தவெக முதல் மாநில மாநாடு: லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை கிராமத்தில் ‘வெற்றி கொள்கை திருவிழா’ என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று (அக்டோபர் 27) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இம்மாநாட்டில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது.

4 மணி அளவில் மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். பின்னர், கூட்டத்தின் மையத்தில் 800 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதையில் (‘ரேம்ப்’) நடந்து சென்றார். தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டை அணிந்து கொண்டார்.

பின்னர், மேடையின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், பெரியார், திருப்பூர் குமரன், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், வேலு நாச்சியார், தியாகி அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ராகுகாலம் தொடங்குவதற்கு முன்பாக, மாலை 4.24 மணிக்கு ‘தமிழன் கொடி பறக்குது’ என்ற கட்சியின் பாடல் ஒலிக்க, 100 அடி உயர கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியை விஜய் ஏற்றிவைத்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின.

தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் தலைமையில் விஜய் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

கொள்கை பரப்பு செயலாளர் தாகிரா, தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பேசினார்கள். பின்னர் விஜய் தன் கட்சிக் கொள்கைகளை விளக்கிப் பேசினார்.

இதன்பின், கட்சிக் கொள்கைகளை விளக்கும் காணொளியும், கட்சிக் கொடிக்கான காரணங்களை விளக்கும் காணொளிகளும் திரையிடப்பட்டன.

இறுதியில், மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி நன்றியுரை ஆற்றினார்.