சசிகலாவின் அக்கா மகன் தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம்: உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி.தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில் ஒன்று டிடிவி.தினகரன் மீதான அமலாக்கப் பிரிவு வழக்கு. 1995, 1996ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தினகரனின் வங்கி கணக்குகளில் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தம்மை சிங்கப்பூர் குடிமகன் என கூறி தப்பிக்க முயன்றார் தினகரன். ஆனால் இதை அமலாக்கப் பிரிவு நிராகரித்து, அவருக்கு ரூ28 கோடி அபராதம் விதித்தது.

பின்னாளில் தினகரன், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, இந்த ‘சிங்கப்பூர் குடிமகன்’ விவகாரம் சர்ச்சையாகவும் வெடித்தது. அமலாக்கப் பிரிவு அபராதம் விதித்ததை எதிர்த்து அப்பீலுக்கு மேல் அப்பீல் போனார் தினகரன்.

இதற்கிடையே, 2011ஆம் ஆண்டு, தனக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டி, ஜெயலலிதாவினால் அ.திமுக.விலிருந்து நீக்கப்பட்டு, துரத்தியடிக்கப்பட்ட சசிகலா குடும்பத்தினரில் இந்த தினகரனும் ஒருவர்.

அப்போது தலைமறைவான தினகரன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் பொதுவெளிக்கு வந்து, சசிகலாவை ஆட்டுவிக்கும் சூத்திரதாரிகளில் ஒருவராக, அதிகார மையமாக, போயஸ் தோட்ட இல்லத்தில் தற்போது இயங்கி வருகிறார்.

இந்த நிலையில், தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு 20 ஆண்டுகளுக்கு முன் விதித்த ரூ28 கோடி அபராதத்தை உறுதி செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது.

அதிமுக தலைமை பதவியை சசிகலா வசப்படுத்திக்கொண்ட பிறகு, அவரது மன்னார்குடி குடும்பத்துக்கு விழுந்த முதல் அடி இது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.