கட்சியிலிருந்து ஒதுங்கினார் தினகரன்: “இதுவரை ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கு நன்றி!”

அதிமுக அம்மா அணியில் அமைச்சர்கள் அனைவரும் துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், “கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் நேற்றே ஒதுங்கிவிட்டேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றார்.

“துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்பதவியை எனக்கு அளித்தவர் பொதுச்செயலாளர் சசிகலா. அதனால், பதவியை ராஜினாமா செய்வதற்கில்லை. இது குறித்து சசிகலா முடிவெடுப்பார். எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் ஏமாற்றமும் இல்லை. இனியும் எனது அரசியல் வாழ்க்கை தொடருமா என்பதை இறைவன் தீர்மானிப்பார்” என்றார் தினகரன்.

இதன்பின்னர், “எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்தனை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார் தினகரன். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவுகள் வருமாறு:

இக்கட்டான சூழ்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.

ஏதோ ஒரு அச்சம் காரணமாக அமைச்சர்கள் என்னையும், குடும்பத்தினரையும் ஒதுங்கி இருக்கச் சொல்கிறார்கள். பொது வாழ்க்கையில் அச்சம் இருக்கக் கூடாது.

நான் ஒதுங்கி இருப்பதால் கட்சிக்கு நன்மை என்றால், ஒதுங்கியிருப்பதில் தப்பில்லை. அப்படி நினைக்கக் கூடிய முதிர்ச்சி உள்ளவன் நான்.

கட்சியும் ஆட்சியும் பலவீனம் ஆவதற்கு என்றும் நான் காரணமாக இருக்க மாட்டேன்.

எனக்கென்று ஒரு பொறுப்பு உண்டு என்ற எண்ணத்தில் சொல்கிறேன், எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்சி பிளவுபட்டு விடக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருங்கள்.

எனக்கு இதுவரை ஒத்துழைப்பு நல்கிய அத்தனை கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு தினகரன் ட்வீட் செய்துள்ளார்.