ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிர்வினையாக ட்ரெண்டாகும் ‘தமிழ்நாடு’ ஹேஷ்டேக்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ”தமிழ்நாடு’ என்பதைவிட ’தமிழகம்’ என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும்” என்று பேசியது சர்ச்சையான நிலையில், சமூக வலைதளங்களில் #TamilNadu என்ற ஹேஷ்டேக் மூலம் மக்கள் கருத்துகளைக் குவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கடந்த புதன்கிழமையன்று ஆளுநர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் துரதிர்ஷ்டவசமாக பின்னோக்கி இழுக்கும் அரசியல் நடைபெறுகிறது. அது ’நாம் திராவிடர்கள்’ என்று பிரபல்யபடுத்துகிறது. இந்த திராவிட கருத்தாக்கம் கடந்த அரை நூற்றாண்டாகக் கட்டமைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த தேசம் முழுமைக்குமான எதை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிக்கும். இது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறாக நிறைய தவறான, மோசமான கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இவற்றை உடைக்க வேண்டும். உண்மை மேலோங்க வேண்டும். தமிழ்நாடு என்பது பாரதத்தின் ஆன்மா. பாரதத்தின் அடையாளம். சொல்லப்போனால் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்” என்று பேசியிருந்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறியதை அடுத்து தமிழ் உணர்வாளர்களும், சங்கிகளுக்கு எதிரானவர்களும் ட்விட்டரில் #TamilNadu என்பதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
டி.ஆர்.பாலு கண்டனம்: ஆளுநரின் கருத்துக்கு திமுக மூத்த தலைவரும் எம்.பி. யுமான டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டின் 50 ஆண்டுகால திராவிட அரசியலை ஆளுநர் ரவி விமர்சித்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் ஆளுநர் மாளிகையில் இருந்து சொல்லப்பட வேண்டியவை அல்ல. பாஜக தலைமையகம் கமலாலயத்தில் இருந்து சொல்லப்பட வேண்டியவை. ஆளுநர் அடிக்கடி சனாதனம், ஆரியம், திராவிடம் என்று பேசுகிறார். அவ்வப்போது திருக்குறளையும் காலனி ஆதிக்கத்தையும் தொடர்பு படுத்துகிறார். அவரது கருத்துகள் ஆபத்தானவை. அவர் வர்ணாசிரமத்திற்கு இழுத்துச் செல்லும் நோக்கில் பேசுகிறார்.
இதுவரை இலைமறை காயாக பேசியவர் இப்போது நேரடியாக அரசியல் பேசுகிறார். பிரிவினை ஏற்படுத்தி குழப்பம் விளைவிக்கும் நோக்கில் அவர் இதுபோன்று விமர்சித்து வருகிறார். அரசியல சாசனப் பதவியில் அமர்ந்து கொண்டு தீவிர அரசியல் பேசுவது என்பது அந்த பதவியை கேலி செய்வது போன்றது. பல்வேறு பொருளாதார குறியீடுகளில் தமிழகம் முன்னேறிய இடத்தில் உள்ளது. ஜிடிபி பங்களிப்பில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. இவையெல்லாம் ஏன் ஆளுநருக்கு தெரிவதில்லை” என்று வினவியுள்ளார்.
உதயநிதி ட்வீட்: தமிழ்நாடு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு தனது தொகுதி பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனை #TamilNadu என்று பதிவிட்டுப் பகிர்ந்திருந்தார். நேரடியாக கருத்து தெரிவிக்காவிட்டாலும் ட்ரெண்டில் அவரும் இணைந்துள்ளார்.