சுவாதியை வெட்டிய அரிவாளில் மர்மநபரின் ரத்தம்: தடய அறிவியல் சோதனை தகவல்!
சுவாதியை வெட்ட பயன்படுத்தியதாகக் கூறப்படும் அரிவாளில், சுவாதியின் ரத்தத்தோடு, இன்னொரு நபரின் ரத்தமும் இருப்பது தடய அறிவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது. இது சுவாதி கொலை வழக்கு விசாரணையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்ட பயன்படுத்தியதாக கூறப்படும் அரிவாள் கேட்பாரற்று கிடந்த நிலையில், போலீசார் அதை கைப்பற்றினார்கள். அதன்பின் இவ்வழக்கு தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
ரத்த கறையுடன் போலீசார் கண்டெடுத்த அரிவாளை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அரிவாளை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்திய நிபுணர்கள், அதில் இரண்டு பேரின் ரத்தம் படிந்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளனர். அவற்றில் ஒன்று, சுவாதியின் ரத்தம். இன்னொரு ரத்தம் யாருடையது என்று தெரியவில்லை.
இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாரை போலீசார் நேற்று காலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்து வந்தனர். அங்கு சிறை கைதிகளுக்கான வார்டில் அவரது உடலில் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, ‘ரத்த மாதிரி’ சேகரிக்கப்பட்டது.
ராம்குமாரின் ரத்த மாதிரி எதற்காக சேகரிக்கப்பட்டது என்பது குறித்து போலீஸ் தரப்பு கூறுகையில், “சுவாதியை வெட்ட பயன்படுத்திய அரிவாளில் 2 பேரின் ரத்தம் படிந்துள்ளது. அதில் ஒன்று சுவாதியின் ரத்தம் என்று தெரிய வந்துள்ளது. இன்னொரு ரத்தம் ராம்குமாருடையது தானா? என்பதை கண்டறிவதற்காக அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவல், சுவாதி கொலை வழக்கு விசாரணையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ராம்குமாரை போலீசார் பிடித்தபோது, அவர் உடம்பில் ரத்தக்காயம் எதுவுமில்லை. அவரை பிடித்த பிறகுதான், ராம்குமார் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டதாக போலீசாரும், போலீசார் தான் அறுத்தார்கள் என்று ராம்குமாரின் தந்தையும் கூறி வருகிறார்கள். மேலும், ஊடகங்களுக்கு போலீசார் கசியவிட்ட “ராம்குமாரின் வாக்குமூல”த்தில், சுவாதியை வெட்டிவிட்டு தப்பி வரும்போது தனக்கோ அல்லது வேறு யாருக்கோ அதே அரிவாளால் ரத்தக்காயம் ஏற்பட்டது என ராம்குமார் கூறியதாக தகவல் இல்லை.
எனவே, அரிவாளில் உள்ள இன்னொரு ரத்தம் யாருடையது என்ற கேள்வி பெரும் புதிராய் தற்போது எழுந்துள்ளது.