நெற்றியில் பொட்டு இருந்த விஜய்யின் புகைப்படம் மாற்றம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் எக்ஸ் பக்கத்தில்,  நெற்றியில் குங்குமப் பொட்டுடன் இருந்த விஜய் புகைப்படம் மாற்றப்பட்டு, தற்போது எந்த மத அடையாளமும் இல்லாத விஜய் படம் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, ஆகஸ்டு 22-ம் தேதி கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறும் என விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தவெக கட்சியின் ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் இடம் பெற்றிருந்த விஜய்யின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விஜய் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்த புகைப்படம் முகப்பு பக்கத்தில் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த புகைப்படம் மாற்றப்பட்டு, விஜய் கைகளை கும்பிட்டபடி இருக்கும் புதிய புகைப்படம் இடம் பெற்றுள்ளது. கட்சியின் கொடியும் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றது. அதேபோல அறிக்கை வெளியாகும் தாளிலும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

நெற்றியில் பொட்டு இருக்கும் புகைப்படம் பயன்படுத்தினால், குறிப்பிட்ட கட்சி சித்தாந்தத்தைக் கொண்டவர்கள், அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் என்றும், ஒரு சிலர் நெற்றியில் பொட்டு வைத்து அறிக்கை வெளியிடும் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என கூறி அதையும் அரசியலாக்கப் பார்ப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறுகின்றனர்.

எனவே எந்த சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காத வகையில், எந்த மத அடையாளமும் இல்லாத புகைப்படத்தை விஜய் அறிக்கையில் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

விஜய் பொட்டு வைத்திருந்த புகைப்படத்தை மாற்றியிருப்பது சமூக வலைதளங்களில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது.