ரா.கி.நகர் தேர்தல்: டிடிவி தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி!
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.
ரா.கி.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடந்தது. மொத்தமுள்ள 2,28,234 வாக்காளர்களில் 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகின.
இன்று அந்த வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் 50.32% வாக்குகளை பெற்றிருக்கிறார்.
அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது வாக்கு சதவீதம் 27.31%.
திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். இவரது வாக்கு சதவீதம் 13.94% .
கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும்.