவரையிலும் இனிமேலும் உருகும் பனிச்சிகரங்கள் புதிய நீரை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அதிகம் கொடுத்துள்ளது அதே வேளையில் ஒன்றுமே கொடுக்கவில்லை என்றும் கூறலாம் என்கிறது இந்த அறிக்கை.
மானுட தொழில்சார் உற்பத்தி நடவடிக்கைகளில் பெரிய அளவில் குறைப்பு ஏற்படுத்தாமல் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று எச்சரிக்கும் இந்த அறிக்கை வடதுருவத்தில் மேற்பரப்பில் கிடக்கும் உறைபனியில் குறைந்தது 30% இந்த நூற்றாண்டு இறுதியில் உருகிவிடும் அபாயம் உள்ளது, அதில் அடைந்திருக்கும் கரியமில வாயு பில்லியன் டன்கள் கணக்கில் வெளியேறும்போது புவி வெப்பமடைதல் கட்டுப்பாட்டை மீறி கை மீறி சென்று விடும்.
900 பக்க விஞ்ஞான மதிப்பீடு ஓராண்டுக்குள் நான்காவது முறையாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இதில் காடுகளைக் காப்பது, உலக உணவு அமைப்பு முறைகளை நிர்வகிப்பது ஆகியவை அடங்கும்.
அதாவது மனிதன், தான் இந்த பூமியில் வாழும் முறையை மறுசிந்தனைக்குட்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்கிறது இந்த அறிக்கை.
சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள்தான் உலக இயற்கை எரிவாயு தரப்பிலான கரியமில வாயு வெளியீட்டில் 60% பங்களிப்பு செய்கின்றன. இதனால் கடும் கடல்சார் விளைவுகளை இந்த 4 கண்டங்களும் எதிர்கொண்டு வருகின்றன.
இந்தியா சூரியஒளி சக்தியை விரைவு கதியில் வளர்த்தெடுத்து வந்தாலும் நிலக்கரி சுரங்க நடைமுறைகளையும் இதோடு தொடர்ந்து வருகிறது.
இந்த நூற்றாண்டின் மத்தியில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முற்றிலும் ஒழிக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டாலும் அதன் உறுப்பு நாடுகள் திட்டத்தின் காலை வாரிவிடும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
க்ரீன்பீஸ் இயக்கத்தின் சர்வதேச ஆய்வாளர் லீ ஷுவோ, இவர் சீனாவின் நீண்ட கால சுற்றுச்சூழல் கொள்கையை அவதானித்து வருபவர், “சீனாவின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுச்சூழலியல் பிரச்சினைகளிலிருந்து விலகி வருகிறது” என்கிறார்.
இதற்குக் காரணம் அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தக போரினால் சீனாவின் பொருளாதாரம் சற்றே மந்தமடைந்துள்ளதே காரணம் என்கிறார் அவர்.
ஷாங்காய், நிங்போ, தாய்சூ மற்றும் பிற 6 முக்கிய கடற்கரை நகரங்கள் கடல் நீர்மட்ட அதிகரிப்பினால் அதிக சேதங்களை அடையும். 2100 வாக்கில் ஒரு மீட்டர் வரை கடல்நீர்மட்டம் அதிகரித்திருக்கும். இந்தியாவின் மும்பை மற்றும் பிற கடற்கரை நகரங்களும் கடும் பாதிப்படையும் என்கிறது இந்த ஐபிசிசி வரைவு அறிக்கை.
அமெரிக்க நகரங்களும் தப்ப வாய்ப்பில்லை நியூயார்க் மியாமி மற்றும் பிற கடற்கரையோர நகரங்களுக்கு சிக்கல்தான் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
2050ம் ஆண்டுவாக்கில் கடல்மட்டத்துக்குக் கீழ் இருக்கும் பெருநகரங்கள், சிறுதீவு நாடுகள் ‘பெரிய அளவிலான கடல்நீர் மட்டம் தொடர்பான நிகழ்வுகளை’ சந்திக்கும் என்கிறது இந்த அறிக்கை.
புவிவெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க உலக நாடுகள் முயற்சி செய்தாலும் கடல் நீர்மட்ட அதிகரிப்பு சுமார் 25 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து புலம்பெயர்தலை நிகழ்த்தும்.
இது குறித்து முன்னணி விஞ்ஞானி பென் ஸ்ட்ராஸ் கூறும்போது “100மில்லியனோ, 50 மில்லியனோ வெளியேறும் மக்கள் தொகையில் எண்ணிக்கை முக்கியமல்ல, ஆனால் மானுட துயரத்தை இவை கடுமையாக அதிகரிக்கும்” என்கிறார்.
“இன்றைய அரசியல் குழப்பங்கள், நிலையின்மைகளால் சிறிய அளவில் மக்கள் நாடு விட்டு நாடு புலம் பெயர்கின்றனர் ஆனால் கடல்நீர்மட்டம் அதிகரிப்பினால் பலகோடி மக்களின் நிலங்களை கடல் தின்று விடும்போது ஏற்படும் புலம் பெயரும் மக்கள் தொகையை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது” என்கிறார் பென் ஸ்ட்ராஸ்.
Courtesy: hindutamil.in