ஐராவதம் மகாதேவன் பற்றி வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர்!

ஐராவதம் மகாதேவனை 1968-ல் முதல் முறையாகச் சந்தித்தேன்…

சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, ஹெல்சிங்கி பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த அஸ்கோ பர்போலா தான் எழுதிய சிறு புத்தகத்தை எனக்கு அனுப்பியிருந்தார்.

அச்செய்தி வேகமாகப் பரவியதால் பலரும் என்னிடம் அந்த நூலைக் கேட்டனர். அவர்களில் ஒருவராகத்தான் மகாதேவன் எனக்கு அறிமுகமானார். “உங்கள் வீட்டுக்கே வந்து ஒரு ஓரமாக உட்கார்ந்து படித்துவிட்டு புத்தகத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்றார்.

“சரி, வாருங்கள்” என்றேன்.

அவரைச் சந்தித்தபோது திராவிட, இந்தோ-ஆரிய எழுத்துகள் விஷயத்திலும் இந்தியக் கல்வெட்டு எழுத்துகளைப் படிப்பதிலும் இத்துறைகளைச் சார்ந்த சில வல்லுநர்களைவிட அதிகம் தெரிந்த மேதை என்பதைக் கண்டு மகிழ்ந்தேன். அதன்பிறகு, பலமுறை பேசியிருக்கிறோம். தொலைபேசியில் நீண்ட உரையாடல்களையும் அடிக்கடி நிகழ்த்தியிருக்கிறோம். அவர், அவருடைய மனைவி கௌரி, என்னுடைய தாயார் என்று நான்கு பேரும் நண்பர்களானோம்.

அவருக்கு இரண்டு விஷயங்களில் ஆர்வம் இருந்தது. பிராமி எழுத்து வடிவத்தைத் தமிழுக்கு மாற்றுவது, அதைத் தமிழ் பிராமி என்கிறார்கள். தென்னிந்தியா முழுக்க அது பரவலாகக் கிடைக்கிறது. இரண்டாவது, சிந்து சமவெளி நாகரிக காலத்து உருவங்களிலிருந்து தகவல்களை அறிவது. அந்த மட்பாண்டங்களிலும் செங்கல்களிலும் உள்ள முத்திரைகளிலிருந்தும் எழுத்துகளிலிருந்தும் பல தகவல்களை அவரால் பெற முடிந்தது.

அந்த எழுத்துகள் தமிழின் ஆரம்ப கால வரி வடிவம்தான் என்பதை அங்கீகரித்த பிறகு, அவற்றைப் படிப்பதும் பொருள் காண்பதும் அவருக்கு எளிதாகிவிட்டது. அந்த எழுத்துகள் சிலருடைய பெயர்கள், சில பரிசுகள் ஆகியவற்றைக் குறிப்பன என்று கண்டுபிடித்தார். கிறிஸ்து பிறப்புக் காலத்துக்குச் சில நூற்றாண்டுகள் முன்னதாகவே தோன்றிய தமிழ் எழுத்துகள் அவை. ஆட்கள், இடங்களின் பெயர்கள் கற்பாறைகளில் பல இடங்களில் பொறிக்கப்பட்டிருந்தன.

கல்வெட்டு எழுத்துகளைத் தேடும் பணியுடன் தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார் ஐராவதம் மகாதேவன்.

சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார். இந்தக் குறியீடுகள் இதைச் சொல்லலாம் அல்லது அதைச் சொல்லலாம் என்ற வகையில் அவர் எதையும் அணுகியதே கிடையாது. மொழியியல் இலக்கணங்களையும், ஆய்வுத்திறனையும் இணைத்தே பகுத்தாய்ந்து முடிவுக்கு வந்தார். மொழி, இனம் போன்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல் நடுநிலையில் நின்று ஆழ்ந்து ஆராய்ந்தார்.

எல்லா இலச்சினைகளையும் தொகுத்து அவற்றிலிருந்து பெறும் தகவல்களை அட்டவணைப்படுத்தினார். இதற்குச் சில ஆண்டுகள் பிடித்தன. அவைதான் கல்வெட்டு ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி, மானுடவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் இனி ஈடுபடுவோருக்கு மிகச் சிறந்த திறவுகோலாகப் பயன்படவிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறை 1977-ல் அதை நூலாக வெளியிட்டது. (The Indus Script: Texts, Concordance and Tables.)

ஆராய்ச்சிகளில் கிடைக்கும் இலச்சினைகளை ஆய்வு செய்வதிலிருந்து அது வெவ்வேறு மொழிகளில் எதுவாக இருக்கும் என்று ஆராயத் தொடங்கினார். ஹரப்பர்கள் திராவிட மொழி பேசுகிறவர்கள், தனி கலாச்சாரமும், மதமும் உள்ளவர்கள் என்று கண்டறிந்தார் ஐராவதம் மகாதேவன். பிற்காலத்தில் இந்தோ-ஆரியக் கலப்பும் கலாச்சார, மத உறவுகளும் ஏற்பட்டிருந்ததை ஹரப்பர்கள் காலத்துக்குப் பிந்தைய அகழ்வுகளில் கிடைத்தவற்றிலிருந்து கண்டு பதிவுசெய்தார். 19-வது, 20-வது நூற்றாண்டில் அரசு நிர்வாகத்திலிருந்த அறிஞர்களின் பாரம்பரியத்திலேயே அவரும் நிர்வாகத்திலும் ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கினார். அதாவது, அறிஞர்கள் பொறாமைப்படத்தக்க வகையில் மிகச் சிறந்த நிர்வாகியாகத் திகழ்ந்தார்.

ரொமிலா தாப்பர்

வரலாற்றாசிரியர்

Courtesy: tamil.thehindu.com