“வியட்நாம் வீடு’ திரைப்படம் மூலம் சுந்தரம் எப்போதும் நினைவு கூரப்படுவார்!”
கதாசிரியரும், இயக்குநரும், நடிகருமான ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் மறைந்ததாக கேள்விப்படுகிறேன். அவருக்கு என் அஞ்சலி.
சிவாஜியின் திரைப்படங்களிலேயே நான் அதிகமுறை பார்த்தது ‘வியட்நாம் வீடா’கத்தான் இருக்கும். மானுடகுலம் பின்பற்ற வேண்டிய சில அடிப்படையான விழுமியங்களை ஒரு நடுத்தர வர்க்க மனம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிற பல காட்சிகளைக் கொண்ட திரைப்படம்.
மிகையான நடிப்பை அள்ளி வழங்குபவராக சிவாஜியின் மீது பொதுவான புகார் இருந்தாலும், அவர் எப்படி சிறந்த நடிகர் என்பதற்கான வலுவான அடையாளங்களில் ஒன்று இந்த திரைப்படம். தனது ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அசலான நபர் எவருடைய ஆளுமையையாவது கவனித்து நகலெடுப்பது சிவாஜியின் வழக்கம். அந்த வகையில் டி.டி.கே.கிருஷ்ணமாச்சாரியின் உடல்மொழியை இந்தப் பாத்திரத்திற்கு பயன்படுத்தியதாக சொல்வர்.
இத்திரைப்படத்தில் நடிக்கும்போது சிவாஜி நாற்பதுகளில் இருந்தார். ஆனால் அறுபது வயது முதியவரின் உடல்மொழி, பிராமண உச்சரிப்பு, தளர்வு, சோர்வு என்று எல்லா அடையாளங்களையும் துல்லியமாக பிரதிபலித்தார்.
இன்றைய இளைஞர்கள் இத்திரைப்படத்தைப் பார்க்காமலிருந்தால் சற்று பல்லைக் கடித்துக்கொண்டு ஒருமுறையாவது பார்த்து விடுங்கள் என வேண்டுகிறேன். அப்போதைக்கு ஒருவேளை கிண்டலடித்தாலும் உங்கள் ஆழ்மனதில் இறங்கி அந்தப் பாத்திரம் உங்களை தொந்தரவு செய்துகொண்டேயிருக்கும் என்பது உத்தரவாதம்.
வியட்நாம் வீட்டைப் போல சிவாஜியின் பல திரைப்படங்களுக்கு கதையெழுதியவர் சுந்தரம். கெளரவம் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர், தனது கடைசிக்காலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் அடைக்கலம் புகுந்தார்.
அவரது பெயரில் ஒட்டிக்கொண்ட முன்னொட்டைப் போலவே அத்திரைப்படத்தின் மூலமாக எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார்.
– சுரேஷ் கண்ணன்